Election bannerElection banner
Published:Updated:

`காந்தியைக் கொன்றவர்கள் வங்கத்தைக் கைப்பற்றக் கனவு காண்கிறார்கள்!’ - பா.ஜ.க-வைச் சாடிய மம்தா

மம்தா
மம்தா

`இந்தியாவில் ஆபத்தான இந்து மதப்போக்கை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது. இது நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது மட்டுமல்ல, நம் நாட்டுக்குப் பேரழிவையும் தரும்’ - மம்தா பானர்ஜி.

மேற்குவங்க மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியல்களம் சூடுபிடித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த வாரம் கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது, அமித் ஷா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.

இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்த மம்தா பானர்ஜி, கடந்த வாரத்தில் அமித் ஷா பேரணி நடத்திய பிர்பம் (Bhirbhum) மாவட்டத்தின் போல்பூரில், தக்பங்ளா (Dakbangla) முதல் சோவ்மதா (Chowmatha) வரை 4.5 கி.மீ மெகா பேரணியை நடத்தினார். பேரணி நடைபெற்ற சாலைக்கு இருபுறமும் மம்தா பானர்ஜி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு, அனைத்து முக்கியச் சந்திப்புகளிலும் 10-க்கும் மேற்பட்ட எல்.சி.டி (LCD) திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பேரணி ஏற்பாடுகளை அமைச்சர் இந்திரனில் சென் கவனித்துக்கொண்டார்.

மம்தா பானர்ஜி - அமித் ஷா
மம்தா பானர்ஜி - அமித் ஷா

போல்பூரில், நடைபெற்ற பிரமாண்டப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, ``காந்தியைக் கொன்றவர்கள், ரவீந்திரநாத் தாகூரை அவமதித்தவர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற முயல்கிறார்கள்.

விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி (Bidyut Chakrabarty) பா.ஜ.க ஆதரவாளர். அவர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத அரசியல் மூலம் புனிதமான அந்த நிறுவனத்தின் வளமான பாரம்பர்யத்தை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

காந்தி
காந்தி

பா.ஜ.க பொய்யான குப்பை அரசியலையும், ஆபத்தான பிளவு அரசியலையும் நம்புகிறது. சில தீய சக்திகள் மேற்கு வங்கத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் நம்மிடையே பிளவை உருவாக்க முயல்கிறார்கள். ஏஜென்சிகள் என்ற பெயரில் அவர்கள் எங்களை அச்சுறுத்துகிறார்கள். இன்று நான் அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், காந்தியைக் கொன்று ரவீந்திரநாத் தாகூரை அவமதித்தவர்களுக்கு முன் நாங்கள் தலைவணங்க மாட்டோம்.

மகாத்மா காந்தியையும், நாட்டின் பிற சின்னங்களையும் மதிக்காதவர்கள் `சோனார் பங்களா' (Golden Bengal) கட்டுவதற்கு முயல்கிறார்கள். ரவீந்திரநாத் தாகூர் ஏற்கெனவே பல தசாப்தங்களுக்கு முன்னர் 'சோனார் பங்களாவை' உருவாக்கியிருக்கிறார். நாங்கள் செய்ய வேண்டியது பா.ஜ.க-வின் இனவாதத் தாக்குதலிலிருந்து அந்த இடத்தைப் பாதுகாப்பதே’’ என்றார்.

அமித் ஷா குறித்து பேசிய மம்தா, ``அவர் ஒரு சாண்டா கிளாஸ். அவர் ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி, அந்த ஹோட்டலின் உணவைச் சாப்பிட்டுவிட்டு, ஏழைகளின் சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசுகிறார். அவர் மக்களை முட்டாளாக்குவது மட்டுமல்லாமல், இந்து மதத்தின் பெயரில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். இவர்கள் தாகூரின் தேசத்தில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். ரவீந்திரநாத் தாகூர் எங்கு பிறந்தார் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. வங்க மக்களின் கலாசாரம்கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு பிளவுபட்ட அரசியல் மட்டுமே தெரியும். தேர்தல் வருகிறது. எனவே, இந்தப் பருவகாலப் பறவைகள் வங்காளத்துக்கு வருகின்றன" என்று விமர்சித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கட்சிலியிலிருந்து வெளியேறியவர்கள் பற்றிப் பேசிய மம்தா, ``பா.ஜ.க ஒரு சில எம்.எல்.ஏ-க்களை வாங்கியிருக்கலாம். ஆனால், அவர்களால் ஒருபோதும் எனது கட்சியை வாங்க முடியாது. காவிக் கட்சியில் சேர்ந்த அந்த டி.எம்.சி தலைவர்கள், ஊழல் செய்ததாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

எதிர்க்கட்சிகளை உடைக்க, பணப்பைகளைப் பயன்படுத்தி டி.எம்.சி தலைவர்களைத் தங்கள் கட்சியில் சேர்க்க பா.ஜ.க முயற்சிக்கிறது. பா.ஜ.க போன்ற தீயசக்திகளுக்கு எதிராக நிற்குமாறு மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்துக் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் பின்பற்றுகிறோம். ஆனால், இந்தியாவில் ஆபத்தான இந்து மதப்போக்கை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது. இது நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது மட்டுமல்ல, நம் நாட்டுக்குப் பேரழிவையும் தரும். இப்போது, ​​அவர்கள் நமது வங்கத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். தவறான தகவல்களைப் பரப்புவதற்காக தினமும் மற்ற மாநிலங்களிலிருந்து தலைவர்கள் மேற்கு வங்கத்துக்கு வருகிறார்கள்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு