Published:Updated:

‘அது பேரணி இல்லை சர்க்கஸ்’ - மம்தாவை உசுப்பேற்றும் பா.ஜ.க

சத்யா கோபாலன்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், இறந்த நாளை தியாகிகள் தினமாக அனுசரித்துவருகிறார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தியாகிகள் தின பேரணி
தியாகிகள் தின பேரணி ( ANI )

தற்போது, மேற்கு வங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, கடந்த 1993-ம் ஆண்டு, அந்த மாநிலத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். அந்தப் பேரணியில் 13 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகங்களை நினைவூட்டும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 21-ம் தேதி மேற்குவங்கத்தில் ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்பட்டு பேரணி நடத்தப்படுவது வழக்கம்.

தியாகிகள் தின பேரணி
தியாகிகள் தின பேரணி
ANI

மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் இந்தப் பேரணியில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தவறாமல் வந்துவிடுவார்களாம். இன்று நடக்கும் பேரணியிலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மம்தா பானர்ஜி, இந்தப் பேரணியை வைத்து மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகள் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் கால்பதிக்காத பாஜ.க, தற்போது பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், மம்தாவின் பேரணி பற்றி விமர்சித்துள்ள அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், “ மம்தா நடத்துவது பேரணி இல்லை, சர்க்கஸ். பேரணியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து சுரண்டிய பணத்தை திரும்பத் தரவேண்டும். அவர்கள் திருப்பித் தராவிட்டால், நாங்கள் அவர்களைப் பேரணியிலிருந்து வெளியில் வர விடமாட்டோம்” எனப் பேசியுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
ANI

இவரின் பேச்சு சர்ச்சையாக, இதற்குப் பதிலளித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஃபிர்ஹாட் ஹகிம், “ திலீப் கோஷ் பேசியது வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது. அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திலீப் கைதுசெய்யப்பட வேண்டியவர்” என்று கூறியுள்ளார்.