Published:Updated:

`16 மாதங்கள்; இறுகும் சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கு?’ - மோடியைச் சந்திக்கும் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியப் பிரதமர் மோடியை நாளை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Modi - Mamata
Modi - Mamata ( File Photo )

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. இவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தங்கள் எதிர்க்கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களின் பழைய வழக்குகளைத் தூசி தட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் கைதானவர்கள்தான் காங்கிரஸின் ப.சிதம்பரமும், டி.கே சிவகுமாரும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இவர்களின் வரிசையில் அடுத்த டார்கெட்டாக உள்ளவர் மம்தா பானர்ஜி என்று தேசிய அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

Mamata Banerjee
Mamata Banerjee

சாரதா சிட் பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக சி.பி.ஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்டனர். அடுத்து மம்தா பானர்ஜிதான் என்கிறார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமித் ஷா தன் மாநிலத்துக்குள் வர கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மம்தா, மேலும் பிரதமர் மோடியையும் சரமாரியாகச் சாடினார். பதிலுக்கு மோடியும், அமித் ஷாவும் மம்தாவைக் கடுமையாக விமர்சித்தனர். இதனால் மேற்குவங்கத்தில் பா.ஜ.க -வுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

Vikatan

இந்நிலையில் நாளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார் மம்தா பானர்ஜி. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நாளை மாலை 4:30 மணிக்கு இவர்களின் சந்திப்பு நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் வழக்கு, மேற்கு வங்கத்தின் நிலை போன்ற பல விஷயங்கள் பற்றிப் பேசவே மம்தா, பிரதமரைச் சந்திக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Narendra Modi
Narendra Modi

இவர்கள் சந்திப்பின் போது துர்கா பூஜைக்கான வாழ்த்துகளையும் கொல்கத்தாவின் இனிப்பு மற்றும் பரிசுப் பொருள்களையும் மோடிக்கு வழங்க உள்ளார் மம்தா. பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் 16 மாதங்களுக்கு முன்பு சந்தித்து இருந்தனர். அதாவது மே 24, 2018-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொண்ட போது இருவரும் சந்தித்து இருந்தனர்.

Vikatan

மோடிக்கும், மம்தாவுக்கும் எப்போதும் ஒத்துவராது என்பதுதான் இந்திய அளவில் உள்ள பொதுவான கருத்து. சமீபத்தில் மேற்குவங்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர். ஆனால் பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்து ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார் மம்தா. இப்படியான சூழ்நிலையில் மோடி, மம்தாவின் சந்திப்பு தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Mamata Banerjee
Mamata Banerjee

``மக்களவை தேர்தலில் மோடிக்கு எதிராக எந்த மாதிரியான வார்த்தைகளை அவர் (மம்தா) உபயோகித்தார் என்பது எங்களுக்குத் தெரியும். பிரதமர் என்ற மரியாதையைக் கூட அவர் மோடிக்கு வழங்கவில்லை. இப்படியிருக்க தற்போது மட்டும் எதற்காகப் பிரதமரைச் சந்திக்க வேண்டும். இந்தச் சந்திப்பு மம்தாவின் உண்மையான சந்தர்ப்பவாத அரசியலை வெளிக்கொண்டுவந்துள்ளது. அவர் தன் நோக்கத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். வேலை முடிந்ததும் உதவியவரை அப்படியே மறந்துவிடுவார்” என பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ராகுல் சின்ஹா விமர்சித்துள்ளார்.