Published:Updated:

ஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்?!' - மம்தாவின் பதில் என்ன?

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் என்று 300-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தால், இரண்டு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி
ANI

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும், இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்று கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், ``மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை ஏன் பயன்படுத்தினர். பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தில் ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டார். இந்த நாட்டின் இளைஞர்களிடம் நான் கேட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடி உங்களின் மொபைல் போனுக்கு பொகசஸ் எனும் ஆயுதத்தை அனுப்பியுள்ளார். அந்த ஆயுதத்தை எனக்கு எதிராகவும் பயன்படுத்தியுள்ளார். என்னிடம் மட்டுமில்லை. விஞ்ஞானிகள், அறிஞர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரிடமும் பயன்படுத்தியுள்ளார்" என்றார்.

விவசாயிகள் பிரச்னை, பணவீக்கம், பெகாசஸ் விவகாரம் போன்றவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆகவேண்டும். - ராகுல் காந்தி.

தொடர்ந்து பேசியவர், ``நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை. மத்திய அரசு குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பதை மட்டும் தான் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆம், இல்லை என்று பதில் சொல்ல மறுக்கிறார்கள். நாங்கள் எங்களின் கடமையை மட்டும்தான் செய்கிறோம். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. ஏன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாது?" என்று கூறினார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

முக்கிய பணிகளுக்காக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரதமரைச் சந்தித்தார். அவர் டெல்லியிலிருந்த போதும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `` கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதில் நான் முன்னணியில் இருக்கிறேன். எதிர்கட்சிகளை யார் வழிநடத்துவார்கள் என்று கூற நான் ஜோதிடர் கிடையாது. அது அந்த நிலைமையைப் பொறுத்தது. யார் வழிநடத்தினாலும் எனக்கு பிரச்னை கிடையாது. நான் ஒரு எளிமையான தொண்டன். தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு