Published:Updated:

காங்கிரஸ், மம்தா தேசிய அரசியலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் வல்லமை யாரிடம் இருக்கிறது? - ஓர் அலசல்!

பவானிப்பூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் மம்தா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் வல்லமை மம்தாவிடம் இருக்கிறதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடந்து முடிந்த 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். நந்திகிராம் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த சுவேந்து அதிகாரி மம்தாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். இதனால், ஆறு மாதங்களுக்குள்ளாக ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மட்டுமே மம்தா முதல்வராகத் தொடர முடியும் என்கிற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பவானிபூர் திரிணாமுல் எம்.எல்.ஏ சோவன்தேப் ராஜினாமா செய்ய, அந்தத் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் மம்தா. பவானிப்பூர் தொகுதியில் கடந்த மூன்று முறையாக திரிணாமுல் காங்கிரஸே வெற்றிபெற்றிருக்கிறது. அதில், 2011 இடைத்தேர்தலிலும், 2016 தேர்தலிலும் மம்தாவே அங்கு போட்டியிட்டு வென்றிருக்கிறார். தற்போதைய இடைத்தேர்தலில், பா.ஜ.க சார்பில் பிரியங்காவும், சி.பி.எம் சார்பில் ஶ்ரீஜிப் பிஸ்வாஸும் போட்டியிட்டனர். மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகளை மனதில் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்திருந்தது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
`தனது சாதனையை தானே முறியடித்த மம்தா' மிஸ் ஆகாத பவானிப்பூர்; 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

பவானிப்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புகளுடன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று நடந்து முடிந்தது. அக்டோபர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 85,263 வாக்குகள் பெற்று, மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா 26,428 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். வெற்றிக்குப் பின்னர் பேசிய மம்தா, ``பவானிப்பூரில் என் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், என்னை வெற்றிபெறவைத்த மக்களுக்கும் நன்றி! நந்திகிராமில் நான் தோற்றது ஒரு சதி'' என்று கூறினார். பா.ஜ.க வேட்பாளரான பிரியங்காவோ, ``இடைத்தேர்தலில் மம்தா வெற்றிபெற்றிருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையான பவானிப்பூரில் 25,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய நான்தான் ஆட்ட நாயகி'' என்றிருக்கிறார்.

மம்தாவின் அமோக வெற்றியை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாகக் கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், மீண்டும் `பா.ஜ.க-வை வீழ்த்த சரியான தலைவர் மம்தாதான்' என்கிற கருத்தை திரிணாமுல் தொண்டர்கள் வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மம்தா இருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விருப்பப்படுகின்றனர். அதை நோக்கிய நடவடிக்கைகளில்தான், அந்தக் கட்சி சமீபகாலமாக ஈடுபட்டுவருகிறது.

மம்தா - சோனியா
மம்தா - சோனியா
`மோடிக்கு மாற்று ராகுலா, மம்தாவா?' பரபரப்பைக் கிளப்பிய `ஜெகோ பங்களா' கட்டுரை - பின்னணி என்ன?!

காங்கிரஸ், மம்தா பா.ஜ.க-வை வீழ்த்தும் வல்லமை யாரிடம் இருக்கிறது?

``2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த மம்தாவால் மட்டுமே முடியும் என்கிற கருத்து மேற்கு வங்கத்தில் நிலவிவருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வலுவாக இருக்கும் பா.ஜ.க-வை, மேற்கு வங்கத்தில் மட்டும் வலுவாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸால் வீழ்த்த முடியாது என்பதே உண்மை. அதை நன்கு அறிந்த காரணத்தால்தான், ராகுலையும் சோனியாவையும் நேரில் சென்று சந்தித்தார் மம்தா.

அதே நேரத்தில், `2024 தேர்தலில் காங்கிரஸால், பா.ஜ.க-வை தனியே நின்று வீழ்த்த முடியுமா?' என்ற கேள்விக்கு, `தற்போதைய நிலவரப்படி அது முடியாது' என்பதே பல அரசியல் விமர்சகர்களின் பதிலாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில்கூட, உட்கட்சிப் பூசல்கள் காரணமாக வலுவிழந்துவருகிறது அந்தக் கட்சி. சத்தீஸ்கரில் ஆளுங்கட்சியாக இருக்கிறது காங்கிரஸ். கடந்த சில நாள்களாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் பல்வேறு பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படி ஆளுமங்கட்சியாக இருக்கும் மாநிலங்களிலேயே சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். பற்றாக்குறைக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ``கட்சிக்கு சரியான தலைமையில்லை'' என்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது. சமீபத்திய இந்திய அரசியல் களத்தில், சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதியாகத் திகழ்கிறார் மம்தா பானர்ஜி. எனவே, பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால், காங்கிரஸும் மம்தாவும் கைகோத்தாக வேண்டும். இவர்களோடு, பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கும் சில மாநிலக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்துவது சாத்தியமாகும். இது தற்போதைய நிலவரம் மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு