Published:Updated:

மம்தா Vs காங்கிரஸ்... தேசிய அரசியலில் யார் பக்கம் நிற்பார் ஸ்டாலின்?!

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

தேசிய அரசியலில் பா.ஜ.க Vs எதிர்க்கட்சிகள் என இருந்த சூழல் தற்போது பா.ஜ.க Vs மம்தா Vs காங்கிரஸ் என மாறியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான தி.மு.க-வின் ஆதரவு இந்த மூன்று பேரில் யாருக்கு இருக்கும் என்பது குறித்து ஓர் அலசல்...

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தேசியத் தலைவராக உருவெடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. பா.ஜ.க-வை ஆட்சியைவிட்டு அகற்றுவது மட்டுமே தனது நோக்கம் என்றும், பிரதமர் பதவி மீதெல்லாம் ஆசையில்லை என்றும் கூறி பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவது என 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க-வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டார். ஆனால், சமீபகாலமாகக் காங்கிரஸுடன் மம்தா முரண்பட்டே நிற்கிறார்.

``காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை” எனவும், ``பாஜகவைத் தோற்கடிக்க ஒரு கட்சி எதுவும் செய்யவில்லை என்பதற்காக, மற்ற கட்சியினரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைப்பது சரியில்லை. யாராவது பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என விரும்பினால், அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்” எனவும், ``மோடியை நான்தான் வீழ்த்தப்போகிறேன்” எனவும் பேசிவருகிறார். காங்கிரஸ் கட்சியும் மம்தாவுக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மம்தாவை அழைக்காமல் தவிர்த்திருந்தது. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் ``காங்கிரஸ் இல்லாமல் தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியைக் கட்டமைக்க முடியாது” எனப் பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி, ஸ்டாலின்
மம்தா பானர்ஜி, ஸ்டாலின்

தேசிய அரசியலில் பா.ஜ.க Vs எதிர்க்கட்சிகள் என இருந்த சூழல் தற்போது பா.ஜ.க Vs மம்தா Vs காங்கிரஸ் என மாறியிருக்கிறது. இந்த மூன்று பேருக்கும் மற்ற மாநில, தேசியக் கட்சிகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் எனும் நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு யார் பக்கம் இருக்கும் என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மம்தாவின் முயற்சியும், காங்கிரஸின் எதிர்வினையும் இவர்கள் இருவருக்கும் பிற கட்சியினரிடம் இருக்கும் ஆதரவும் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லஷ்மி ராமச்சந்திரனிடம் பேசினோம். ``2024-ல்தான் தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் கூட்டணி முடிவாகும். அதுவரை கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாவதுபோலவும், அதற்கான நகர்வுகள் இருப்பதுபோலவும் ஏதாவது நடந்துகொண்டேதானிருக்கும். பா.ஜ.க-வுக்கு எதிராக, மதவாத சக்திகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டுமென்றால் அது காங்கிரஸ் இல்லாமல் சாத்தியமாகாது. குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். மம்தா வெறும் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும்தான் ஆட்சியில் இருக்கிறார். அவர் சீஸன் அரசியல் செய்பவர். தன்னுடைய தேர்தல் வியூக வல்லுநர் கொடுக்கும் ஆலோசனையின்படிதான் மம்தா நடந்துகொண்டிருக்கிறார். அவரின் அரசியல் ஒரு தேர்தலுக்குக்கூட தாங்காது. சிவசேனா ஒரு மேம்பட்ட அரசியலைச் செய்துவருகிறது. சில மாநிலத் தலைவர்களுக்கு மட்டும்தான் இந்தப் புரிதல் இருக்கும்.

லஷ்மி ராமச்சந்திரன்
லஷ்மி ராமச்சந்திரன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். தற்போதுவரை அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். தேர்தல் வரை அதுவே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மம்தா - காங்கிரஸுக்கு இடையேயான தேர்தல் யுத்தத்தில் மு.க.ஸ்டாலின் யார் பக்கம் நிற்பார் என தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம், ``ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருப்பவர்கள் தவிர மம்தா, சந்திரசேகர ராவ், சரத் பவார் என அனைவரின் நோக்கமும் பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருப்பவர்கள் தற்போதும் அதே கூட்டணியில்தான் தொடர்கிறார்கள். மம்தாவையும் சந்திரசேகர ராவையும் மட்டும் நாம் சமாதானப்படுத்த வேண்டும். அதை காங்கிரஸ் நேரடியாகச் செய்ய முடியாது. ஆனால், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அது முடியும். அவரால்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான காரண, காரியங்களை எளிதில் எடுத்துக் கூறி ஒன்றிணைக்க முடியும். கடந்தகாலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத ஆட்சி அமைந்தபோதெல்லாம் அதில் முக்கியப் பங்காற்றியது திராவிட முன்னேற்றக் கழகம்தான். மம்தாவைப் பொறுத்தவரை, பிரதமர் என்ற இடத்துக்கு வந்தால்தான் சிக்கல் இருக்கும். ஆனால், மம்தாவுக்கு அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

காங்கிரஸிலிருந்து ஒருவரோ அந்தக் கட்சியின் ஆதரவு பெற்ற ஒருவரோதான் பிரதமராக வர முடியும். இதையெல்லாம் அமர்ந்து பேசினால் இந்த யதார்த்தம் புரியும். முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பிறகுதான் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பது குறித்து யோசிக்க முடியும். அதைத் தலைவர் நிச்சயம் சிறப்பாகச் செய்து முடிப்பார்” என வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவரின் பங்கு என்னவாக இருக்கும் என்பதைக் கூறினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் எப்படியிருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். ``இப்போதிருக்கும் சூழலில் தி.மு.க-வுக்கு மதிப்பு அதிகம். மோடி, காங்கிரஸை தி.மு.க கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டால் போதும் என்ற விருப்பத்தில் இருக்கிறார். மம்தா, சந்திரசேகர ராவ் போன்றோருக்கு பா.ஜ.க-வோடு காங்கிரஸையும் தி.மு.க எதிர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. காங்கிரஸுக்கு தி.மு.க-வின் கூட்டணி கட்டாயம் தேவை என்பதால் அதை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டிய முயற்சிகளை எடுக்கும். இவையெல்லாம் தி.மு.க-வுக்குச் சாதகமான விஷயங்கள். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்வைத்து தனக்கு லாபகரமான முடிவையே தி.மு.க எடுக்கும். தேர்தல் நெருங்கும்போதுதான் தான் எந்தப் பக்கம் என்பதை தி.மு.க தெளிவுபடுத்தும். பா.ஜ.க வீழ்ந்தாலும், காங்கிரஸிடம் அதிகாரத்தைக் கொடுக்க மம்தா விரும்பவில்லை.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

காங்கிரஸிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் ஆதரிக்கும் கட்சிகளுக்கு எதிராகவே பல்வேறு நடவடிக்கையை எடுப்பார்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. கடந்தகால வரலாறும் அதுதான். எனவே, எல்லோருமாக இணைந்து காங்கிரஸ் கட்சியைத் தங்களை ஆதரிக்கவைக்க முயற்சி செய்வார்கள்” என விளக்கமாகப் பேசி முடித்தார்.