Published:Updated:

காய்நகர்த்தும் மம்தா - வடகிழக்கில் வலுப்பெறுகிறதா திரிணாமுல் காங்கிரஸ்?!

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் கோவாவிலும், அண்டை மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு மிகத் தீவிரமாக செயலாற்றிவருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மம்தா பானர்ஜி. அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தைத் தாண்டி பிற மாநிலங்களிலும் தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவருகிறார். குறிப்பாக, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் கோவாவிலும், அண்டை மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களிலும் கட்சி கட்டமைப்பைப் பலப்படுத்த அதீத முனைப்புக் காட்டிவருகிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குறிவைத்திருக்கும் மாநிலங்களின் காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் இதர கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள், எம்.எல்.ஏ-க்கள் என பலரும் அவர்கள் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்துவருகின்றனர். குறிப்பாக, கோவா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ கடந்த செப்டம்பர் மாத இறுதியில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அதேபோல, சில நாள்களுக்கு முன்னர் ஹரியானா மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர், பீகார் மாநில காங்கிரஸின் கீர்த்தி ஆசாத், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பவான் வர்மா உள்ளிட்டோர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். இந்த நிகழ்வுகள் தேசிய அரசியலில் பயணிக்க அடியெடுத்துவைத்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு புதிய உத்வேகம் கொடுத்திருக்கின்றன.

அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான சம்பவங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக, மேகாலயா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் கொத்தாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கின்றனர். மேகாலயா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் இந்த மிகப்பெரிய இணைப்பு நடந்திருக்கிறது. இதனால், அந்த மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்திலிருந்து காங்கிரஸ் கட்சி, கூண்டோடு காலியாகியிருக்கிறது.

மேகாலயா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா
மேகாலயா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா
ட்விட்டர்

இதன் மூலம், 2023-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கு வலுவான பாதையும் சாதகமாக அமைந்திருக்கிறது.

பலமிழந்த காங்கிரஸ்; நெருக்கடியில் பாஜக; கால்பதிக்கும் மம்தா! - கோவா தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரிபுரா மாநிலத்தைப் பொறுத்தவரையில், அங்கும் பா.ஜ.க-வுக்கான நேரடிப் போட்டியாக திரிணாமுல் காங்கிரஸ் வலுப்பெற்றிருக்கிறது. சமீபகாலமாக, திரிபுராவில் நடந்துவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களைக் கண்டித்து, பா.ஜ.க-வுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்திவருகிறது. இதனால், சிறுபான்மையினர் மத்தியில் அந்தக் கட்சிக்குச் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. மேலும், திரிபுரா மக்கள்தொகையில் 83 சதவிகிதமிருக்கும் இந்துக்களில் பெரும்பாலானோர், வங்கதேசத்திலிருந்து குடியேறிய `வங்காளிகளாக' இருக்கின்றனர். இதுவும் மேற்கு வங்கத்தை அடித்தளமாகக்கொண்டு வளர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குச் சாதமாக அமைந்திருக்கிறது.

முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்
முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகிச் சென்று பா.ஜ.க-வில் இணைந்திருந்த முகுல் ராய், ரஜீப் பானர்ஜி போன்ற முக்கியத் தலைவர்கள், மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே, திரிபுரா மாநிலத்தில் கட்சி கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த முகுல் ராய், ரஜீப் பானர்ஜி ஆகியோரின் வருகை, 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மேலும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யும், அஸ்ஸாம் மகிளா காங்கிரஸின் தலைவருமான சுஷ்மிதா தேவும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்

சுஷ்மிதாவின் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் மோகன் தேவுக்கு திரிபுரா மாநிலத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால், சுஷ்மிதாவைவைத்தும் திரிபுராவில் கட்சியை வளர்க்க திரிணாமுல் தலைமை திட்டமிட்டிருக்கிறது.

இது போன்ற சாதகமான சூழலில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் தன் கட்சியின் தடத்தை அழுத்தமாகப் பதிப்பதற்கு, தேவையான விஷயங்களை மம்தா மேற்கொண்டுவருகிறார்.

கோவா கோதா! - பரிதாப காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... கால்பதிக்கும் மம்தா...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு