பஞ்சாப்பில், மிகப் பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது ஆம் ஆத்மி. அந்தக் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். டெல்லியைத் தாண்டி பாஞ்சாப்பிலும் கால்பதித்திருக்கும் ஆம் ஆத்மி, பஞ்சாப் காங்கிரஸின் முக்கியப் புள்ளிகளைத் தோல்வி அடையச் செய்திருக்கிறது.
அந்த வகையில், பஞ்சாப் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரான சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியத் தழுவியிருக்கிறார். அதில் ஒரு தொகுதியான பதார் தொகுதியில் சரண்ஜித் சன்னியை, ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் (Labh Singh) தோற்கடித்திருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு ஆம் ஆத்மி தொண்டர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``சரண்ஜித் சிங் சன்னியை பதார் தொகுதியில் தோற்கடித்த லாப் சிங், செல்போன் சரிசெய்யும் மொபைல் கடை ஒன்றில் சாதாரண பணி செய்துவருகிறார். அவரின் தாய் அரசுப் பள்ளிக்கூடத்தில் தூய்மைப் பணியாளராக இருக்கிறார். அவரின் தந்தை ஒரு விவசாயக் கூலி. நவ்ஜோத் சிங் சித்துவை தோற்கடித்தவரும் சாதாரண தொழில் செய்பவரே. ஆம் ஆத்மி மிகப் பெரிய புரட்சியை செய்துகொண்டிருக்கிறது'' என்று பேசியிருக்கிறார்.