Published:Updated:

`கண்டித்தால் மட்டும் போதாது பிரதமர் அவர்களே' - கும்பல் வன்முறைக்கு எதிராகத் திரண்ட 49 பிரபலங்கள்!

கொலை செய்பவர்களை மட்டும் பரோல் இல்லாத ஆயுள் சிறையில் அடைக்கும்போது இதுபோன்று கும்பல் கொலைக்கு ஏன் அதுபோன்ற சட்டம் கொண்டுவரவில்லை. எந்த ஒரு குடிமகனும் அவனது சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழக் கூடாது.

பிரதமர்
பிரதமர்

ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில், கடந்த மாதம் 24 வயது இளைஞர் அன்சாரியைத் திருடன் என்று கருதி அவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியது ஒரு கும்பல். 'ஜெய் ஶ்ரீராம்', 'ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு அந்தக் கும்பல் அன்சாரியைக் கட்டாயப்படுத்தியதோடு அவர் மயங்கிச் சரியும்வரை, சுமார் ஏழு மணி நேரம் பலமாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட 18 மணிநேரம் கழித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்சாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் ஜூன் 24-ம் தேதி உயிரிழந்தார். இவர் மட்டுமல்ல மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஹஃபீஸ் என்ற இளைஞரும் `ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறச் சொல்லி வற்புறுத்தப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்.

அனுராக் காய்ஷாப், மணிரத்னம்
அனுராக் காய்ஷாப், மணிரத்னம்

தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறி முக்கிய பிரபலங்கள் பலர் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். பிரபல இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காய்ஷாப், கௌதம் கோஷ், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், ``நமது நாட்டில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் அமைதியை விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

நமது அரசியலமைப்புச் சட்டம், `இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு. இங்கே மதம், மொழி, இனம், சாதியைச் சேர்ந்த அனைவரும் சமம்' என்றே வரையறுத்துள்ளது. அதனடிப்படையில் மக்கள் சந்தோஷமாக வாழ சில கோரிக்கைகளை உங்கள் முன் வைக்கிறோம். இஸ்லாமியர்கள், தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு மட்டும் சிறுபான்மையினர் மீது 840 தாக்குதல் நடந்தது என்ற தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அளித்திருக்கும் அறிக்கை எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி
அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி

இதுமட்டுமல்லாமல், 2009 ஜனவரி முதல் 2018 அக்டோபர் வரை மொத்தம் 254 மதவெறி தாக்குதல் நடந்துள்ளன. இதில் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற கும்பல் கொலைகளை நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டித்துள்ளீர்கள். ஆனால், அதுமட்டும் போதாது. இந்த மாதிரியான தாக்குதல் நடத்துபவர்கள் மீது பிணை இல்லாத குற்றப்பிரிவில் வழக்கு பதிய வேண்டும். கொலை செய்பவர்களை மட்டும் பரோல் இல்லாத ஆயுள் சிறையில் அடைக்கும்போது இதுபோன்று கும்பல் கொலைக்கு ஏன் அதுபோன்ற சட்டம் கொண்டுவரவில்லை. எந்த ஒரு குடிமகனும், அவனது சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழக் கூடாது.

'ஜெய் ஶ்ரீராம்' என்ற பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை தற்போது போர் முழக்கமாக மாற்றப்பட்டு, அதைச் சொல்லச் சொல்லியே பல்வேறு மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதங்களின் பெயரால் தாக்குதல் அதிகமாக நடப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகும். அப்படிச் செய்பவர்களில் நடுத்தர வயதுக்காரர்கள் யாரும் இல்லை. `ராம்' என்கிற பெயர் தற்போது பல இன மக்களை அச்சுறுத்தும், பயமுறுத்தும் பெயராக மாறியுள்ளது. அந்தப் பெயர் இந்தியாவில் பலருக்கு புனிதமான பெயர். அப்படிப்பட்ட பெயரை தீட்டாகிவிடும் வகையில் நடைபெறும் செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

கடிதம்
கடிதம்

எதிர்ப்புகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி, அர்பன் நக்சல் எனக் கூறி சிறையில் அடைக்கக் கூடாது. அரசு எதிர்ப்பு என்பது பேச்சுரிமையைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவு 19-ன் ஒரு பகுதி. ஆளும் அரசை, கட்சியை விமர்சிப்பது என்பது தேசத்தை விமர்சிப்பது ஆகாது. எந்த ஒரு ஆளும் அரசும் தேசத்துடன் சமமாகிவிட முடியாது. ஆளும் அரசுகள் அந்ததந்த நாட்டில் உள்ள கட்சி அவ்வளவே. ஆகவே, அரசை எதிர்ப்பது தேசத்தை எதிர்ப்பது கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்ப்புகளை சிதைக்காத தேசமே வலுவான தேசம். எங்களின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கப்படும் என்று நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.