Published:Updated:

`அவர் ஒரு மங்குனி அமைச்சர்!'- யாரை விமர்சிக்கிறார் மாணிக்கம்தாக்கூர்

``ரயில்வே மேம்பாலம், பாதாளச் சாக்கடை திட்டம் என சிவகாசியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக உள்ளார். அவர் செய்த துரோகத்தை விருதுநகர் தொகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.''

Manickam tagore
Manickam tagore ( ஆர்.எம்.முத்துராஜ் )

``விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் டெல்லியில் இருந்துகொண்டு அறிக்கை விடுகிறார். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகூட தெரிவிக்கவில்லை. அவரை ரப்பர் குண்டுகளால் சுட வேண்டும்'' என தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Manickam tagore
Manickam tagore
ஆர்.எம்.முத்துராஜ்

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியைக் கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர். விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமாரசாமிராஜா, காமராஜர் ஆகிய சிறந்த முதல்வர்கள் பிறந்த விருதுநகர் மாவட்டத்தின் களங்கமாக ராஜேந்திரபாலாஜி உள்ளார். ரயில்வே மேம்பாலம், பாதாளச் சாக்கடை திட்டம் என சிவகாசியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக உள்ளார். அவர் செய்த துரோகத்தை விருதுநகர் தொகுதி மக்கள் மன்னிக்கமாட்டார்கள். சிவகாசி, திருத்தங்கல் மக்களுக்கு ராஜேந்திரபாலாஜி செய்த கொடுமைகளை எடுத்துச் சொல்ல உள்ளோம். சிவகாசி தொகுதிக்கு எதுவும் செய்யாமல் வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்.

மணல் கொள்ளையர்களை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பிய ஆர்.பி. உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இரண்டு பேரையும் இங்கே இருந்து விரட்டினார். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பேசும் அவர் நாவடக்கத்துடன் நடக்க வேண்டும். அவர் பேசிய பேச்சுகள் குறித்து சபாநாயகர் தலைமையில் உள்ள கமிட்டிக்குப் புகார் அனுப்ப உள்ளேன்.

Manickam tagore
Manickam tagore
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்சக்தி திட்டத்தில் மிகப்பெரும் ஊழல் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கண்மாயிலும் மணல் எடுப்பதற்கு கமிஷன் பெறுகிறார். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி பிரதமரிடம் புகார் அளிக்க உள்ளோம். வெள்ளையறிக்கை கேட்டால் பச்சை அறிக்கை கொடுக்கிறோம் எனக் கூறிய மங்குனி அமைச்சர் அவர்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் அவர் என்ன சாப்பிட்டார்? என்ன செய்தார் எனத் தெரியவில்லை. அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். அவரை சோதனை நடத்தி அந்தப் பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். அவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். சிவகாசியிலிருந்து அவரை துடைத்தெறிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.