சமூகம்
Published:Updated:

அப்ரூவர் மணிகண்டன்?

மணிகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிகண்டன்

“அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்!”

ஆகஸ்ட் 6... தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கு, அன்று பிறந்த நாள். அதையொட்டி ராமநாதபுரம் நகர் முழுவதும், ‘முகவையின் நிரந்தர அமைச்சர்’ எனக் குறிப்பிட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை கழற்றப்படும் முன்பே அமைச்சரவையில் இருந்து மணிகண்டனைக் கழற்றி விட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு, எடப்பாடியால் பதவி பறிக்கப்பட்ட முதல் அமைச்சர் இவரே!

மறைந்த எம்.நடராஜன் மற்றும் ‘மிடாஸ்’ மோகனைப் பிடித்து, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சீட் வாங்கி ஜெயித்தார் மணிகண்டன். டாக்டரான அவரை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆக்கினார் ஜெயலலிதா. மாவட்டச் செயலாளர் பதவியும் தந்தார். இப்படி அடுத்தடுத்த பதவிகள் மணிகண்டனைத் தேடி வந்தன.

அப்ரூவர் மணிகண்டன்?

புதிய சேனல் தொடங்க நினைத்த முக்கியச் செய்தி நிறுவனத்தாரிடம் அனுமதிக்காக பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ஆறு மாதங்களிலேயே அவரின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மணிகண்டனின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது. ‘அன்வர் ராஜா எம்.பி ஆகக் கூடாது என்பதற்காகவே, ராமநாதபுரம் தொகுதியை பி.ஜே.பி-க்கு ஒதுக்க உள்ளடி வேலை செய்தார். நயினார் நாகேந்திரன் தோற்றதற்கும் அவரே முழு காரணம். மணல் குவாரிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மணிகண்டன், அதில் தி.மு.க பிரமுகர் களையும் பங்குதாரர்களாக வைத்திருந்தார்’ என எக்கச்சக்கமான புகார்கள் முதல்வருக்குப் பறந்தன.

கடந்த மாத இறுதியில் மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது, அரசு கேபிள் டி.வி தலைவர் பொறுப்பையும் கவனித்துவந்தார். திடீரென அந்தப் பொறுப்பை மணிகண்டனிமிருந்து பறித்து, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார் முதல்வர். ஆகஸ்ட் 7-ம் தேதி பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மணிகண்டன், தன் மனக்குமுறலை வெளிக்காட்டும் வகையில், ‘‘அரசு கேபிள் டி.வி தலைவர் பொறுப்பை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கியது குறித்து, என்னிடம் முதல்வர் கலந்துரையாடவில்லை. கேபிள் டி.வி தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் உள்ள இரண்டு லட்சம் கேபிள் இணைப்புகளை, அரசு கேபிள் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று போட்டுத்தாக்கினார். இந்தச் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகுதான் அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் எடப்பாடி.

நம்மிடம் பேசிய மணிகண்டன் ஆதரவாளர்கள் சிலர், ‘‘துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் மணிகண்டனும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மணிகண்டனின் அமைச்சர் பதவியைப் பறித்ததன் மூலமாக, ஓ.பி.எஸ் கரத்தை ஒடுக்குவதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மணிகண்டன் மீதான நடவடிக்கை

அ.தி.மு.க ஆட்சிக்கு ஏற்படப்போகும் பல பிரச்னைகளுக்குத் தொடக்கப்புள்ளி என்பதை யாரும் உணரவில்லை. டாக்டரான மணிகண்டனுக்கு, மத்தியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலருடன் நல்ல நட்புண்டு. அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடமும் அவர் நெருக்கமாகியுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்தான் கேபிள் டி.வி விவகாரத்தில் திரியைக் கொளுத்திப் போட்டார். அவருடைய குற்றச்சாட்டிலிருந்து நூல் பிடித்து, அ.தி.மு.க-வின் பல்வேறு ஊழல்களையும் தோண்டுவதற்கு பி.ஜே.பி திட்டம் போட்டிருக்கிறது. மணிகண்டனை அப்ரூவர் ஆக்கிவிட்டால், பல விவகாரங்கள் வெளியே வரும். அதன் பிறகு அ.தி.மு.க-வைக் கழற்றிவிடலாம் என்று பி.ஜே.பி நினைக்கிறது. அதற்கேற்றார்போல், ‘அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்’ என்று மணிகண்டனும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்’’ என்றார்கள்.

தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர், இது பற்றி இன்னும் விரிவாக விளக்கினர். ‘‘அரசு கேபிள் டி.வி நிறுவனம், சுமார் 600 கோடி ரூபாய் கடனில் சிக்கி இருந்தது. 400 கோடி ரூபாய் கடனைக் கட்டிவிட்ட நிலையில், மீதமுள்ள கடனை அடைப்பதற்கு அரசிடம் நிதியுதவி கேட்டு வந்தார் மணிகண்டன். அதைக் கொடுத்தால் அரசு கேபிள் கட்டணத்தைக் குறைத்துவிடலாம் என்று கூறிவந்தார். ஆனால், கடைசி வரை அந்த நிதியை எடப்பாடி தரவில்லை. இதனால், அரசு கேபிள் கட்டணத்தைக் குறைக்க முடியவில்லை. மணிகண்டனின் கோரிக்கையை ஏற்காத எடப்பாடி, உடுமலை ராதாகிருஷ்ணனிடம் கேபிள் நிறுவனத் தலைவர் பதவியைக் கொடுத்த கையோடு, அரசு கேபிள் கட்டணத்தையும் குறைத்துவிட்டார். மணிகண்டனின் ஆத்திரத்துக்கு இதுவும் இன்னொரு காரணம்’’ என்றவர்கள், செட்டாப் பாக்ஸ் டெண்டரில் நடந்த விவகாரத்தையும் விளக்கினர்.

அப்ரூவர் மணிகண்டன்?

‘‘அரசு கேபிள் டி.வி நிறுவனத்துக்குத் தேவையான செட்டாப் பாக்ஸ்களை வாங்க, டெண்டர் கோரப்பட்டிருந்த நேரம் அது. செட்டாப் பாக்ஸின் விலை சுமார் 1,500 ரூபாய் என்றது ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் உணவுத் துறை டெண்டரில் சரிவர செயல்படாததற்காக அரசு தரவேண்டிய பணம் பிடித்துவைக்கப் பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய மணிகண்டன், அதற்கான ஆவணங்களை அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமே கொடுத்துவிட்டார். அந்த செட்டாப் பாக்ஸ்கள் வருங்கால எலெக்ட்ரானிக் டெக்னாலஜி மாற்றங்களுக்கு ஒத்துவராது என்பதால், அதை வாங்க எதிர்ப்பு தெரிவித்த மணிகண்டன், 4,000 ரூபாய் பெறுமானமுள்ள அதிநவீன செட்டாப் பாக்ஸ்களைத் தயாரிக்கும் இன்னொரு கம்பெனியை சிபாரிசு செய்தார். ஆனால், முக்கியமான அமைச்சர் தரப்பின் அழுத்தத்தால் 1,500 ரூபாய் செட்டாப் பாக்ஸ் தரும் கம்பெனிக்கே ஆர்டர் தரப்பட்டது. அந்த நிறுவனத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் முழு அளவு செட்டாப் பாக்ஸை சப்ளை செய்ய முடியாததால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மணிகண்டன் ரத்துசெய்துவிட்டார். இது தொடர்பான ஆவணங்கள் எல்லாம் மணிகண்டனிடம் இருக்கின்றன. ஐ.டி ரெய்டு, சி.பி.ஐ விசாரணை என்று வந்தால், இந்த ஆவணங்களைக் கொடுத்து முதல் அப்ரூவராக அவர் மாறிவிடுவார்’’ என்றனர்.

அமைச்சர் மணிகண்டனின் நீக்கம், ஓ.பி.எஸ்., சி.வி.சண்முகம் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.அதைச் சுட்டிக்காட்டும் கட்சி நிர்வாகிகள் சிலர், ‘‘மணிகண்டனுக்கும் கொங்கு பெல்ட் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே கடும் பனிப்போர் நிகழ்ந்தது. நடந்து முடிந்த தேர்தலில், ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றுத்தந்தது தென் மண்டலம்தான். அதிலும், பரமக்குடி தொகுதியை ஜெயித்துக்கொடுத்தவர் மணிகண்டன். ஆனாலும், ‘இந்த ஆட்சியில் கொங்கு பெல்ட் அமைச்சர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. முக்குலத்தோர், வன்னியர் ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவ தில்லை’ என்ற வருத்தம் அவரிடமிருந்தது. அதை அடிக்கடி அவர் வெளிப்படுத்திவந்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பல லட்சம் லேப்டாப்கள் வாங்கிய வகையில், அந்த நிறுவனத்துக்கு பெரிய தொகை நிலுவையில் உள்ளது. இந்த நிதியைத் தருவதற்கு, கிளியரன்ஸ் தரவேண்டியது கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரின் துறைதான். ஆனால், அந்தத் துறையில் நிதியை ஒதுக்காமல் இழுத்தடித்ததை மணிகண்டன் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொங்கு பெல்ட் அமைச்சர் ஒருவர் சில விவகாரங்களில் மூக்கை நுழைக்க, ‘இங்கெல்லாம் நீங்க வாலாட்ட வேண்டாம்’ என்று நேரடியாக எச்சரித்தார். இதையெல்லாம் சேர்த்துவைத்து அவரைப் பழிவாங்கிவிட்டார்கள்’’ என்றார்கள்.

பதவி பறிப்பு குறித்து மணிகண்டனிடம் கேட்டதற்கு, ‘‘மாவட்டத்தில் கட்சிக்காரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில்தான் இயங்கினேன். பதவி பறிக்கப்பட்ட அன்றுகூட, கூட்டுறவு சங்கப் பதவிகளைப் பிரித்துக் கொடுப்பதற்கான வேலைகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏன் பதவி பறிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. முதல்வரைச் சந்தித்த பிறகே என்ன காரணம் எனத் தெரியும்’’ என்றார்.

அவருக்கு நெருக்கமானவர்கள் இன்னும் விரிவாகப் பேசினர். ‘‘ `இரண்டு லட்சம் கேபிள் இணைப்புகளை வைத்திருக்கும் கேபிள் ஆபரேட்டரை, எப்படி கேபிள் நிறுவனத் தலைவராக ஆக்கினீர்கள் என்று யாராவது கோர்ட்டுக்குப் போனால் என்ன ஆவது?’ என்று சீனியர் அமைச்சர்கள் பலரிடமும் அவர் சொன்னார். அவர்கள் கண்டுகொள்ள வில்லை. அதனால்தான், மீடியாக்களிடம் சொல்ல நேர்ந்தது. அது தவறுதான். தன் செயலுக்கு முதல்வரிடம் வருத்தம் தெரிவிக்க இருக்கிறார் மணிகண்டன். அதை முதல்வர் ஏற்றுக்கொள்வாரா எனத் தெரியவில்லை. ஏற்றுக்கொண்டு, மீண்டும் அமைச்சரவையில் சேர்ப்பார் என நினைக்கிறோம். ஒருவேளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், வேறு முடிவுகளை மணிகண்டன் எடுப்பார்’’ என்றார்கள்.

மணிகண்டனின் அடுத்த மூவ்தான், தமிழக அரசியலில் இனி பரபரப்புச் செய்தி!

கொங்கு மண்டலத்திலிருந்து கிளம்பிய பொறி!

கேபிள் தொழில் செய்துவரும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘அரசு கேபிளுக்கு செட்டாப் பாக்ஸைத் தயாரித்துக் கொடுக்கும் கோவையைச் சேர்ந்த நிறுவனம், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வேண்டியவர் களின் நிறுவனம் என்ற பேச்சுள்ளது. இந்த நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து செட்டாப் பாக்ஸ்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு கேபிள் கார்ப்பரேஷனுக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதே நிறுவனம் போலியாக துணை நிறுவனங்களை உருவாக்கி, 50 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரியில் மோசடி செய்ததை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுத்தனர். அரசு கேபிளில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடப்பதாகவும், அதில் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பங்கு பிரித்துக்கொள்கிறார்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி தொடர்ச்சியாக புகாருக்குள்ளாகிவரும் அரசு கேபிளைப் பற்றி, அதன் அமைச்சரே புகார் எழுப்பியதன் மூலம், அரசின் ஊழல் அம்பலப்பட்டுப்போய்விடும் என்ற பயத்தில்தான் அமைச்சரை நீக்கியிருக்கிறார்கள். விரைவில் அரசு கேபிள் மோசடிகளை மணிகண்டன் அம்பலப்படுத்துவார்’’ என்றார்.