Published:Updated:

தனித்து நிற்கும் பா.ஜ.க... மெகா கூட்டணியில் காங்கிரஸ்... மணிப்பூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

மணிப்பூர்
பிரீமியம் ஸ்டோரி
மணிப்பூர்

மணிப்பூரில் நீண்டகாலமாக நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க ஆட்சியிலும் தொடர்கிறது. அதைத் தவிர்த்து பா.ஜ.க ஆட்சிமீது பெரிய அதிருப்திகள் எதுவுமில்லை.

தனித்து நிற்கும் பா.ஜ.க... மெகா கூட்டணியில் காங்கிரஸ்... மணிப்பூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

மணிப்பூரில் நீண்டகாலமாக நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க ஆட்சியிலும் தொடர்கிறது. அதைத் தவிர்த்து பா.ஜ.க ஆட்சிமீது பெரிய அதிருப்திகள் எதுவுமில்லை.

Published:Updated:
மணிப்பூர்
பிரீமியம் ஸ்டோரி
மணிப்பூர்

மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் ஓரணியாகத் திரண்டிருப்பதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 60 தொகுதிகள் மட்டுமே இருந்தாலும், கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டுவருவதால் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு கட்சிகளின் வியூகங்கள் என்ன... களத்தில் முந்துவது யார்?

தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க!

மணிப்பூரில் 2017 தேர்தலில் காங்கிரஸைவிடக் குறைவான இடங்களையே கைப்பற்றியிருந்தாலும், மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது பா.ஜ.க. அந்தத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவிய என்.பிரேன் சிங் முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் மற்றும் இதர மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க-வில் இணையச்செய்து மணிப்பூர் பா.ஜ.க-வை பலப்படுத்தினார் பிரேன். ஆனால், பிரேனின் இந்த நடவடிக்கையே மணிப்பூர் பா.ஜ.க-வில் அதிருப்தியாளர்களை உருவாக்கியது. புதிதாகக் கட்சி மாறி வந்தவர்களால், தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக எண்ணிய மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலரும், பிரேன் சிங்குக்கு எதிராகப் பேசத் தொடங்கினர். 2020-ல் மணிப்பூர் துணை முதல்வராக இருந்த தேசிய மக்கள் கட்சியின் ஜாய்குமார் சிங், பா.ஜ.க அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றார். அவரோடு இணைந்து மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ-வும் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இருந்தும் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று தப்பித்தது பா.ஜ.க அரசு. இந்த நிலையில்தான் பிரேன் சிங் மீது கட்சிக்குள் நிலவும் அதிருப்தியை ஓரளவு சரிசெய்து, அவரையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க தலைமை.

தனித்து நிற்கும் பா.ஜ.க... மெகா கூட்டணியில் காங்கிரஸ்... மணிப்பூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?
தனித்து நிற்கும் பா.ஜ.க... மெகா கூட்டணியில் காங்கிரஸ்... மணிப்பூர் தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

மணிப்பூரில் நீண்டகாலமாக நிலவிவரும் வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க ஆட்சியிலும் தொடர்கிறது. அதைத் தவிர்த்து பா.ஜ.க ஆட்சிமீது பெரிய அதிருப்திகள் எதுவுமில்லை. மணிப்பூரில் கிளர்ச்சிப் படைகளின் ஊடுருவல்களால் அடிக்கடி தாக்குதல்களும், சாலைமறியல்களும், பந்த்-துகளும் நடைபெறும். கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அளவுக்கான கிளர்ச்சிப் படைகளின் ஊடுருவல்கள், பா.ஜ.க ஆட்சியில் நிகழவில்லை என்பது அவர்களுக்கு ப்ளஸ்.

தங்களுக்குச் சாதகமான சூழல் நிலவுவதை பா.ஜ.க-வும் உணர்ந்திருந்த நிலையில்தான், கூட்டணிக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தன. இதையடுத்து, பா.ஜ.க-வும் தெம்புடன் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. போதாக்குறைக்கு காங்கிரஸிலிருந்து தங்கள் அணிக்குத் தாவிய தலைவர்களின் செல்வாக்கும் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறது பா.ஜ.க. இதே உற்சாகத்துடன் மணிப்பூரில் சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்!

பிரேன் சிங்
பிரேன் சிங்

கூட்டணியில் பலம் தேடும் காங்கிரஸ்!

கடந்த முறை பெரும்பான்மைக்கு மூன்று சீட்டுகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது காங்கிரஸ். தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக பிரேன் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து விலக்கினார்கள். 2017 தேர்தலில், 28 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருந்த நிலையில், இப்போது 14 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் 2002 முதல் 2017 வரை தொடர்ச்சியாக மூன்று முறை மணிப்பூரை ஆட்சி செய்தது காங்கிரஸ். இதற்குக் காரணம் ஓக்ராம் இபோபி சிங். மக்கள் செல்வாக்கு பெற்ற இவரை நம்பித்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ். தேர்தல் சமயத்தில் சீட் வழங்கப்படாததால், மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் காங்கிரஸில் இணைந்திருப்பது அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலம். தவிர சி.பி.ஐ., சி.பி.எம்., ஃபார்வர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய ஆறு கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். இவற்றில் காங்கிரஸைத் தவிர மற்ற கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாக்குவங்கி இல்லையென்றாலும், பல தொகுதிகளிலும் இந்தக் கட்சிகளுக்கான பாரம்பர்ய வாக்காளர்கள் கைகொடுப்பார்கள் என்பது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை!

வாக்குகளைச் சிதறடிக்கும் மாநிலக் கட்சிகள்!

மணிப்பூரின் முக்கியமான மாநிலக் கட்சிகளான நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. கடந்த தேர்தலில் தலா நான்கு தொகுதிகளைக் கைப்பற்றிய இந்த இரண்டு கட்சிகளும், பா.ஜ.க ஆட்சியமைக்க உதவின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கருதப்படுகிறது.

ஓக்ராம் இபோபி சிங்
ஓக்ராம் இபோபி சிங்

கள நிலவரம் என்ன?

மணிப்பூரில் சுமார் 57 சதவிகிதம் பேர் மெய்தி பழங்குடிச் சமூகத்தினர். அதனாலேயே, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஓக்ராம் இபோபி சிங்கை காங்கிரஸும், பிரேன் சிங்கை பா.ஜ.க-வும், ஜாய்குமார் சிங்கை தேசிய மக்கள் கட்சியும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்திருக்கின்றன. சுமார் 37 தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி மக்களின் வாக்குகளைக் கவரும் கட்சியே மணிப்பூரில் ஆட்சி அமைக்கும்.

நிலவரம் இப்படி இருப்பதால், `எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது’ என்றே கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கருத்துக்கணிப்புகளும் இதைத்தான் சொல்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய குதிரைப்பேர அரசியலே அங்கு ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் என்பதே மணிப்பூரின் இப்போதைய கள நிலவரம்!