Published:Updated:

மணிப்பூர் அரசியல்: `விலகிய ஆதரவு... மாநிலங்களவைத் தேர்தல்’ -சிக்கலில் பா.ஜ.க

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

மணிப்பூரில் பா.ஜ.கவுக்குத் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். 5 கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவும் இருக்கிறது.

மணிப்பூர் மாநில அரசியலில் பெரும் புயலே வீசுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், சிலபல கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க வுக்குத் தற்போது அதைத் தக்கவைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 9 எம்.எல்.ஏ க்கள் விலக்கிக்கொள்ள, 3 ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரேன் சிங்
பிரேன் சிங்

2017 சட்டப்பேர்வை தேர்தலில் நடந்தது என்ன?

60 இடங்களைக்கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2017 -ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பிடித்தது. பா.ஜ.கவோ 21 இடங்களைப் பிடித்தது. சில சிறிய கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தலா 4 உறுப்பினர்களைப் பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேச்சையுடன் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.க வின் பிரேன் சிங் முதல்வரானார்.

தற்போது 59 தொகுதிகளில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம் குமார் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் பா.ஜ.க பக்கம் தாவியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தவிர இன்னும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களின் ஆதரவு பா.ஜ.கவுக்குக் கிடைத்தது. அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Vikatan

இந்த நிலையில் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு சுயேச்சை ஆகியோர் ஆளும் பா.ஜ.க அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இந்த நிலையில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில், 3 பா.ஜ.க உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்தனர்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வழக்கைச் சந்திக்கும் 7 உறுப்பினர்கள் தவிர்த்து 20 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தற்போது வரை பா.ஜ.க அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 9 உறுப்பினர்கள் இனி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகிவிட்டது என்கிறர்கள் அரசியல் விமர்சகர்கள். பா.ஜ.க வுக்கு ஆதரவளிக்கும் 7 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், வழக்கு முடியும் வரை வாக்களிக்க முடியாது என்பதால் அவர்களால் பா.ஜ.க ஆட்சி கவிழ்வதை நிறுத்த முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

பா.ஜ.கவுக்குத் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். 5 கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவும் இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருபுறம் என்றால், நாளை அம்மாநிலத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலும் இந்த அரசியல் குளறுபடியால் பா.ஜ.கவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களை பா.ஜ.க விடம் இழந்த மாநிலங்களவை தொகுதிக்கு ஈடாக மணிப்பூரில் எப்படியாவது வெற்றிபெற்றிட வேண்டும் என காங்கிரஸ் முயல்கிறது. இதனால் நாளை நடைபெறும் மாநிலங்களவை தேர்தலும் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு