அரசியல்
Published:Updated:

நீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்!

ஜவாஹிருல்லா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா ஆதங்கம்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத சூழலிலும்கூட, மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலேயே பயணித்து வருகிறது மனிதநேய மக்கள் கட்சி. வரும் சட்டமன்றத் தேர்தலிலும், கூட்டணிக் கட்சி களுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து தி.மு.க தரப்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்திவரும் சூழலில், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினேன்...

“பாபர் மசூதி இடிப்பு வழக்கிலான தீர்ப்பை, ‘நீதியை சவப்பெட்டியில் வைத்து, கடைசி ஆணியையும் அறைந்துவிட்டனர்’ என்று நேரடியாக நீங்கள் விமர்சித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகாதா?’’

“பாபர் மசூதி இடிப்பு சம்பவம், விடுதலை இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்! 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்தத் தவறியதாக, உ.பி முதல்வர் கல்யாண்சிங்குக்குத் தண்டனை அளிக்கிறது உச்ச நீதிமன்றம். ‘இன்னொரு இடி இடியுங்கள்... பாபர் மசூதி கீழே விழுந்துவிடும்’ என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்ட மேடையில்தான் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர் என்று 2005-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிலும் பதிவாகியிருக்கிறது. ‘பாபர் மசூதி இடிப்பு என்பது நாட்டில் நடைபெற்ற மிக மோசமான சட்ட ஒழுங்கு அத்துமீறல்; அக்கிரமம்’ என்று 2019-ல் உச்ச நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது. இப்படி, அடுத்தடுத்து நீதிமன்ற உதாரணங்களே இருக்கிறபோது, ‘பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சம்பவம் அல்ல’ என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்களென்றால், ‘அநீதி நிகழ்ந்துவிட்ட சூழலிலும்கூட நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதென்பது கடினமான சூழலாக மாறிவிட்டது’ என்ற என் ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன்.’’

“ `பதவி, அதிகாரத்துக்காக இது போன்ற தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்குகின்றனர்’ எனத் தீர்ப்பின் உள்நோக்கம் குறித்தே நீங்கள் குற்றம்சாட்டுவது சட்டப்படி தவறுதானே..?’’

“சட்டப்படி தவறு என்று கருதி நீதிமன்றம் எனக்கு தண்டனை கொடுக்குமேயானால், அந்தத் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதேசமயம், நாட்டின் இன்றைய சூழலில், நீதிபதி லோயா போன்ற நேர்மையான நீதிமான்களும் இருக்கிறார்கள்; அச்சுறுத்தலுக்கு பயந்து அல்லது ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் அரச பதவிகளுக்கு ஆசைப்பட்டு நீதியை வளைத்துக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த யதார்த்தநிலையை வெளியே சொல்வதற்குப் பலரும் தயங்குகிறார்கள்... நான் தைரியமாகச் சொல்லியிருக்கிறேன்!’’

“ `ஹத்ராஸ் சம்பவத்துக்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’ என்று நீங்கள் கூறுவது நியாயம்தானா?’’

“ஹத்ராஸ் சம்பவம் மட்டுமல்ல... பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் உ.பி-யில் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதாக ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகம்’ புள்ளிவிவரங்கள் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில், நிகழ்ந்த அரியலூர் ரயில் விபத்துக்கு, தார்மிக அடிப்படையில் பொறுப்பேற்று, தனது ரயில்வே அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. எனவே, மாநில முதல்வர் என்ற வகையில் யோகி ஆதித்யநாத்தும் தார்மிக அடிப்படையில் பதவி விலக வேண்டும். மேலும், அவரைக் கைது செய்தால்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை இனியாவது அங்கு தடுக்க முடியும்!’’

நீதிமன்றம் சென்று நீதி பெறுவதென்பது இன்று கடினம்!

“ஹத்ராஸ் விவகாரத்தில், கொரோனாகால தடுப்பு எச்சரிக்கையையும் மீறி ராகுல் காந்தி ஊர்வலம் செல்ல முயன்றது பிரச்னையை திசைதிருப்பும் செயல்தானே?’’

“அப்படியென்றால், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, பாபர் மசூதி விழுந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடினார்களே... அப்போது கொரோனா நோய்த் தொற்று பரவிவிடும் என்று அரசு ஏன் கட்டுப்பாடு விதிக்கவில்லை... எனவே, கொரோனாவைக் காரணம் சொல்லும் யோக்கியதை யோகி ஆதித்யநாத்துக்குக் கிடையாது!’’

“ஹத்ராஸ் விவகாரத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த உமாபாரதியே கண்டிக்கிறார். மத்திய அரசும் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு’க்காக ‘பேட்டி பச்சாவ்’ திட்டத்தைச் செயல்படுத்திவரும்போது, இது போன்ற குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட அரசியல்தானே?’’

“ `பேட்டி பச்சாவ்’ என்பதே ஒரு வெற்று வாதம்... வெட்டிச் சொல்! பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான எந்தவோர் உருப்படியான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்றார்கள். ஆனால், பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை, ‘வேலையற்றோர் தினமா’கக் கொண்டாடும் சூழல்தான் நிலவுகிறது. விவசாயி களின் விளைபொருளுக்குக் ‘குறைந்தபட்ச விலையைவிடவும் ஒன்றரை மடங்கு அதிக விலை தருவோம்’ என்றார்கள். இப்போது புதிய சட்டங்கள் இயற்றி, ஆதாரவிலையையே அடியோடு எடுத்துவிட்டார்கள். `எல்.பி.ஜி மானியம், உங்கள் வங்கிக் கணக்குக்கே வரும்’ என்றார்கள். இப்போது, மானியத்தையே நிறுத்திவிட்டார்கள். இந்த வரிசையில்தான் `பேட்டி பச்சாவ்’ திட்டமும் இருக்கிறது!’’

“2019 நாடாளுமன்றத் தேர்தலில், ம.ம.க-வுக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கப்படவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க நேரடியாக 200 தொகுதிகளில் போட்டியிடப்போவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே..?’’

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலை, ‘மதச் சார்பற்ற இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற சமூகக் கண்ணோட்டத்திலேயே பார்த்தோம். அதனால்தான் எங்களுக்கென்று தொகுதிகள் ஒதுக்கப்படாத சூழலிலும்கூட, தி.மு.க கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டோம். அதற்கான பலனாக, மிகப்பெரிய வெற்றியை நாங்கள் ஆதரித்த தி.மு.க கூட்டணியும் பெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ம.ம.க-வுக்கு நிச்சயமாக கண்ணியமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்கும். தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!’’

“ஆனால், ‘கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று தி.மு.க கூட்டணிக் கட்சிகளேகூட வெளியேறலாம்’ என துரைமுருகன் பேசியிருப்பது, ‘கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்ற மறைமுக எச்சரிக்கையா?’’

“அப்படி நான் பார்க்கவில்லை... யதார்த்தமான அரசியல் சூழ்நிலையைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருமித்து நின்று தேர்தலைச் சந்திப்போம்!”