Published:Updated:

` `நீட்' விலக்குபோல ஆகிவிடுமோ?!'- வேளாண் மண்டல சட்டம் குறித்து ஐயப்படும் மணியரசன்

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

காவிரிப்படுகையில் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் எடுத்துள்ள இடங்களையும், திட்டங்களையும் இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்றுதானே அர்த்தம்.

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட முன்வடிவில் மிகப்பெரும் குறைபாடுகள் இருப்பதாக தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டுகிறார். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அவர் ``காவிரிப்படுகையில் ஏற்கெனவே செயலில் உள்ள திட்டங்களுக்கும் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரிப்படுகையில் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் எடுத்துள்ள இடங்களையும், திட்டங்களையும் இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்றுதானே அர்த்தம்.

காவிரி படுகை
காவிரி படுகை

இது இச்சட்டத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கத்துக்கே பொருத்தமில்லாதது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மேம்பாட்டு மண்டலத்தில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, லால்குடி, புள்ளம்பாடி ஆகிய பகுதிகளும் கரூர் மாவட்டத்தின் குளித்தலை பகுதியும் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் பகுதியும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் பகுதியும் இணைக்கப்படாமல் விடுபட்டுள்ளன. இப்பகுதிகள் காவிரிச் சமவெளியின் முக்கியமான வேளாண் பயிர் படுகைகளாகும். தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், திருச்சி மாவட்டம் சேர்க்கப்படவில்லை என்று முதலமைச்சர் கூறிய பதில் சரியில்லை.

இதை நிதானமாக ஆய்வு செய்து, சட்ட சிக்கல் எழாதவாறு, இதை சிறப்பான சட்டமாக உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்க, இச்சட்ட முன்வடிவை சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற இச்சட்டத்தின் நோக்கத்துக்கு இடையூறாக உள்ள திட்டங்களை நிறுத்தி வைக்க, மத்திய அரசும் துணை செய்ய வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார்.

` `நீட்' விலக்குபோல ஆகிவிடுமோ?!'- வேளாண் மண்டல சட்டம் குறித்து ஐயப்படும் மணியரசன்

அவசர அவசரமாக அரைகுறையாக இச்சட்டம் இயற்றப்பட்டிருப்பதும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டோம் என்று கூறுவதும் ஏற்புடையதல்ல. இந்தச் சட்டமும் `நீட்' விலக்கு சட்டம்போல ஆகிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சிறப்பு வேளாண் மண்டல நிர்வாகத்தைக் கவனிக்க முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு மாறாக, தன்னாட்சி அதிகாரமுள்ள வல்லுநர் குழுவாக அமைத்திருக்க வேண்டும்.

அதில் உழவர் பிரதிநிதிகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இச்சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பும் முன் விரிவான ஆய்வு செய்து, உரிய வல்லுநர்களைக் கொண்டு தேவையான திருத்தங்கள் செய்து காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உண்மையில் மாற்றுவதற்கு வெளிப்படையாக செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு