
மக்கள் செல்வாக்கோ தொண்டர் பலமோ இல்லாத மன்மோகன் நேரடியாகத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பிரதமராகவில்லை.
ஜி.டி.பி சரிவு போன்ற செய்திகளைக் கேட்கும்போதுதான் மன்மோகன்சிங் நினைவுக்கு வருகிறார். இவ்வளவுக்கும் ஆட்சியில் இருந்தபோது கார்ட்டூன்களாலும் மீம்ஸ்களாலும் கலாய்க்கப்பட்ட மன்மோகன்தான். ஆனால் மோடி ஆட்சியில் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் சரிந்துவரும்போது, ‘மோடி, மன்மோகன் யார் பெட்டர்?’ என்று பட்டிமன்றம் நடக்கிறது. இருவரின் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?
ஆட்சிக்கு வந்த கதை
மன்மோகன் சிங்: 1991-ல் நரசிம்மராவ் ஆட்சியின்போது நிதியமைச்சர். ஆனாலும் பிரதமர் ஆவார் என்று மன்மோகனும் நினைத்ததில்லை, மற்றவர்களும் நினைத்ததில்லை. 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியினர் ஆதரித்த போதிலும் ‘சோனியா ஓர் அந்நியர்’ என்ற பிரசாரத்தால் பிரதம மந்திரி பதவியை ஏற்க மறுத்த சோனியா, மன்மோகனைக் கைகாட்டி அரியணையில் அமரவைத்தார். இரண்டாவது முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்றபோதும் பிரதமரானார் மன்மோகன்சிங்.
மோடி: 1978-ல் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக இருந்த மோடி, பா.ஜ.க. என்னும் அரசியல் கட்சி உருவானபோது தன்னை அதில் இணைத்துக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் உயர்ந்து 2001-ல் பா.ஜ.க-வின் குஜராத் முதல்வர் ஆனார். 2002-ல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த குஜராத் இனப்படுகொலைகளும் மோடி ஆட்சியின் மிகப்பெரும் கரும்புள்ளியாக இருந்தபோதும் நான்குமுறை குஜராத் முதல்வராக நீடித்தார். ‘இந்தியாவிலேயே ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் அவதியுறும் மாநிலம்’ போன்ற பல மைனஸ்கள் இருந்தாலும் மோடி ஆட்சிக்காலத்து ‘குஜராத் மாடல்’ பிரதமர் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டது. ‘பெரும்பாலானவை போட்டோஷாப்’ என்று எதிர்த்தரப்பு குற்றம் சாட்டினாலும் மோடி வெற்றிபெற்று பிரதமரானார். முதல் ஆட்சியின்மீது எதிர்க்கட்சிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தாலும் இரண்டாம் முறையும் அமோகத் தனிப்பெரும்பான்மை பெற்று பிரதமராக ஆட்சியில் அமர்ந்தார் மோடி. அத்வானியின் விசுவாசமிக்க தொண்டனாக இருந்த மோடி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஓரங்கட்டி தன்னை அசைக்கமுடியாத தலைவராக நிலைநிறுத்திக்கொண்டது ‘அமைதிப்படை’ ரகசியம்.

பி.எம் பின்னணி
மன்மோகன் சிங்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். நரசிம்மராவ் ஆட்சியின்போது இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்திய நிதியமைச்சவர் இவரே. இடதுசாரிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் இருந்தபோதும் 30 ஆண்டுகள் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாடலே இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. மக்கள் செல்வாக்கோ தொண்டர் பலமோ இல்லாத மன்மோகன் நேரடியாகத் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பிரதமராகவில்லை. ஆட்சிக்காலம் முழுவதும் ‘சோனியாவின் பொம்மை’ என்றே விமர்சிக்கப்பட்டவர். சொந்தக் கட்சியினர் மீதும் கூட்டணிக்கட்சியினர் மீதும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் தன்னிச்சையாகத் துணிந்து நடவடிக்கைகள் எடுக்காதவர்.
மோடி: மன்மோகன் பொருளாதார மேதை என்றால் மோடி ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றவராகவே இந்திய வாக்காளர்களுக்கு அறிமுகமானார். ‘ஏழைத்தாயின் மகன்’ என்று தன்னை முன்னிறுத்திக்கொண்டார். மன்மோகனுக்குப் பின்னால் சோனியா இருந்ததைப்போல மோடிக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டாலும் தனக்கான இமேஜைத் தானே உருவாக்கிக்கொண்டு தனித்துவம் காட்டினார்.
ஊழல்வாதிகளை மன்மோகன் தடுக்கவில்லை என்றால்; ‘கோமியம் சாப்பிட்டால் கொரோனா சரியாகும்’ என்று உளறுபவர்களையும் வெறுப்புப்பேச்சு உமிழும் மதவாதிகளையும் மோடி தடுக்கவில்லை. மன்மோகனைப்போல் அல்லாமல் எதற்கும் தயங்காமல் பல அதிரடி முடிவுகளை எடுப்பவர் மோடி, கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு இரண்டு மசோதாக்கள், திட்டங்கள், அறிவிப்புகள் வருகின்றன. ஆனால் இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, விளைவுகள் என்ன என்பதுதான் பிரச்னை. ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என்பது சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்தியின் எமர்ஜென்சிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பெரிய அதிரடி நடவடிக்கை. ஆனால் ‘பணமதிப்பிழப்பால் கள்ளநோட்டுகள் குறையும். தீவிரவாதிகள் தாக்குதல் தடுக்கப்படும். கறுப்புப்பணம் ஒழியும்’ என்றெல்லாம் மோடி அறிவித்தாலும் அதற்குப்பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது, கள்ளநோட்டுகள் அதிகரித்திருக்கின்றன, பா.ஜ.க. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை வாங்குவதே கறுப்புப்பணத்தை வைத்தே என்ற உண்மைகள் சுடுகின்றன.
பிராண்டிங்

மன்மோகன் சிங்: கிட்டத்தட்ட ‘நேஷனல் பன்னீர்செல்வம்.’ ஆனால் ஹெலிகாப்டர் கும்பிடு, டயர் வணக்கம் எல்லாம் கிடையாது.ஜெயலலிதா இருக்கும்வரை எப்படி ஓ.பி.எஸ் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லையோ அதேபோல்தான் மன்மோகனும். சோனியாவே காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தப்பட மௌன மோகன்சிங்காகவே இருந்தார் மன்மோகன்.
மோடி: எந்த நிகழ்வாக இருந்தாலும் எங்கு கேமரா இருக்கிறது என்னும் வித்தையறிந்தவர். ஆறாண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றியிருக்கிறார். நாடே நெருக்கடியான சூழலில் இருக்கும்போது மோடியின் ‘மயில் போட்டோ ஷூட்’ சமீபத்தில் சர்ச்சையானது.
பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
மன்மோகன் சிங்: அதிகம் அதிர்ந்து பேசாதவர். மோடி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் அதிகம் விமர்சிக் கப்பட்டாலும் பதிலடி கொடுக்காதவர். ஆனால் அவரே ``வெறுமனே சொற்களால் அல்லாமல், செயல்களால் தேசத்தை சமாதானப்படுத்த வேண்டும் மிஸ்டர் மோடி!” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
மோடி: மன்மோகன் பொதுவாக யாரையும் விமர்சிக்க மாட்டார் என்றால் மோடி நேரு வரை தோண்டியெடுத்து விமர்சித்து, இப்போது இந்தியாவில் நடக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் அவர்தான் காரணம் என்பார். மேலும், பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை, பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டாலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காங்கிரஸைக் கடுமையாக விமர்சிப்பார் மோடி.
நீங்களே சொல்லுங்கள்!
மன்மோகன், மோடி இருவருமே எதிரெதிர்த்துருவங்கள். ஒருவர் அமைதிப்படை என்றால் இன்னொருவர் அதிரடிப்படை. இருவர் ஆட்சியின் சாதனைகளையும் வேதனைகளையும் பட்டியலிட்டிருக்கிறோம். அவற்றை அலசி ஆராய்ந்து எந்தப் படை சிறந்த படை என்று முடிவுசெய்யுங்கள் மக்களே!
சாதனை Vs வேதனை!
மன்மோகன் சிங்:சாதனைகள்
மன்மோகன் ஆட்சியின் இரு முக்கியமான சாதனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கல்வி உரிமைச் சட்டமும். ஒரு சாதாரணக் குடிமகன் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராக சட்டப்போர் நடத்தும் ஆயுதமாக விளங்கிவருகிறது ‘தகவல் அறியும் உரிமை.’ மன்மோகன் ஆட்சியாக இருந்தாலும் சரி, மோடி, எடப்பாடி ஆட்சியாக இருந்தாலும் சரி, பல ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானது தகவல் அறியும் உரிமைமூலம். அதேபோல் ‘கல்வி உரிமைச் சட்டம்’ முழுமையாக நடைமுறைப்படுத் தவில்லை என்றாலும் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும் என்பது முக்கியமான அம்சம். இதை மாநில அரசுகள் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டங்கள், மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005-ல் சட்டம்., கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் போன்றவையும் முக்கிய சாதனைகள்.
வேதனைகள்
சோனியாவின் தலையாட்டி பொம்மையாக இருந்ததால் பல முக்கியமான முடிவுகளைத் துணிச்சலாக மன்மோகனால் எடுக்க முடியவில்லை. நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி என வாராவாரம் புதுப்பட ரிலீஸ் போல ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகின. லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றச்சாட்டு, தமிழக மீனவர் படுகொலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இயற்கை வளங்களைச் சுரண்டி, பழங்குடிமக்கள்மீது தாக்குதல் நடத்திய ‘ஆபரேஷன் பச்சை வேட்டை’ ஆகியவை வேதனைகள்.

மோடி:சாதனைகள்
மோடி பல்வேறு ‘இந்தியா’க்களை அறிவித்தாலும் அதில் ஓரளவு வெற்றிபெற்றது ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம். குடிமக்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்குகளை ஆரம்பித்த ஜன்தன் வங்கிக்கணக்குத் திட்டமும் மிக முக்கியமான திட்டம். தண்ணீர்க்கெனத் தனி ஜல்சக்தித்துறை ஒன்றை உருவாக்கியது, திருநங்கை களுக்கான தேசிய கவுன்சில் போன்றவற்றை உள்ளடக்கிய திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை முக்கிய சாதனைகள்.
வேதனைகள்
விதவிதமான பெயர்களில் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் பெரும்பாலானவை பெயரளவிலேயே நிற்பது வேதனை. உதாரணம்: தூய்மை இந்தியா. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இருந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தது அவர் கட்சியினருக்கு சாதனை. ஆனால் அவை எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருபுறம் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு இன்னொருபுறம் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ‘முன்னேறிய சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு’ கொண்டுவந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
மாநில அரசின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுகின்றன. சுயேச்சை நிறுவனங்களான சி.பி.ஐ, நீதித்துறை, ரிசர்வ் வங்கி ஆகியவையும் அதிகாரம் குறைக்கப்பட்டு டம்மி ஆக்கப்படுகின்றன.
ரபேல் ஊழலைத்தாண்டி பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும், கோடிக்கணக்கில் பணம் இறைக்கப்பட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை பா.ஜ.க. வாங்குவது ஊழல் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ‘ஜெய்ராம்’, மாட்டிறைச்சி எனப் பலப்பல காரணங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் எப்போதும் ஒரு பதற்ற நிலையிலேயே இருப்பது, பட்டியலின மக்கள்மீதான தாக்குதல் ஆகியவை மோடி அரசின் மீதான கரும்புள்ளிகள்.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் வெளியுறவும் மேம்படவில்லை; பொருளாதாரமும் உயரவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் இருக்கும் எல்லைத் தலைவலிகள் என்றால், இப்போது சுண்டைக்காய் நேபாளம்கூட இந்தியாவை மிரட்டிப்பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆட்டோமொபைல் துறை சரிவு, ஜி.டி.பி வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறையாத பெட்ரோல், டீசல் விலை ஆகியவை மோடி அரசின் படுதோல்விகள்.