Published:Updated:

சாதனைகள் Vs வேதனைகள்... மன்மோகன், மோடி... யார் பெஸ்ட் பி.எம்?

மன்மோகன் vs மோடி
மன்மோகன் vs மோடி

ஆட்சிக்கு வந்த கதை, பி.எம் பின்னணி, பிராண்டிங், பேச்சுகள் உள்ளிட்ட அம்சங்களுடன், மன்மோகன் - மோடி குறித்த ஒப்பீட்டு அலசல்!

மன்மோகன் சிங்... சாதனைகளும் வேதனைகளும்:

சாதனைகள்: மன்மோகன் ஆட்சியின் இரு முக்கியமான சாதனைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கல்வி உரிமைச் சட்டமும். ஒரு சாதாரணக் குடிமகன் அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராக சட்டப்போர் நடத்தும் ஆயுதமாக விளங்கிவருகிறது 'தகவல் அறியும் உரிமை.' மன்மோகன் ஆட்சியாக இருந்தாலும் சரி, மோடி, எடப்பாடி ஆட்சியாக இருந்தாலும் சரி, பல ஊழல்களும் முறைகேடுகளும் அம்பலமானது தகவல் அறியும் உரிமைமூலம்.

அதேபோல் 'கல்வி உரிமைச் சட்டம்' முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும் என்பது முக்கியமான அம்சம். இதை மாநில அரசுகள் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் அமைப்புச் சட்டங்கள், மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்க 2005-ல் சட்டம், கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம் போன்றவையும் முக்கிய சாதனைகள்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

வேதனைகள்: சோனியாவின் தலையாட்டி பொம்மையாக இருந்ததால் பல முக்கியமான முடிவுகளைத் துணிச்சலாக மன்மோகனால் எடுக்க முடியவில்லை. நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி என வாராவாரம் புதுப்பட ரிலீஸ் போல ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகின. லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றச்சாட்டு, தமிழக மீனவர் படுகொலைகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இயற்கை வளங்களைச் சுரண்டி, பழங்குடிமக்கள்மீது தாக்குதல் நடத்திய 'ஆபரேஷன் பச்சை வேட்டை' ஆகியவை வேதனைகள்.

மோடி... சாதனைகளும் வேதனைகளும்:

சாதனைகள்: மோடி பல்வேறு 'இந்தியா'க்களை அறிவித்தாலும் அதில் ஓரளவு வெற்றிபெற்றது 'டிஜிட்டல் இந்தியா' திட்டம். குடிமக்கள் அனைவருக்கும் வங்கிக்கணக்குகளை ஆரம்பித்த ஜன்தன் வங்கிக்கணக்குத் திட்டமும் மிக முக்கியமான திட்டம். தண்ணீர்க்கெனத் தனி ஜல்சக்தித்துறை ஒன்றை உருவாக்கியது, திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சில் போன்றவற்றை உள்ளடக்கிய திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை முக்கிய சாதனைகள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

வேதனைகள்: விதவிதமான பெயர்களில் புதிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் பெரும்பாலானவை பெயரளவிலேயே நிற்பது வேதனை. உதாரணம்: தூய்மை இந்தியா. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் இருந்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவந்தது அவர் கட்சியினருக்கு சாதனை. ஆனால் அவை எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருபுறம் மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு இன்னொருபுறம் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக 'முன்னேறிய சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு' கொண்டுவந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மாநில அரசின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுகின்றன. சுயேச்சை நிறுவனங்களான சி.பி.ஐ, நீதித்துறை, ரிசர்வ் வங்கி ஆகியவையும் அதிகாரம் குறைக்கப்பட்டு டம்மி ஆக்கப்படுகின்றன. ரபேல் ஊழலைத்தாண்டி பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும், கோடிக்கணக்கில் பணம் இறைக்கப்பட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை பா.ஜ.க. வாங்குவது ஊழல் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 'ஜெய்ஸ்ரீராம்', மாட்டிறைச்சி எனப் பலப்பல காரணங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் எப்போதும் ஒரு பதற்ற நிலையிலேயே இருப்பது, பட்டியலின மக்கள்மீதான தாக்குதல் ஆகியவை மோடி அரசின் மீதான கரும்புள்ளிகள்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் வெளியுறவும் மேம்படவில்லை; பொருளாதாரமும் உயரவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் இருக்கும் எல்லைத் தலைவலிகள் என்றால், இப்போது சுண்டைக்காய் நேபாளம்கூட இந்தியாவை மிரட்டிப்பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆட்டோமொபைல் துறை சரிவு, ஜி.டி.பி வீழ்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறையாத பெட்ரோல், டீசல் விலை ஆகியவை மோடி அரசின் படுதோல்விகள்.

- ஆட்சிக்கு வந்த கதை, பி.எம் பின்னணி, பிராண்டிங், பேச்சுகள் உள்ளிட்ட அம்சங்களுடன், மன்மோகன் - மோடி குறித்த ஒப்பீட்டு அலசலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மன்மோகன் சிங் - நரேந்திர மோடி - யார் சிறந்த பிரதமர்? https://bit.ly/3hph66l

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு