Published:Updated:

`மன்னார்குடியைத் தலைநகரமாகக்கொண்ட மாவட்டம்!’ - அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் தீர்மானம்

மன்னார்குடி மக்கள் ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடி மக்கள் ஆலோசனைக் கூட்டம்

மன்னார்குடியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.

தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் எப்போதும் கீரியும் பாம்புமாக எதிர் எதிர் அணியாக நிற்பது வழக்கம். காங்கிரஸ் - பா.ஜ.க-வினரும் அப்படித்தான். இந்தநிலையில்தான் மன்னார்குடியில் அனைத்துக் கட்சி அரசியல் நிர்வாகிகளும் ஒன்றாகக் கைகோத்து மக்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள, மன்னார்குடியைத் தலைநகரமாகக்கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும், இதற்காக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மீண்டும் மறுவரையறை செய்ய வேண்டும் எனவும் மன்னார்குடியிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.

மன்னார்குடி
மன்னார்குடி

மன்னார்குடி நகரத்தை, மாவட்டத் தலைநகரமாகத் தரம் உயர்த்த வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளாக மன்னார்குடி மக்கள் வலியுறுத்திவருகிறார்கள். அந்தக் கோரிக்கை தமிழக ஆட்சியாளர்களால் நீண்டகாலமாகப் பரிசீலிக்கப்படாமலேயே இருக்கிறது. இந்தநிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்லும் வகையில், மன்னார்குடியிலுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றினார்கள். வர்த்தக சங்கம், லயன்ஸ், ரோட்டரி, ஜே.சி.ஐ அமைப்புகளின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் எனப் பலதரப்பினரும் இதில் கலந்துகொண்டார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய இந்தப் பகுதி மக்கள், ‘’மன்னார்குடி நகரம், 150 ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பெருமைகொண்டது. 1942 `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்கேற்ற நகரம் இது. தேசியம், திராவிடம், பொதுவுடைமை, கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் இந்தப் பகுதியில் உருவாகி தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இது வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி மட்டுமல்ல, விவசாயம் மற்றும் வணிகத்துக்கும் பெருமை பெற்ற பகுதி. மன்னார்குடி நகரம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்கள் பரப்பளவில் மிகப்பெரியது. இங்கு மக்கள்தொகையும் அதிகம். ஆனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சிபெறாமலேயே இருக்கின்றன. குறிப்பாக, கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில், அரசுத் துறைகளின் அவசர உதவிகள் உடனடியாகக் கிடைப்பதில்லை.

மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், முன்பு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்ததாலும், தற்போது இவை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளடங்கி இருப்பதாலும்தான் இந்த நிலை தொடர்கிறது. மன்னார்குடியைத் தலைநகரமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கினால்தான் இந்தப் பகுதி போதிய வளர்ச்சி அடையும். அரசின் நிர்வாகத்துக்கும் எளிதாக இருக்கும்.

மன்னார்குடி
மன்னார்குடி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் என நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைய, 10 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்கின்ற அடிப்படையில், குறைந்தபட்சம் இதை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து உருவாக்கலாம். அதன்படி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும். 150 ஆண்டுகள் பழைமைமிக்க கட்டமைப்புகளைக்கொண்ட மன்னார்குடியைத் தலைமையிடமாகக்கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

அந்த மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் வருவாய் வட்டங்கள், அதேபோல் நிலுவையிலுள்ள முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தையும் இணைப்பதோடு, பட்டுக்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள மதுக்கூர் நகரத்தையும், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி நகரத்தைத் தலைமையிடமாகக்கொண்ட புதிய வருவாய் வட்டங்களை உருவாக்கி, மேற்கண்ட வட்டங்களை இணைத்து, மன்னார்குடியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள். மன்னார்குடி மக்களின் தீர்மானம், தமிழக அரசின் தீர்மானமாக அமையுமா என்பது விரைவில் தெரியும்!

அடுத்த கட்டுரைக்கு