கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசி கொடைவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தக் கோயிலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற்றுவந்த இந்து சமய மாநாட்டை, இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்திவருகின்றன. `85 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்து சமய மாநாட்டை தடைசெய்ய, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டமிடுகிறார்' என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில், `பொன்.ராதாகிருஷ்ணன் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடகம் ஆடுகிறார்' என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து பொய்யான கருத்தை பரப்பி அரசியல் ஆதாயம் பெற முடியுமா என பொன்.ராதாகிருஷ்ணன் நினைக்கிறார். மண்டைக்காடு மாசி கொடைவிழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்துவருகிறது. இதில் எந்தவித அரசியலோ, உள்நோக்கமோ கிடையாது. பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் உடனடியாக தமிழக அரசு சுமார் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பழைமை மாறாமல், கோயில் ஆச்சார விதிகளின்படி புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கோயில் திருப்பணி சம்பந்தமாக பிரசன்னம் பார்க்க வேண்டும் எனப் பக்தர்கள் வைத்த கோரிக்கையை அரசு நிறைவேற்றிக் கொடுத்தது. இந்தத் திருவிழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் எனப் பல அமைப்புகளும், பக்தர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மிகச் சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. அதில், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் சில அமைப்புகளை முன்னிறுத்தி சமய மாநாடு என்ற பெயரில் மக்களிடம் நிதி வசூல் செய்வதோடு, மாநாடு என்ற பெயரில் அரசியல் விழா நடத்தவும் முயற்சி செய்கிறார்கள். யாரும் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்ய வேண்டாம். அரசே அதை நடத்தும் என இந்து சமய அறநிலையத்துறை சொல்லியிருக்கிறது.
அரசு நடத்தாமல் இருந்தால், அவர்கள் நிதி வசூலித்துச் செய்யலாம். அரசே நிதி ஒதுக்கீடு செய்து சமய மாநாடு நடத்த தயாராக இருக்கிறது. அதில் யார், யார் சேர்ந்து பணி செய்ய வேண்டுமோ பணி செய்யட்டும். மாசி கொடைவிழா பெயரைச் சொல்லி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது. இதற்கு முன்பு அரசு நிதி ஒதுக்காததால் தனிநபர்கள் நடத்தியிருக்கலாம். அப்படித் தனியார் நடத்தியதில் நிதி நிறைய வசூல் செய்வதாகப் புகார் வந்திருக்கிறது. இப்போது ஆலயம் சார்பில் சமய மாநாடு நடத்துவதால், தனியார் அமைப்புகள் நடத்தவேண்டிய அவசியம் எழவில்லை. சுகி சிவம் உள்ளிட்ட சமய சொற்பொழிவாளர்கள் வந்து சமய சொற்பொழிவு ஆற்றவிருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளைவிடவும் இந்த ஆண்டு சமய மாநாடு சிறப்பாக நடக்கும்.

மண்டைக்காட்டில் சமய மாநாட்டைத் தடைசெய்ததாக போலியான பிரசாரம் செய்கிறார்கள். சமய மாநாடு, கலைநிகழ்ச்சிகள், பூஜை பரிகாரங்கள் நடைபெறவிருக்கின்றன. தேவசம்போர்டு இடத்தில் அரசு முன்னின்று நடத்துவதால் எந்த அமைப்பும் நடத்த வேண்டாம். கடந்த அ.தி.மு.க அரசும், பா.ஜ.க-வும் எந்தவிதமாக நிதி ஒதுக்கீடும் ஆலயங்களுக்குச் செய்யவில்லை. அதனால் சிலர் நடத்தியிருக்கலாம். ஆனால், இப்போதைய அரசு கொள்கை முடிவின்படி, நிதி ஒதுக்கியிருக்கிறது. எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடந்துகொண்டிருக்கிறது. அதை பா.ஜ.க சொல்லமுடியாது. தி.மு.க எப்படி ஓர் அரசியல் கட்சியோ, அதுபோல பா.ஜ.க-வும் ஓர் அரசியல் கட்சி. அவர்கள் மதத்தை வைத்து, தங்கள் சுயநலத்துக்காக அரசியல் செய்வதால் இப்படிப்பட்ட போராட்டங்களைச் செய்கிறார்கள். பா.ஜ.க சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிச் சொல்ல எந்தத் தார்மீக உரிமையும் பா.ஜ.க-வுக்கு இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். தனது அடையாளத்தைக் காட்டிக்கொள்ள பொய்ப் பிரசாரம் செய்கிறார்.

அவர்களும் வந்து நின்று நடத்துவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. மக்கள் புரிந்துகொண்டால் போராட்டம் முடிந்துவிடும். நாங்கள் நினைத்தால் பத்தாயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்த முடியாதா... இந்து சமய மாநாட்டில் முன்பைவிட கூட்டம் வரும், நிகழ்ச்சி நன்றாக நடக்கும். கடவுள் என ஒரு சக்தி இருந்தால் பொன்.ராதாகிருஷ்ணனின் வித்தை பொய் எனத் தெரியும். பத்து நாளும் எல்லா நிகழ்ச்சிகளும் முறையாக நடைபெறும். சமய மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொள்வார்" என்றார்.