Published:Updated:

சைதை சாதிக் விவகாரம்: ``மேடையிலேயே அவரைக் கண்டித்தேன்” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

'அந்தப் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நான் அந்த மேடைக்குச் சென்றேன். பெண்களை இழிவாகப் பேசுவது என்பதில் எனக்கோ, கழகத்துக்கோ உடன்பாடு இல்லை. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.' மனோ தங்கராஜ்.

சைதை சாதிக் விவகாரம்: ``மேடையிலேயே அவரைக் கண்டித்தேன்” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

'அந்தப் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நான் அந்த மேடைக்குச் சென்றேன். பெண்களை இழிவாகப் பேசுவது என்பதில் எனக்கோ, கழகத்துக்கோ உடன்பாடு இல்லை. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.' மனோ தங்கராஜ்.

Published:Updated:
மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகுதி சபா கூட்டம், வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கவிழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ஒரு கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டு, மாநில அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர்கள், தங்கள் எல்லையை அறிந்து அவற்றிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்கிறார்களா என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துவருகிறார்கள். ஆளுநர்களை யார் செயல்படுத்துகிறார்கள் என்பது பொதுமக்களுக்குத் தெரியும்" என்றார்.

பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்
பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் திமுக-வின் சைதை சாதிக் பா.ஜ.க-வில் இருக்கும் பெண்கள் குறித்துப் பேசியது பற்றியும், நடிகை குஷ்பு அந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறுவது குறித்தும், பா.ஜ.க போராட்டம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் கூறுகையில், "சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நான் அந்த மேடைக்குச் சென்றேன். அவர் பேசிவிட்டு வந்து அமர்ந்ததும் `இது போன்று பேசுவது சரியல்ல’ என மேடையில் வைத்தே அவரைக் கண்டித்தேன். நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன் ஆனால் தரம்தாழ்ந்து யாரையும் விமர்சித்துப் பேசியதில்லை.

பெண்களை இழிவாகப் பேசுவது என்பதில் எனக்கோ, கழகத்துக்கோ உடன்பாடு இல்லை, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குஜராத்தில் வீட்டுக்குள் புகுந்து ஆண்களைக் கொலைசெய்துவிட்டு, கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பா.ஜ.க அரசால் விடுதலையாகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜ.க கட்சியினருக்கு, பெண்களுக்காகப் போராட்டம் நடத்துவதற்குத் தகுதியே இல்லை. தங்களை விளம்பரப்படுத்துவதற்காக அரசியல் கோமாளியாக அண்ணாமலை செயல்படுவது அட்டூழியம்போலக் காட்சியளிக்கிறது" என்றார்.