Published:Updated:

நான் இந்த சைடிலிருந்து அடிப்பேன்... சீமான் அந்த சைடிலிருந்து அடிப்பார்!

மன்சூர் அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
மன்சூர் அலிகான்

- மன்சூர் அலிகான் டிஷ்யூம்

நான் இந்த சைடிலிருந்து அடிப்பேன்... சீமான் அந்த சைடிலிருந்து அடிப்பார்!

- மன்சூர் அலிகான் டிஷ்யூம்

Published:Updated:
மன்சூர் அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
மன்சூர் அலிகான்

ஓஜா, அர்ஜுனமூர்த்தி என்று தமிழ்நாட்டில் புதிய கட்சி தொடங்கியவர்களில் லேட்டஸ்ட் வரவு நடிகர் மன்சூர் அலிகான். ‘நாம் தமிழர்’ கட்சியில் தமிழ்த்தேசியம் பேசிவந்தவர், தேர்தல் நெருக்கத்தில், ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’ என்ற பெயரில், புதிய கட்சியை ஆரம்பித்து களத்தில் குதித்திருக்கிறார். அவரை நேரில் சந்தித்தோம்...

“நாம் தமிழர் கட்சியில் நீங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால்தான் வெளியேறினீர்கள் என்று சொல்லப்படுகிறதே?”

“யார் சொன்னார்கள்? சீட் ஒதுக்குவதில் தாமதமாகிக்கொண்டிருந்தது. மற்றபடி எனக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்றெல்லாம் வில்லத் தனமாக மாற்றிச் சொல்லக் கூடாது. இப்படித்தான் சமீபத்தில் கோவைக்கு மோடி வந்திருந்ததைச் சுட்டிக்காட்டி, ‘இதோ வந்து நிக்கிறாரு...’ என்று பேச்சுவாக்கில் சொல்லியிருந்தேன். உடனே இந்த வார்த்தையை மட்டும் வெட்டியெடுத்து, சசிகலா - சீமான் சந்திப்பு வீடியோவோடு சேர்த்து மீம்ஸ் ரெடி செய்துவிட்டார்கள். சீமானுக்கு எதிராக என்னைக் காட்டுவதில் ரொம்பத்தான் குஷி!’’

“அப்படியென்றால் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன?’’

“நாமும் பல வருடங்களாக அரசியலில் இருக்கிறோம். சரி... புதிதாகக் கட்சி ஆரம்பித்துவிடுவோம் என்றுதான் ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’யை ஆரம்பித்துவிட்டேன். ‘திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டாலும், காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன’ என்று சொல்லிவிட்டார் அண்ணா. அதுபோல் இப்போது நாம் விட்டுவிட முடியாது. மொழிவழி மாநிலமான தமிழ்நாட்டில், இனிமேல் தமிழ்த் தேசியம்தான் எல்லாமே. சோற்றைச் சாப்பிடுகிற நாம் இந்தக் காற்று, தண்ணீர், மண்ணுக்கு நியாயமாக இருக்க வேண்டாமா? ரயில்வே, நிலக்கரிச் சுரங்கம், மின்வாரியம் என எல்லாவற்றிலும் வேறு மாநிலத்துக்காரன்தான் இருக்கிறான். தமிழன் என்ன நாக்கு வழிக்கவா இருக்கிறான்... இந்த திராவிடக் கட்சிகள் இதற்காக என்ன செய்துவிட்டன? இந்தப் பிரச்னைக்கெல்லாம் என் கட்சி தீர்வுகாண முயலும்.’’

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

“ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியில் இருந்தபோதும் இதைத்தானே செய்துவந்தீர்கள்... இப்போது புதிதாகக் கட்சி தொடங்கி குரல் கொடுக்க வேண்டிய தேவை என்ன?’’

“மனுஷன் ஒற்றை ஆளாகக் கஷ்டப்படுகிறார். போராளிகளை நாம் இழந்துவிடக் கூடாது. அதனால்தான், நான் இந்த சைடிலிருந்து அடித்துக்கொண்டே வருகிறேன். அவர் அந்த சைடிலிருந்து அடித்துக்கொண்டே வரட்டும்... எல்லாம் ஒன்றுதானே!’’

“அப்படியென்றால், தேர்தலில் ‘நாம் தமிழர்’ வேட்பாளர்களை எதிர்த்து உங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்களா?’’

“அவர்களும் போட்டியிடுவார்கள். நாங்களும் போட்டியிடுவோம்... உங்களுக்கு என்ன பிரச்னை? ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றொழித்தார்களே... அதைப் பற்றி எழுதினீர்களா? டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்களே... அவர்களைப் போய்ப் பார்த்து பேட்டி எடுத்தீர்களா? அடுத்த கேள்விக்கு வாங்க...’’

“ ‘நாம் தமிழர்’ கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தால், புதிய கட்சியே ஆரம்பித்திருக்க மாட்டீர்கள்தானே?’’

“சீட் ஒதுக்க தாமதமானது என்பது முக்கியக் காரணம் அல்ல... நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்டதால் யதேச்சையாக அப்படிச் சொன்னேன். மற்றபடி சீமான் பாசக்கார மனிதர்; எனக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. எல்லா மேடைகளிலும் என்னை ‘அண்ணா, அண்ணா’ என்றுதான் அழைப்பார். சகோதரத்துவத்துடன்தான் நடந்துகொள்வார். சமீபத்தில், எனது உறவினர் ஒருவர் இறந்தபோதுகூட, துக்க நிகழ்ச்சியில் ‘பிடி மண்’ போடுவது வரை கூடவே இருந்தார்.’’

“நாம் தமிழர் கட்சியில், நீங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால்தான், புதிய கட்சி ஆரம்பித்து, சேப்பாக்கத்தில் போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகினவே?’’

“சேப்பாக்கம் தொகுதியில் நிற்கப்போவதாக முதலில் அறிவித்திருந்தேன். ஆனால், சுற்றுப் பயணம் செய்து பார்த்தேன். அது மனசுக்குச் சரிப்பட்டு வரவில்லை. இப்போதுதான் நான் விலகிவந்துவிட்டேனே... இனி எந்தத் தொகுதியில் நிற்பது என்று முடிவு செய்யவில்லை.’’

“தேர்தலில், இஸ்லாமியர்களின் வாக்குகளைத் தனியே பிரித்தெடுக்கும் முயற்சியாகவே மன்சூர் அலிகான் புதிய கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்களே..?’’

“அப்படியெல்லாம் கிடையாது. நான் எப்போதும் தமிழனாக மட்டுமே இங்கே பயணிக்கிறேன். பிறப்பால் நான் ஒரு தமிழன். ‘மன்சூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறாயே... நீயெல்லாம் தமிழனா...’ என்று முட்டாள்தனமாகப் பலரும் கேட்கிறார்கள். ஆனால், நான் அனுபவித்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்புகூட துபாயில், நான் தொழுகைக்குச் சென்றிருந்தபோது என் இடப்பக்கம் சீனாவைச் சேர்ந்த இக்பால், வலப்பக்கம் உகாண்டாவைச் சேர்ந்த காதர் எனப் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் தொழுகையில் ஈடுபட்டோம். ஆக, நாடு வேறாக இருந்தாலும் எங்களை இந்தப் பெயர் ஒருங்கிணைக்கிறது என்கிறபோது இது தேவையாக இருக்கிறது. ஆனால், நம்மூரில் ஒரு தெரு வழியே பிணத்தைக்கூட தூக்கிப்போக விடாமல் தகராறு செய்கிறார்கள். இந்த வேற்றுமை எதற்கு? நான் ஒரு நடிகன்; எல்லோருக்கும் பொதுவானவன். என்னை மதரீதியாகப் பிரிக்காதீர்கள்.’’

“சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, விடுதலையாகிவந்த சசிகலாவை சீமான் சந்தித்திருக்கிறாரே?’’

“நீங்கள் என்ன வேலையாக வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது... பேட்டி முடிந்து விட்டது. நன்றி... வணக்கம்!’’