Published:Updated:

"சம்பளப் பட்டியலில் இருப்பதால், அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்"-சீமான் குறித்து மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

விலைவாசி உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம், அமைச்சர்கள், மேயர் தொடர்பாக எழும் சர்ச்சைகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க ஐ.டி விங் ஆலோசகர், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

"சம்பளப் பட்டியலில் இருப்பதால், அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்"-சீமான் குறித்து மனுஷ்ய புத்திரன்

விலைவாசி உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம், அமைச்சர்கள், மேயர் தொடர்பாக எழும் சர்ச்சைகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க ஐ.டி விங் ஆலோசகர், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

Published:Updated:
மனுஷ்ய புத்திரன்

உதயநிதி மூலம் மீண்டும் தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை தி.மு.க முன்னெடுக்கிறது என்ற விமர்சனம் தொடங்கி, புயலுக்கு மரப்பாலம் உடைந்தது, விலைவாசி உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம், அமைச்சர்கள், மேயர் தொடர்பாக எழும் சர்ச்சைகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க ஐ.டி விங் ஆலோசகர், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

“உதயநிதியை அமைச்சராக்கியதன்மூலம் வாரிசு அரசியலை தி.மு.க தொடர்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறதே?”

“யாருக்கு வாய்ப்பளிப்பதென்பது ஒரு கட்சியினுடைய தனிப்பட்ட முடிவு. எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகி அம்மையார் முதலமைச்சர் ஆக்கப்பட்டபோதும் அல்லது எம்.ஜி.ஆரின் நண்பர் என்கிற ஒரே தகுதியில் ஜெயலலிதாவிற்கு முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டபோதும், ஜெயலலிதாவின் சினேகிதி என்ற ஒரே தகுதியில் சசிகலா ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தியபோதும் ஏன் இந்தக் கேள்விகள் எல்லாம் எழவில்லை. மாறாக, இளைஞரணிச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உதயநிதியின் செயல்பாடுகள் சிறப்பானதாக இருந்ததாலேயே அவர் அமைச்சர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். அதை மட்டும் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். விமர்சனம் என்ற பெயரில் பிதற்றுகிறார்கள்”

“ `உதயநிதியை அரசியலுக்குக் கொண்டுவந்து ஜனநாயகத்தைக் கொலைசெய்துவிட்டீர்கள்’ என்கிறார்களே?

“இதுபோன்ற பேத்தல்களுக்கு எதாவது அர்த்தம் இருக்கிறதா? ஜனநாயகத்திற்கு இவர்கள் வைத்திருக்கும் வரையறை என்ன? லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மிக இளம் வயதில் துணை முதல்வரானபோதும், முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சரானபோதும் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வரானபோதும் ஜனநாயகப் படுகொலையென்று யாரும் சொன்னார்களா? தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் எல்லாவற்றிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் வாரிசு அரசியல் இல்லாமல் வந்த மோடிதான் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையைச் செய்துகொண்டிருக்கிறார். அரசியலோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரியைக் கட்சிக்குள் கொண்டுவந்து எட்டே மாதத்தில் அவரைத் தலைவராகவும் ஆக்கினார்களே அதுதான் ஜனநாயகப் படுகொலை.”

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

“சமீபத்தில் தி.மு.க-வுக்கு வந்தவர்கள் பலர் அணித் தலைவர்களாக, வாரியத் தலைவர்களாக, அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என நினைக்கிறீர்களா?”

“2013-ல் நான் தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொண்டபோது ஊடகங்களில் கழகத்தின்மீது கடும் அவதூறுகள் பரப்பப்பட்ட காலம். அவற்றிற்கு எதிராகக் கடுமையாகப் போராடினேன். இன்றளவும் அந்தப் போராட்டம் தொடர்கிறது. இதற்காக, சமூக வலைதளங்களில் என்மீது எவ்வளவோ தனிப்பட்ட தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு தத்துவம் என்ற அடிப்படையில் எனது பங்களிப்புகளைக் கடந்த எட்டாண்டுகளாகக் கழகத்திற்கு முழுமையாகச் செய்துவந்திருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட எல்லாப் பொறுப்புகளிலும் செவ்வனே செயல்பட்டிருக்கிறேன். எந்த நேரத்தில் எந்தப் பொறுப்பை யாருக்கு வழங்கவேண்டும் என்பது தலைவருக்கு நன்கு தெரியும். நான் தி.மு.க அதிகாரத்தில் இருக்கும்போது கட்சிக்கு வந்தவனல்ல. அது போராடிக்கொண்டிருந்தபோது ஒரு சிப்பாயாக என்னை இணைத்துக்கொண்டவன். தலைவர்மீது எனக்கிருக்கும் நம்பிக்கை மிகப் பெரியது. எனக்கு எது உரியதோ அதை இந்த இயக்கம் தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது, இனியும் வழங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.”

“அமைச்சர்கள் தொடங்கி, மேயர்கள் வரை தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருக்கிறார்களே?”

“தி.மு.க-வில் தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் என்று யாரும் இல்லை. சில சமயம் சிறிய பிரச்னைகள் ஊடகங்களால் பெரிதாக்கப்படுகின்றன.”

“ `எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த பல திட்டங்களை இப்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகு தி.மு.க செயல்படுத்துகிறது’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”

“அப்படி ஒன்றுமில்லை. எங்களுக்குச் சில திட்டவட்டமான கொள்கைகள் இருக்கின்றன. அந்தக் கொள்கைகளுக்குப் புறம்பான எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநில சுயட்சிக்காகவும் சமூகநீதிக்காகவும் இன்னும் இடையறாது போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்தான்.”

சென்னை மெரினா
சென்னை மெரினா

“ ‘மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரையில் அமைத்த பாலம் தரமற்றதாக இருந்தது. ஒரு புயலுக்கே தாங்கவில்லை. ஊழல் நடந்திருக்கிறது’ என்கிறார்களே?”

“அதென்ன கரிகாலன் கட்டிவைத்த கல்லணையா எந்த பாதிப்பும் வராமலிருக்க? மரப்பாலம் தானே? புயலில் நூற்றாண்டு மரங்களே சாயும்போது கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு மரப்பாலம் எப்படித் தாங்கும்? கடற்கரையில் கான்கிரீட் கட்டுமானங்களை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசின் சுற்றுசூழல் பாதுகாப்புத்துறை அனுமதி கிடையாது. ஆகவேதான் மரப்பாதை அமைக்கப்பட்டது. இதுபோன்ற கட்டுமானங்களில் இயற்கை பேரிடரால் சேதமடைவதும் அதைச் சரிசெய்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று. வருடா வருடம் புயலிலும் வெள்ளத்திலும் அழிந்துகொண்டிருந்த சென்னையை எந்த பாதிப்பும் இன்றி பாதுகாத்திருக்கிறது தி.மு.க அரசு. இதைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பிகொண்டிருக்கிறார்கள். விட்டால் புயல் வந்ததற்கே தி.மு.க அரசுதான் காரணமென்று சொன்னாலும் சொல்வார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படி ஒரு பாதை கடற்கரையில் அமைக்கவேண்டும் எனச் சிந்தித்து செயல்படுத்தியதே எங்கள் அரசுதான்”

“தி.மு.க ஒரு திராவிட அடிப்படைவாதக் கட்சி என்கிறார்களே?”

“ஆம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலின சமத்துவமும், சாதிய சமத்துவமும் மதச்சார்பின்மையும், மாநில சுயாட்சியும், சமூகநீதியும், தமிழுணர்வும், திராவிடக் கருத்தியலும் எங்கள் அடிப்படை சித்தாந்தங்கள். அந்த வகையில் நாங்கள் திராவிட அடிப்படைவாதிகள் என்பதை பெருமையுடன் ஏற்கிறோம்.”

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
Jerome

“ ‘விலைவாசி உயர்ந்திருக்கிறது, ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இப்படி தி.மு.க மக்களைப் பல விவகாரங்களில் நம்பவைத்துக் கழுத்தை அறுத்துவிட்டது’ என சீமான் விமர்சனம் செய்திருக்கிறாரே?”

“பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவான விளக்கத்தை நிதியமைச்சர் ஏற்கெனவே வழங்கியிருக்கிறார். விலைவாசி உயர்வுக்கு பெட்ரோலியப் பொருளின் விலை உயர்வு உட்பட பல காரணிகள் இருக்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறது. மக்களிடம் எந்த நம்பிக்கையும் பெற்றிராத சீமான் போன்றவர்கள் யாருடைய சம்பளப் பட்டியலில் இருக்கிறார்களோ அவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.”