Published:Updated:

அலங்கார ஊர்தி முதல் பாடல் நீக்கம் வரை..! - குடியரசு தின விழா சர்ச்சைகளும் பாஜக விளக்கமும்!

குடியரசு தின விழா

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நடைபெற்றுள்ள பல மாற்றங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அலங்கார ஊர்தி முதல் பாடல் நீக்கம் வரை..! - குடியரசு தின விழா சர்ச்சைகளும் பாஜக விளக்கமும்!

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் நடைபெற்றுள்ள பல மாற்றங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Published:Updated:
குடியரசு தின விழா

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக்குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. இங்கு முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில், மாநில, துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் 25 அலங்கார ஊர்திகள், 16 அணிவகுப்பு குழுக்கள், 17 ராணுவ இசைக்குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த அணிவகுப்பு அனைத்தும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியரசு தின விழா, 26-ம் தேதி காலை 10:30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அலங்கார ஊர்தி சர்ச்சை:

தமிழகம் சார்பில் பாரதியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வுக் குழுவினரால், 3-வது சுற்றுவரை தேர்வு செய்யப்பட்டு, 4-வது சுற்றில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டன. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் மத்திய அரசின் தேர்வுக்குழுவால் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மொத்தம் வந்த 56 அலங்கார ஊர்திப் பரிந்துரைகளில் 21 அலங்கார ஊர்திப் பரிந்துரைகள் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளன.

குடியரசு தின விழா: தமிழக அலங்கார ஊர்தி
குடியரசு தின விழா: தமிழக அலங்கார ஊர்தி

அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, மத்திய அரசு சார்பில், ``ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு பரிசீலனைகளில் சில ஊர்திகள் நிராகரிக்கப்படும். அதற்கான முறையான காரணங்களும் இருக்கும். அனைத்துப் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சில திருத்தங்களைச் செய்து அடுத்த கட்டத்தைத் தாண்டிவிட்டதால் அந்த ஊர்தி தேர்வாகிவிடும் என்று கூற முடியாது. தற்போது தேர்வாகியுள்ள இந்த 21 ஊர்திகள் அனைத்தும்கூட கடைசி நேரத்தில் அணிவகுப்பில் இடம்பெறும் என்று சொல்ல முடியாது. அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள்போல இல்லையென்றால் அது கடைசி நேரத்தில் நிராகரிக்கப்படும். தேர்வுக்குழு நிபுணர்கள் முடிவே இறுதியானது. இந்த விவகாரத்தில், மத்திய அரசோ, பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது பிரதமரோ தலையிடுவது கிடையாது" என்று விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாத்மாவின் விருப்பப் பாடலின் இசை நீக்கம்:

குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விழா முடிந்த பின்னர் ஜனவரி 29-ம் தேதி ராணுவத்தினர் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். ஸ்காட்லாந்து கவிஞர் ஹென்றி பிரான்சிஸ் லைட் 1847-ம் ஆண்டு இயற்றிய 'அபைடு வித் மீ' பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல். கடந்த 1950-ம் ஆண்டு முதல் 'அபைடு வித் மீ' பாடலை ராணுவ இசைக்குழுவினர் இசைத்த பின்னரே நிகழ்ச்சி நிறைவடையும். இந்தப் பாடல், கடந்த 2020-ம் ஆண்டு விழாவில் நீக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்த பாடல் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

இந்தப் பாடல் நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு சார்பில், ``குடியரசு, சுதந்திர தின விழாக்களில் நமது நாட்டின் பாரம்பர்யத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறுவது பொருத்தமாக இருக்கும். 1962-ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போருக்குப் பிறகு நமது வீரர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக, கவிஞர் பிரதாப் எழுதிய `ஏ மேரே வாதோன் கே லோகோன்' என்ற பாடல் இம்முறை இடம்பெறும். இது நமது நாட்டோடு தொடர்புடைய பாடல். நமது தேசத்தோடு தொடர்பில்லாத 'அபைடு வித் மீ' பாடல் நீக்கப்பட்டுள்ளது. இது மகாத்மாவை இழிவுபடுத்தச் செய்யவில்லை" என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் சர்ச்சைகள் தொடர்பாக, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். `` `அபைடு வித் மீ’ ஒரு சோகமான பாடல். நாட்டின் கொண்டாட்டமான ஒரு நாளில் சோகமான பாடலை இசைப்பது தேவையற்றது. சீனப் போரில் வீரமரணமடைந்த நமது நாட்டு வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பாடிய பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. `ஏ மேரே வாதோன் கே லோகோன்’ பாடல் இசைத்தபோது, ஜவஹர்லால் நேரு எழுந்து நின்றிருக்கிறார். அது அவருக்கு பிடித்தமான பாடல். இந்தப் பாடல் சேர்த்தது குறித்து யாரும் பேசுவது இல்லையே... அப்போது அதை எதிர்க்கிறார்களா? `அபைடு வித் மீ’ பாடலை நீக்கியது மகாத்மாவை இழிவுபடுத்துவது என்று சிலர் உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பிவருகிறார்கள்" என்று பேசினார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``அலங்கார ஊர்திகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. அடுத்த முறை செல்லும்போது, இவர்கள் இம்முறை செய்த தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து நிராகரித்துவிட்டார்கள் என்று சிறு குழந்தைகள்போலப் புலம்புவது தவறு. உண்மை என்னவென்று தெரியாமல் எதையாவது பேசுவது முறையாகாது. தமிழகத்தில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துத் துறைகளிலிருந்தும் வரும் வாகனங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றனவா... எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பேசுவது முதிர்ச்சியான அரசியல்வாதிகளுக்கு அழகு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism