Published:Updated:

சிவகாசி: `அதிகரிக்கும் பட்டாசு மீதான தடை!’ - கேள்விக்குறியாகும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்?

பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிலாளர்கள்

இந்திய அளவில் ஆறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காற்று மாசு அதிகமுள்ள இடங்களிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சிவகாசியில் குறைந்த பட்டாசு விற்பனை:

இந்தியாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் 80 சதவிகித பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுபவை. ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், இரண்டு மாதங்கள் விற்பனையாகும். தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து பட்டாசு ஆர்ட்டர் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். வருடா வருடம் பட்டாசுகளின் விலையும் கணிசமாக உயரும். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகள் விலையும் உயர்த்தப்படவில்லை. இருந்தபோதிலும், கொரோனா பேரிடர் காரணமா வழக்கத்துக்கு மாறாகப் பட்டாசு விற்பனை 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே நடந்துவருவதாக சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்

பட்டாசுத் தொழிலாளர்
பட்டாசுத் தொழிலாளர்

சிவகாசியில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தித் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இங்கு ஆண்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது. எப்போதும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கும் வர்த்தகம், இந்த வருடம் கொரோனா பேரிடர் காரணமாக மந்தமாகவே நடைபெற்றுவருகிறது. அதோடு, பல்வேறு மாநிலங்களில் பட்டாசு விற்பதற்கும் வெடிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

தடைவிதித்த மாநிலங்கள்:

டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காற்று மாசுபாடு காரணமாக அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. தடை செய்த மாநிலங்களிலிருந்து பட்டாசு ஆர்டர் கொடுத்தவர்கள் கொடுத்த முன்பணத்தைத் திரும்பக் கேட்டு வருவதாக, பட்டாசு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். சிவகாசியில் மிக மோசமான நிலை நிலவுவதால், பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்த பல்வேறு பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியிருக்கிறது. அதோடு, இந்த நிறுவனங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எந்தெந்த நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருந்ததோ அந்த நகரங்களுக்கும் தடை உத்தரவு பொருந்தும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம்

பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு:

`நாடு முழுவதும் காற்று மாசு அதிகம் இருப்பதால், நவம்பர் 09-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியா முழுவதும் காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடைவிதிக்க வேண்டும்’ என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது. இந்த உத்தரவை மாநில அரசு கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறது. காற்று மாசுபாடு உயர்ந்தால், கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

சீனப் பட்டாசுகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய ரக பட்டாசுகளைவிட, சீனப் பட்டாசுகள் 30 சதவிகிதத்துக்கு விலை குறைந்தவை. இந்த வருடம் இந்திய அரசு, சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவில்லை. சீனப் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தற்போது நிலவும் கொரோனா பேரிடர் சூழல் காரணமாக, பொதுமக்கள் நேரிடையாக கடைகளுக்குச் சென்று பட்டாசுகளை வாங்குவதைவிட, ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வருடம் பெரும்பாலான விற்பனை ஆன்லைனில் நடைபெற வாய்ப்பிருப்பதாக ஆன்லைன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பவர்களின் வியாபாரம் மேலும் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை

தற்போதைய நிலையில், மக்கள் பட்டாசு வெடித்தால்தான், பட்டாசுத் தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பெரியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு