Published:Updated:

ஒமைக்ரான்: டெல்லி முதல் கர்நாடகா வரை... இரவு நேர ஊரடங்கு அமல்! - தமிழகத்தில் இப்போது அவசியமா?

இரவு நேர ஊரடங்கு
News
இரவு நேர ஊரடங்கு

இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையின் தாக்கம் யாருமே நினைத்துக் கூட பார்த்திடாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. தலைநகர் டெல்லி முதல் தமிழகம் வரை வைரஸ் பரவலின் பாதிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது. பல இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்க்க முடிந்தது. பாதிப்பு அதிகமானதற்கு உருமாறிய டெல்டா வகை வைரஸ் பரவல் தான் காரணம் என்று கூறப்பட்டது.

கொரோனா
கொரோனா

மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக வைரஸ் பரவல் படிப்படியாகக் குறைந்து தற்போது நிலைமை சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்த டெல்டா வகை வைரஸ் உலகின் 130-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் பாதிப்பு அளவும் மிக அதிகமாகக் காணப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தடுப்பூசி:

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இந்த வருடம் ஜனவரி மாதம் 26-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய 278 நாள்களிலேயே 100 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய மைல் கல்லை அடைந்திருந்தது. கடந்த வாரம் இந்தியாவில் உள்ள 60 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளது இந்தியா. தற்போதைய நிலையில் இந்தியாவில் 141 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இருக்கின்றன.

தடுப்பூசி
தடுப்பூசி
மாதிரிப்படம்

கடந்தவாரம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ``வரும் ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசி போடும் பணி தொடங்கப்படும். கொரோனாவுக்கு எதிரான மூக்கு வழியாகச் செலுத்தப்படும் உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை" என்று பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒமைக்ரான் பரவல்:

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸை உலக சுகாதார நிறுவனம் கவலைக்குரிய கொரோனா வைரஸ் வகையாகப் பட்டியலிட்டது. இந்த வகை வைரஸ் அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், இந்த வகை வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளது. அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்றாலும், டெல்டா வகை வைரஸ் போல பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு நோய்ப் பாதிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது என்று சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில்தான், டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டு வைரஸ்களின் இணைப்பாக 'டெல்மைக்ரான்' வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தன்மை குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான்:

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் வகை பரவல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாதத்துக்குள் 570-க்கும் அதிகமானோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தியாவில் 19-க்கும் அதிகமான மாநிலங்களில் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லை. மிகக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே லேசான அறிகுறிகள் இருந்துள்ளது என்றும், பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வைரஸ் பரவலைத் தடுக்க பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஒருபகுதியாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இரவு நேர ஊரடங்கு:

மத்திய அரசின் உத்தரவை அடுத்து, கடந்த 25-ம் தேதி முதல் உத்தரப்பிரதேசத்தில் இரவு 11.00 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் 27-ம் தேதி முதல், இரவு 11.00 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 28-ம் தேதி முதல் அடுத்த பத்து நாள்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இரவு நேர ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு
(மாதிரி படம்)

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தான். ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய நிபுணர் குழு தமிழகம் வந்துள்ளது. இந்த குழுவினர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அந்த துறை செயலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்தினர். ஒமைக்ரான் பரவல் நிலை மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து அந்த குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் இந்த குழுவினர் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தவுள்ளனர்.

தமிழகத்தில் என்ன நிலை!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கொண்டுவரப்படுமா என்று மருத்துவத்துறை அமைச்சரிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் தற்போதைய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று விடுதிகளுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து வரும் 31-ம் தேதி முதல்வர் தலைமையில், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இரவு நேர ஊரடங்கு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய நிபுணர் குழு
மத்திய நிபுணர் குழு

இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பல மாநிலங்களில் உணவகம், உடற்பயிற்சி கூடம் போன்றவற்றில் இருக்கை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் கூட்டம் கூடும் என்பதால், அடுத்த பத்து நாள்களுக்கு இரவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் முக்கியமான எட்டு நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு அன்று கடற்கரைக்கு அனுமதி இல்லை என்றாலும் மற்ற இடங்களில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.