Published:Updated:

`நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன!' - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சித்த மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``ஒரு நாளைக்கு 100 முறை காங்கிரஸ் கட்சியினர் அரசியலமைப்பைக் காப்பாற்றுவது குறித்து பேசுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்களது கடந்தகால தவறுகளை உணர்ந்திருக்கலாம்" என்று மோடி பேசினார்.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி, பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க உரையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமானது, ஏற்கெனவே தொடங்கிய நிலையில் வருகிற பிப்வரி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் உரை குறித்து பேசிய நரேந்திர மோடி, ``புதிய இந்தியாவிற்கான பார்வையை அவருடைய பேச்சு எடுத்துரைத்துள்ளது. அவரின் உரை நம்பிக்கையைத் தருகிறது. இனி வரும் காலங்களில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் விதமாக உள்ளது" என்று கூறினார்.

மோடி
மோடி

இந்தியாவில் நிலவிக்கொண்டிருக்கும் முக்கியப் பிரச்னைகளான குடியுரிமை திருத்தச் சட்டம், ஆர்டிகிள் 370, முத்தலாக், அயோத்தி பிரச்னை ஆகியவை குறித்தும் மோடி பேசியுள்ளார்.

இவைதொடர்பாக அவர் பேசுகையில், ``மக்கள் அரசாங்கத்தை மட்டும் மாற்ற விரும்பவில்லை. பழைய வழிகள் மற்றும் சிந்தனைகளைப் பின்பற்றிக்கொண்டிருந்தால், சட்டப்பிரிவு 370 ஒரு வரலாற்றுச் சாதனையாக மாறியிருக்காது. இஸ்லாமியப் பெண்கள், முத்தலாக் பிரச்னையால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பழைய பாணியிலேயே பணியாற்றி இருந்தால் அயோத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் எல்லை தொடர்பான உடன்படிக்கைகள் ஏற்பட்டிருக்காது" என்றார்.

`அவர் ஆம் ஆத்மியில் இல்லை, மோடி ஆதரவாளர்!' - ஷஹீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தை

பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்தியா இனியும் காத்திருக்காது என்று கூறிய மோடி, மத்திய அரசு வேகம், உறுதிப்பாடு, உணர்திறன் மற்றும் தீர்வுகளை லட்சியமாகக்கொண்டு செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ``1950-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் நேரு கையொப்பமிட்டார். அந்த ஒப்பந்தத்தில் சிறுபான்மையினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டித நேரு, மிகப்பெரிய சிந்தனைவாதி. பிறகு, ஏன் எல்லா மக்களையும் குறிப்பிடாமல் சிறுபான்மையினரை மட்டும் குறிப்பிட்டுள்ளார்? நேரு என்ன செய்ய நினைத்தாரோ அதைத்தான் நாங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதற்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் வருவதால் இந்தியக் குடிமக்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது" என்று பேசினார்.

மோடி
மோடி

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், மெஹ்பூபா முஃப்தியையும் ஒமர் அப்துல்லாவையும் விமர்சித்தார். மேலும், ``அரசியலமைப்பின் மீதான மரியாதை குறித்து பேசுபவர்கள் பல ஆண்டுகளாக காஷ்மீரில் எதையும் செய்யவில்லை. காஷ்மீரில் நிலஅபகரிப்பு செய்தது யார்? காஷ்மீரின் அடையாளமாகத் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் மாற்றியது யார்? 1990-ம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீரில் ஏற்பட்ட கொடூரமான இரவை யாரால் மறக்க முடியும்..?" எனக் கேள்விகளை எழுப்பினார். உண்மையில், காஷ்மீரின் அடையாளம் மதநல்லிணக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘‘அஸ்ஸாமில் வதை முகாம்கள் இல்லை!’’ - நரேந்திர மோடி; ‘‘பிரதமர் பொய் சொல்கிறார்!’’ - ராகுல் காந்தி

``ஒரு நாளைக்கு 100 முறை காங்கிரஸ் கட்சியினர் `அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்களது கடந்தகால தவறுகளை உணர்ந்திருக்கலாம். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இந்த வசனத்தை மறந்துவிட்டார்களா?" என்று காங்கிரஸ் கட்சியினரை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

மோடி பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்துப் பேச முயன்ற ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாக,``நான் 30 முதல் 40 நிமிடங்கள் உரையாற்றுகிறேன். இது சிலரைச் சென்றடைய அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இதேபோல நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன" என்றார். இதனால், அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ராகுல் காந்தி, ``இன்று பேசிக்கொண்டிருக்கும் மோடி, இன்னும் ஆறு- ஏழு மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படும். இந்தியாவிலுள்ள இளைஞர்கள் மோடியைத் தாக்குவார்கள்" என்று கூறியிருந்தார். இதற்கும் பதிலளித்த மோடி, ``அதிகமான சூரிய நமஸ்காரங்களைச் செய்து அடிவாங்கத் தயாராகிக்கொள்கிறேன்" என்றார்.

பிரதமர் மோடி இந்த உரையில் விவசாயம், உள்கட்டமைப்புகள் மற்றும் காந்தி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் உட்பட பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

`பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்!’- தங்கையுடன் பா.ஜ.க-வில் இணைந்த சாய்னா நேவால்
அடுத்த கட்டுரைக்கு