Published:Updated:

`பேருந்துகள் என்ற பெயரில் டூவீலர் பதிவு எண்கள்!' - உ.பி-யில் மீண்டும் வெடித்த காங்கிரஸ்-பா.ஜ.க மோதல்

பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்
பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்

பிரியங்கா காந்தியின் கோரிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியதால் அரசியல் பிரச்னைகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

கொரோனா ஊரடங்கில், புலம்பெயர்த் தொழிலாளர்களின் நிலை குறித்து தினம்தினம் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் கவலை அளிக்கும்விதமாகவே தகவல்கள் வருகின்றன. தொழிலாளர்கள் நடந்து செல்லாத வண்ணம் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

புலம் பெயர்ந்த  தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
விகடன்

தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், ஏற்கெனவே நடக்கத் தொடங்கிய தொழிலாளர்களுக்கு அது உதவவில்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருக்கும் ரயில் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அழைத்து வருவது தொடர்பாக மாநில பா.ஜ.க அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் யுத்தமே நடந்துள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அழைத்துவர மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்த நிலையில் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் உத்தரப்பிரதேசத் தொழிலாளர்களை அழைத்து வர காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களை ஏற்றி வந்த ட்ரக் விபத்துக்குள்ளான தகவல் வெளியான பிறகு இந்த நடவடிக்கையை பிரியங்கா காந்தி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்து மூலம் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை மாநில அரசு எல்லையில் தடுத்து நிறுத்தியதாகக் குற்றசாட்டு எழுந்தது.

`நேருக்கு நேர் மோதிய ட்ரக்குகள்; 23 புலம்பெயர் தொழிலாளர்கள் 
பலி!’ -ஊரடங்கில் தொடரும் சோகம்

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், `முதல்வர் அவர்களே, அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல. நாங்கள் ஏற்பாடு செய்த பஸ்கள் உ.பி. எல்லையில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உணவு, குடிநீர் இல்லாமல் உத்தரப்பிரதேசத்திற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே பஸ்களை உள்ளே வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்றார்.

இந்த விவகாரம் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது என்றே சொல்ல வேண்டும். பா.ஜ.க - காங்கிரஸ் இடையே இந்த விவகாரத்தில் பெரும் வார்த்தைப் போர் வெடித்தது. இந்தநிலையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தியின் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்து மூலம் தொழிலாளர்கள் மாநிலத்துக்குள் திரும்ப க்ரீன் சிக்னல் கிடைத்தது. இது காங்கிரஸ் கட்சியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மாநில உள்துறை, 500 பேருந்துகளை நொய்டாவுக்கும் மீதம் இருக்கும் பேருந்துகளை காஸியாபாத்துக்கும் அழைத்து வர உத்தரவிட்டது. மேலும் இன்று குறிப்பிட்ட பேருந்துகள் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மாவட்ட மாஜிஸ்டிரேட் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார் என்று கூறப்பட்டது. முன்னதாகப் பேருந்தின் பதிவு எண் உள்ளிட்ட தகவல்கள், ஓட்டுநர் விவரங்கள், அவர்களின் உடல் நிலை குறித்த அறிக்கைகளை மாநில அரசு காங்கிரஸ் கட்சியிடம் கேட்டு இருந்தது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்த நிலையில் காங்கிரஸ் அளித்த 1000 பேருந்துகளின் பதிவு எண்களில் பல எண்கள், இருசக்கர வாகனம் என்றும் மூன்று சக்கர வாகனமென்றும், கார் போன்ற சிறிய ரக வாகனங்கள் என்றும் பதியப்பட்டிருக்கிறது என முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் ஆலோசகர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பல ஸ்கிரீன் ஷாட்களும் இணையத்தில் பரவி வருகின்றன. பிரியங்கா காந்தியின் கோரிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியதால் இந்த அரசியல் பிரச்னைகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு