Published:Updated:

`உங்களுக்கு வேண்டிய தண்டனையைக் கொடுப்போம்!' - பினராயி விஜயனை எச்சரித்த மாவோயிஸ்டுகள்

மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் செறுவாத்தூரிலிருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தக் கடிதம் குறித்தும் அதை அனுப்பியது யார் என்பது பற்றியும் விசாரணை நடந்துவருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழக - கேரள எல்லையான அட்டப்பாடியில் கடந்த மாதம் 28-ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் கேரள நக்‌ஸல் தடுப்பு (தண்டர்போல்டு) போலீஸுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் கார்த்தி என்ற கண்ணன், மணிவாசகம், அரவிந்த், ரமா என்ற அஜிதா ஆகிய நான்குபேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்வத்தைத் தொடர்ந்து கேரளத்தில் ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ரமா என்ற அஜிதா கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள்
போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள்

இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகர காவல் நிலையத்துக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அர்பன் ஆக்‌ஷன் டீமின் மேற்குத்தொடர்ச்சி மலை துணைத்தலைவர் பதர் மூசா என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், `ஏழு சகாக்களை (தோழர்களை) துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கேரள முதல்வருக்கு வேண்டிய தண்டனையை நாங்கள் கொடுப்போம்' எனக் கூறப்பட்டிருந்தது.

கேரளத்தின் `தண்டர்போல்ட்' என்கவுன்டர்: யார் இந்த கார்த்தி, மணிவாசகம்?

மேலும், பேராம்பிறை போலீஸ் எஸ்.ஐ. ஹரீஸின் செயல்பாடுகள், நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி சாதாரண ஜனங்களை நாயைப்போல அடித்து நொறுக்க அரசியல் அமைப்பின் எந்த சட்டமாவது வழிவகை செய்கிறதா... அர்பன் ஆக்‌ஷன் டீம் அவர்களை விரைவில் சந்திக்கும் நிலை ஏற்படும்' எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் செறுவாத்தூரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தக் கடிதம் குறித்தும் அதை அனுப்பியது யார் என்பது பற்றியும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.