Published:Updated:

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி: திமுக-வில் இரு தரப்பினர் இடையே போட்டி - மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவியைப் பிடிப்பதில், திமுக-வில் இரு தரப்புக்கு இடையே கடும் போட்டி நிலவி சலசலப்பு ஏற்பட்டதால், நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இவற்றுக்கான இடங்களை திமுக -17, அதிமுக- 3, சுயேச்சை - 3, பாமக -2, விசிக - 1 ஆகியவை முறையே கைப்பற்றின. மரக்காணம் ஒன்றியத்தில், திமுக கூட்டணி மட்டுமே 18 இடங்களைக் கைப்பற்றியிருப்பதால், சுலபமாக சேர்மேன் பொறுப்பைப் பிடிக்கும் நிலை திமுக-வுக்கு இருந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மஸ்தான், தயாளன் என்பவரைக் கட்சி சார்பாக மரக்காணம் ஒன்றிய சேர்மனாகப் போட்டியிட இம்முறை வாய்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

இதற்கிடையே சேர்மேன் பதவியைப் பிடிப்பதில் உட்கட்சிக்குள்ளாகவே குஸ்தி நடைபெறத் தொடங்கியுள்ளது. மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கண்ணனுக்கும், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனுக்கும் இடையே பலமான போட்டி ஏற்பட்டுள்ளது. சுயேச்சை, அதிமுக, பாமக கவுன்சிலர்களைத் தன் பக்கம் இழுத்து வெற்றிபெறும் நோக்கில் கண்ணன் தரப்பு காய்நகர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நீயா... நானா போட்டி, கடந்த 20-ம் தேதி அன்று ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு செய்யும்போது மோதலாக மாறியது. இரு தரப்பினரிடையே அன்று பயங்கர வாக்குவாதம் நடைபெற்றது.

இன்று (22.10.2021) மறைமுகத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில், ஒரு தரப்பைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மனுத்தாக்கல் செய்வதற்கு... மற்றொரு திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் மரக்காணம் திமுக-வில் உட்கட்சிக்கு உள்ளாக இரு தரப்பினரிடையே உச்சகட்ட வார்த்தை மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கைகலப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

பதவிச் சண்டையில் தி.மு.க... உட்கட்சி கும்மாங்குத்து! #DMK #Stalin
சாலைமறியல்
சாலைமறியல்

ஒன்றிய சேர்மன் பதவியை பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், இன்று நடைபெறவிருந்த மறைமுகத் தேர்தல், தேர்தல் நடத்தும் அதிகாரியால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி: திமுக-வில் இரு தரப்பினர் இடையே போட்டி - மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தரப்பினர் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு