Published:Updated:

சஞ்சய் ராவத் Vs ஸ்வப்னா பட்கர்... சிவசேனா எம்.பி கைது விவகாரத்தில் நடப்பது என்ன?!

சஞ்சய் ராவத்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் பினாமி சொத்துகளைத் திருப்பிக் கேட்டதால் மராத்தி பட பெண் இயக்குநர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் மாட்டிவிட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சஞ்சய் ராவத் Vs ஸ்வப்னா பட்கர்... சிவசேனா எம்.பி கைது விவகாரத்தில் நடப்பது என்ன?!

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் பினாமி சொத்துகளைத் திருப்பிக் கேட்டதால் மராத்தி பட பெண் இயக்குநர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் மாட்டிவிட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
சஞ்சய் ராவத்

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் நில மோசடி தொடர்பாகக் கடந்த மாதம் 30-ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அன்று காலையில் சஞ்சய் ராவத் இல்லத்தில் ரெய்டு நடத்திவிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்று இரவில் கைதுசெய்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு சஞ்சய் ராவத் மனைவியிடமும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். 1,035 கோடி நில மோசடியில் சஞ்சய் ராவத் எப்படி அமலாக்கப்பிரிவிடம் சிக்கினார் என்பது குறித்துப் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

மும்பை கோரேகாவ் பகுதியில் இருக்கும் பத்ரா சால் என்ற இடத்திலிருக்கும் 672 குடியிருப்புகளை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய குடியிருப்புகளைக் கட்டும் ஒப்பந்தத்தை சஞ்சய் ராவத் தனக்கு நெருக்கமான பிரவின் ராவத்துக்குப் பெற்றுக்கொடுத்தார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

பிரவின் ராவத் அதை மேம்படுத்த ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் ராகேஷ், சரங்க் வாத்வான் சகோதரர்களுடன் கூட்டணி சேர்ந்தார். உடனே ராகேஷ், சரங்க் ரூ.100 கோடியை பிரவின் ராவத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்தார். தற்போது பிரவின் ராவத்தும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சஞ்சய் ராவத், மராத்திப் பட பெண் இயக்குநர் ஸ்வப்னா பட்கர் பெயரில் சில சொத்துகளை வாங்கியிருக்கிறார். ஸ்வப்னாவை பினாமியாக வைத்து ரொக்கப் பணம் கொடுத்து, அதிகமான சொத்துகளை சஞ்சய் ராவத் வாங்கியிருக்கிறார் எனக் கூறப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடற்கரையோர நகரமான அலிபாக்கில் எட்டு பிளாட் நிலத்தை சஞ்சய் ராவத் தன்னுடைய மனைவி வர்ஷா, இயக்குநர் ஸ்வப்னா பட்கர் ஆகியோர் பெயரில் வாங்கினார். ஆனால் அந்தச் சொத்தை தன்னுடைய மனைவி பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்கும்படி கேட்டதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஸ்வப்னா சொத்தை எழுதிக்கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சஞ்சய் ராவத் தன்னைத் துன்புறுத்துவதாகவும், தன்னைப் பின்தொடர்வதாகவும் ஸ்வப்னா மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விசாரணையில் இருக்கிறது. சொத்தைத் திரும்பக் கேட்டதால் ஸ்வப்னா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் சஞ்சய் ராவத்துக்கு எதிரான சாட்சியாக மாறியிருக்கிறார். சஞ்சய் ராவத் எப்படி ரொக்கமாகப் பணம் கொடுத்து சொத்துகளை வாங்கினார் என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதோடு சஞ்சய் ராவத்துக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டவும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு உதவினார் எனச் சொல்லப்படுகிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இதற்கிடையே சஞ்சய் ராவத் சிறையில் இருந்துகொண்டு சாம்னா பத்திரிகையில் வாராந்தரக் கட்டுரை எழுதியிருப்பது அமலாக்கப்பிரிவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறையில் இருக்கும்போது அனுமதி வாங்கித்தான் எதையும் எழுத முடியும். ஆனால் சஞ்சய் ராவத் அது போன்ற அனுமதி எதையும் பெறவில்லை. எனவே எப்படி எழுதினார் என்பது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்துவருகிறது. உண்மையிலேயே அவர்தான் எழுதினாரா அல்லது அவர் பெயர் மட்டும் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்துவருகின்றனர். சஞ்சய் ராவத் தனது தலையங்கக் கட்டுரையில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷாரியாவைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு மராத்தியர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு மூடிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அமலாக்கப்பிரிவின் இந்த நெருக்கடிகளுக்கு பயந்து சிவசேனாவைவிட்டு விலக மாட்டோம் என்று சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் தெரிவித்திருக்கிறார்.