Published:Updated:

திருவாரூர்: `மூன்று சிறார்களைத் தேடிச் சென்ற எம்.எல்.ஏ!’ - நெகிழ்ந்த ஊர் மக்கள்

மாரிமுத்து எம்,எல்.ஏ
மாரிமுத்து எம்,எல்.ஏ

மாரிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், இவருடைய எளிமையான வாழ்க்கை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன. திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இவருக்கு ஆதரவான அலை வீசியது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் மாரிமுத்து. வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த சில நாள்களில், இவர் டூ வீலரில் கிளம்பிச் சென்று, இந்தத் தொகுதியில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மூன்று சிறார்களை நேரில் சந்தித்த சம்பவம், இந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யார் அவர்கள்... எதற்காகச் சந்தித்தார்?

எம்.எல்.ஏ
எம்.எல்.ஏ

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் நின்று வெற்றிபெற முடியும் என்ற ஒரு பொதுவான கருத்து சமீபகாலமாக நிலவிவருகிறது. குறிப்பாக, தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், பணத்தைத் தண்ணீர்போல் வாரி இறைத்துத்தான், மக்களின் கவனத்தை ஈர்த்தார்கள். இவர்களுக்கு மத்தியில், குடிசை வீட்டில் வசிக்கும் மிகவும் எளிமையான மனிதரான மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்திருக்கிறது.

காடுவாக்குடி கிராமத்தில், சின்னஞ்சிறு குடிசை வீட்டில்தான் மாரிமுத்துவின் குடும்பம் வசிக்கிறது. விவசாய கூலித் தொழிலாளியின் மகனான மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான ஈர்ப்பால், இதில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது போராட்ட குணத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, கோட்டூர் ஒன்றியச் செயலாளராக உயர்ந்தார். இவருடைய மனைவியும், தாயும் விவசாய கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள்.

மாரிமுத்து
மாரிமுத்து

இந்தநிலையில்தான் மாரிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், இவருடைய எளிமையான வாழ்க்கை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன. திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இவருக்கு ஆதரவான அலை வீசியது. சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார் மாரிமுத்து. இவ்வளவு நாள்கள் எல்லாருகிட்டயும் ரொம்ப எளிமையாக பழகிக்கிட்டு இருந்தார்... இப்ப எம்.எல்.ஏ ஆகிட்டாரு. இனிமேல் மாரிமுத்து எப்படி நடந்துகொள்வாரோ எனத் தொகுதி மக்கள் மத்தியில் பேச்சு நிலவியது. ஆனால் மாரிமுத்துவோ தனக்குரிய குணத்தால், இந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தனது நண்பரோடு, டூ வீலரில் திடீரென கிளம்பிச் சென்றிருக்கிறார் மாரிமுத்து. சிங்களாந்தி பகுதியில் வசிக்கும் அபிநயா என்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்திருக்கிறார். அபிநயா தனது உண்டியலில் சேமித்துவைத்திருந்த 1,007 ரூபாயை, தேர்தல் பிரசாரத்தின்போது, மாரிமுத்துவிடம் தேர்தல் செலவுக்காகக் கொடுத்திருக்கிறார். அதற்கு நன்றி சொல்வதற்காகவே, அபிநயாவை நேரில் சந்தித்து தனது நெகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் மாரிமுத்து.

சிறுமி அபிநயாவிடம் நாம் பேசியபோது, ``எலெக்‌ஷன்ல மாரிமுத்துனு ஒருத்தர் நிக்கிறார். அவர் ரொம்ப நல்லவரு. அவர் ஜெயிச்சி வந்தால் மக்களுக்கு நல்லது செய்வாரு. ஆனா அவர் ரொம்ப ஏழை. செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுறாரு’னு எங்க அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டாங்க. நான் உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்த பணத்தை அவர்கிட்ட கொடுக்கட்டுமானு கேட்டேன். சரினு சொன்னாங்க. ஓட்டுக் கேட்டு வந்தப்ப, என் உண்டியல் பணத்தைக் கொடுத்தேன்’’ என்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது
தேர்தல் பிரசாரத்தின்போது

கொருக்கையைச் சேர்ந்த சிறுவன் சித்தனின் வீட்டுக்கும், செல்லப்பிள்ளையார் கோட்டகத்தில் வசிக்கும் சிறுமி ராஜலெட்சுயின் வீட்டுக்கும் சென்று, அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார் எம்.எல்.ஏ மாரிமுத்து. தேர்தல் பிரசாரத்தின்போது இவர்களும் தங்களது உண்டியல் பணத்தை மாரிமுத்துவிடம் வழங்கியிருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ மாரிமுத்துவின் நண்பர்கள் சிலர், ``இந்த மூணு பசங்களுமே ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. இவங்க இந்தச் சின்ன வயசுல, ஆசையோடு சேர்த்துவெச்சிருந்த உண்டியல் பணத்தை, தனக்கு எலெக்‌ஷன் செலவுக்கு நன்கொடையாக கொடுத்ததுனால மாரிமுத்து நெகிழ்ந்துபோயிட்டார். அன்னையில இருந்தே இதையே நினைச்சிக்கிட்டு இருந்தார். இதுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப்போறேனோனு சொல்லிக்கிட்டே இருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போதுகூட இந்த மூணு பசங்களைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தார். ஜெயிச்சதும் மாரிமுத்துவுக்கு மனசு மேலும் பாராமாகிடுச்சி. இதனால்தான் இவங்களோட வீடுகளுக்கே தேடிப்போயி, நன்றி சொல்லியிருக்கார்’’ எனத் தெரிவித்தார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள் ``தேர்தல் முடிஞ்ச்சுட்டா, அரசியல்வாதிங்க, பழசைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. அதுவும் ஜெயிச்சு எம்.எல்.ஏ., எம்.பி-னு ஆயிட்டா, சொல்லவே வேண்டியதில்லை. தனக்கு என்னதான் பெரிய உதவி செஞ்சிருந்தாலும கூட, அதோடு அவங்களை மறந்துடுவாங்க. ஆனால் மாரிமுத்து அப்படியில்லை. சின்ன பசங்கதானேன்னுகூட நினைக்காமல், தேடி வந்து நன்றி சொல்லிட்டுப் போறார். மாரிமுத்துவோட குணம் எப்பவும் மாறாது’’ என நெகிழ்ச்ச்யோடு பேசுகிறார்கள். இவர் இதோடு நின்றுவிடாமல், திருத்துறைப்பூண்டி தொகுதியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவார் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு