கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமையவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி கடந்த ஆண்டு, செப்டம்பர் 30-ம் தேதி `பாரத் ஜோடோ’ யாத்திரைக்காகக் கர்நாடகாவில் நுழைந்து சாமராஜநகர், மைசூரு, மாண்டியா, தும்கூர், சித்ரதுர்கா, பெல்லாரி, ராய்ச்சூர் வழியாக சுமார் 22 நாள்களில் 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார்.

இதன் காரணமாகத்தான் காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றிபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``கர்நாடக தேர்தலில் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி. இது கர்நாடக மக்களின் வெற்றி. வெறுப்பின் சந்தை மூடப்பட்டிருக்கிறது. அன்பின் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், கர்நாடகா தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் இது தொடரும். ஏழைகளின் பிரச்னைகளுக்காக, காங்கிரஸ் தொடர்ந்து போராடியது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அளித்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,"இந்த வெற்றி கட்சிக்கானது. இது நமது அமைப்பை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மேலும், காங்கிரஸ் தலைவர்கள், தொழிலாளர்களிடையே ஆழமான ஒற்றுமை உணர்வைத் தூண்டியிருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை இந்திய அரசியலில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றைத் தொடங்கியிருக்கிறது. இந்திய மக்கள் மேலும் அடுத்த வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.