Published:Updated:

``பா.ஜ.க அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் சீமான்!'' - கே.பாலகிருஷ்ணன் சீற்றம்!

`` இந்த நாட்டில்தான் ஏழை, எளிய மக்களின் உழைப்புக்குக் கூலி கொடுப்பதைக் கண்டு மட்டும் சிலர் பதறுகிறார்கள், வயிறெரிகிறார்கள்'' என்கிறார் கே.பாலகிருஷ்ணன்.

`சமூக நீதி கண்காணிப்புக்குழு' அமைத்து தமிழக அரசு முற்போக்குப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்க, வி.சி.க கொடியை ஏற்றுவதற்குத் தடை, சாதி, மதத்தைக் காப்பதற்காக திரைப்படம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு... என மற்றொரு பக்கம் தடதடத்துவருகிறது தமிழகம்.

இந்தச் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினேன்...

``தமிழ்நாட்டில், உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழை 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' மூலமாக பெற்றுத்தருவதில் கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்காட்டுவார்களா?''

``10% இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும்தான் அமலில் இருக்கிறது. மற்றபடி மாநிலத்தைப் பொறுத்தவரையில் அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதல் அடிப்படையில்தான் அமல்படுத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், தமிழக அரசு, 10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.

10% இட ஒதுக்கீடு
10% இட ஒதுக்கீடு

மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதுதான் பொதுவுடமைக் கட்சிகளின் அடிப்படை சிந்த்தாந்தம். எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்றெல்லாம் எந்தக் காலத்திலும் நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் போராட்டக்களத்தில் கைகோத்து நிற்போம்! அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் தேவையில்லை!

அதேசமயம், இந்தியா பன்முகத்தன்மைகொண்ட நாடு. எனவே, தமிழ்நாட்டுச் சூழலை மட்டுமே அளவீடாகக்கொண்டு மற்ற மாநில அரசியல் குறித்து முடிவெடுத்துவிட முடியாது. நம் மாநிலத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் இருப்பதால், இங்கே இட ஒதுக்கீட்டு உரிமையை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை என்பது 95% என்ற அளவில் பெரும்பான்மையாக இருக்கிறது. ஆனால், இதுவே வட மாநிலங்களில், கணிசமான எண்ணிக்கை கொண்ட சில சமூகத்தினர் இன்றைக்கும் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெற முடியாத வகையில், முற்படுத்தப்பட்ட பிரிவினராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்காக தேசிய அளவில், 10% இட ஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட்டுகள் ஆதரிக்கவேண்டியிருந்தது! ஆனால், நம் மாநிலத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கான தேவையே எழவில்லை. ஆக, தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளும் 10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை!''

``மத்திய பா.ஜ.க அரசு, சாமான்ய மக்களுக்கான அரசாக இல்லாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாகச் செயல்படுகிறது என்று எப்படி குற்றம்சாட்டுகிறீர்கள்?''

``கார்ப்பரேட் நிறுவன அதிபர் அதானியின் ஒரு நாள் வருமானம் ஆயிரம் கோடி என்கிறார்கள். இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகிதத்துக்கு ஏற்ப புதிதாக ஒரு வரியை ஏன் மத்திய அரசு விதிக்கக் கூடாது?

அம்பானி - அதானி
அம்பானி - அதானி

உலகிலேயே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரி என்பது இந்தியாவில்தான் மிகக் குறைவாக 30% என்று இருந்துவந்தது. ஆனால், அதையும்கூட தற்போது மத்திய பா.ஜ.க அரசு 15% என்று பாதியாகக் குறைத்துவிட்டது. மேலும், மத்திய அரசுக்குச் செலுத்தவேண்டிய சொத்துவரியையும் முற்றிலுமாக நீக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை செய்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, 'கார்ப்பரேட் நிறுவனங்கள் சொத்துவரியை செலுத்துவதில்லை... எனவேதான் வரி விதிப்பையே நீக்கிவிட்டோம்' என்கின்றனர். சொத்துவரியைச் செலுத்தவில்லை என்றால், ஓர் அரசு அதை வசூல் செய்யும்விதமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா அல்லது அந்த வரி விதிப்பையே நீக்க வேண்டுமா? ஏற்கெனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் அதிக அளவில் வருமானம் குவிந்துவருகிறது. எனவே, அவர்களுக்கான வரியைத்தான் 30%-க்கும் மேலாக உயர்த்தி வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருந்த வரியைப் பாதியாகக் குறைத்ததோடு, சொத்துவரியையும் முழுமையாகவே நீக்கியிருப்பதை என்னவென்று சொல்வது?''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்கான அடிப்படையாக பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை செய்வதை எப்படிக் குறை சொல்ல முடியும்?''

``ஏற்கெனவே லாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, வரியையும் பாதியாகக் குறைத்து இன்னும் லாபம் சம்பாதிக்கும் வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்கும் மத்திய பா.ஜ.க அரசு, சாமானியர்கள் பயன்படுத்துகிற பெட்ரோல், டீசல் மீதான வரியை மட்டும் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே போகிறது. இது எந்த வகையில் நியாயம்?

அடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை பாதியாகக் குறைத்துவிட்டதால், இதிலிருந்து மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய வரி வருவாயும் பெருமளவில் குறைந்துபோகிறது. இப்படி மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய நிதியைக் குறைத்துவிட்டதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசலுக்கு செஸ், சர்சார்ஜ் (Cess and Surcharge) வரிகளை விதித்து அந்த வருவாயை அப்படியே எடுத்துக்கொள்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இந்த வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு ஒரு சதவிகிதத்தைக்கூட மத்திய அரசு கொடுப்பதில்லை.''

ஜி.எஸ்.டி.
ஜி.எஸ்.டி.

``பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமானால், ஜி.எஸ்.டி-க்குள் எரிபொருள் விற்பனையைக் கொண்டுவந்தால் மட்டுமே முடியும் என பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே?''

``ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு அதிக அளவில் வரிவருவாய் கிடைக்கும் என்று சொல்லித்தான் முதன்முதலில் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தியது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால், இப்போது உண்மை அப்படியே தலைகீழாக இருக்கிறது. அதாவது ஜி.எஸ்.டி-யால் மாநிலங்களுக்கு வரி இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மாநில அரசுகளுக்கு கொடுக்கவேண்டிய பங்கீட்டையும் மத்திய அரசு சரிவரக் கொடுப்பதில்லை. எனவே, ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் பங்கீடு விவகாரங்களை மறுபரிசீலனை செய்து, மாநிலங்களுக்கு அதிக வரிவருவாய் கிடைக்குமாறு மாற்றியமைக்க வேண்டும். அதைச் செய்யாமல், பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால் மாநில அரசுகள் வருமானம் பெற வழியில்லாமல், அனைத்துக்கும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலம்தான் உருவாகும்!''

`கலகம் மூட்டத் தயாராகும் அதிமுக வேட்பாளர் முதல் கைக்கு வராத ஸ்வீட் பாக்ஸ்கள் வரை

``மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான வரி விதிப்பு முறைகளிலேயே மாற்றம் கொண்டுவர வேண்டும் என்கிறீர்களா?''

``நிச்சயமாக... தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரி, வாடிக்கையாளர் வரி, கலால் வரி என நான்கு விதமான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இந்த வரிவருவாயில் 41% மாநில அரசுகளுக்கும் மீதமுள்ள 51% மத்திய அரசுக்குமாக பிரித்துக்கொள்ளப்படுகிறது. இதில், மாநிலங்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படும் பங்கு என்பது அந்தந்த மாநில மக்கள்தொகையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மிகக் குறைவான தொகையே கொடுக்கப்படுகிறது. அதுவே குடும்பக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாமல், மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஆளான வட மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது எந்தவகையில் நியாயமாகும்?''

ருத்ர தாண்டவம் பட நிகழ்ச்சி
ருத்ர தாண்டவம் பட நிகழ்ச்சி

``அண்மையில் வெளியான (ருத்ர தாண்டவம்) தமிழ்த் திரைப்படம் ஒன்றில், கம்யூனிஸ்ட்டுகள் சர்ச்சைக்குரிய வகையில் சித்திரிக்கப்பட்டிருப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே?''

``இந்தச் செய்தி இப்போதுதான் என் கவனத்துக்கும் வந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஊடகம் வழியே இது போன்று தவறான கருத்துகள் சொல்லப்படுவதை ஏற்க முடியாது. நேரடியாகப் படத்தைப் பார்த்த பிறகே, ஆட்சேபத்துக்குரிய காட்சிகளுக்கு எதிரான எங்கள் மறுப்பை வெளியிடுவோம். பொதுவாக கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பவர்கள்கூட, முற்போக்கு சிந்தனைகொண்ட கம்யூனிசக் கோட்பாடுகளை எதிர்க்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் பரப்பப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இது போன்ற பொய்யான செய்திகளை மக்களிடையே கொண்டுசேர்க்க முயல்பவர்களின் எண்ணத்தை தமிழக மக்களும் எளிதில் புரிந்துகொள்வார்கள்!''

இந்து அறநிலையத் துறை  கல்லூரிகளில் தமிழர் மெய்யியல், தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுகள்... அரசு ஏற்குமா?

`` '100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால், விவசாயம் அழிகிறது' என்கிறாரே நாம் தமிழர் கட்சி சீமான்?''

``100 நாள் வேலைத் திட்டத்தால் நாடு முழுக்க பதினான்கரை கோடி மக்கள் பலனடைந்துவருகிறார்கள். ஆனால், மத்தியில் பா.ஜ.க அரசு வந்த பிறகு, இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிற நிதி என்பது வருடந்தோறும் குறைந்துகொண்டேதான் வருகிறது. கடந்த வருடம் 1,31,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த வருடமோ வெறும் 75 ஆயிரம் கோடியாகச் சுருங்கிவிட்டது.

சீமான்
சீமான்

ஆனால், மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஏழு வருட காலத்தில் மட்டும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்காகத் தள்ளுபடி செய்யப்பட்ட வராக் கடன் தொகை 10.85 லட்சம் கோடி ரூபாய். இது போதாதென்று பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பா.ஜ.க அரசு தாரை வார்த்துக்கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் பதறாதவர்கள், ஏழை, எளிய மக்களின் உழைப்புக்குக் கூலி கொடுப்பதைக் கண்டு மட்டும் பதறுகிறார்கள், வயிறெரிகிறார்கள் என்றால், இவர்கள் மோடியின் ஊதுகுழலாக இருக்கிறார்கள். ஆக, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைக்கும் பா.ஜ.க அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் சீமான்!! ''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு