Published:Updated:

முள்ளிவாய்க்கால் நினைவுநாள்: 'எங்களுக்குக் கண்ணீர்விட்டு அழக்கூட உரிமை இல்லை' - சண் மாஸ்டர்

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

மே 12-ம் நாள் இரவோடு இரவாக முள்ளிவாய்க்காலில் புதிதாக வைக்கப்பட்ட நினைவுக்கல்லை அகற்றியதோடு, ஏற்கெனவே இருந்த நினைவுத் தூபியையும் சிங்கள ராணுவம் இடித்தழித்துள்ளது.

2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்பு இன்றளவும் தமிழர்களின் நெஞ்சில் ஆராத ரணமாகவே இருந்துவருகிறது. அதிலும், மே 17, 18 ஆகிய இரு தினங்களில், முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 12 ஆண்டுகளாகியும் இன அழிப்புக்கான நீதி இன்னும் கிடைத்தபாடில்லை. கூடுதலாக, நினைவுதினம் அனுசரிக்கக்கூட இலங்கை ராணுவம் தமிழ் மக்களை அனுமதிக்காமல் கடுமையான நெருக்கடிகள் கொடுத்துவருகிறது. இந்தநிலையில், இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்

``மே 12-ம் தேதி இரவோடு இரவாக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூணை சிங்கள ராணுவம் அகற்றியுள்ளதே?’’

`` `முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினால் கூண்டோடு கைது செய்வோம்' என்று கொரோனா பெருந்தொற்றைக் காரணமாகச் சொல்லி, இலங்கை ராணுவத் தளபதி மே10-ம் தேதி தமிழ் மக்களை எச்சரித்தார். அதற்கு அடுத்த நாளே, முள்ளிவாய்க்காலிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமமான குறுந்தூர் மலையில், சிங்கள ராணுவமும், சிங்கள பெளத்த துறவிகளும் கும்பலாக ஒன்றுகூடி அங்கிருந்த ஐயனார் சிலையை அகற்றிவிட்டு புத்த விகாரையை நிறுவினார்கள்.

உடைக்கப்பட்ட நினைவுத் தூபி
உடைக்கப்பட்ட நினைவுத் தூபி

மே 12-ம் நாள் இரவோடு இரவாக முள்ளிவாய்க்காலில் புதிதாக வைக்கப்பட்ட நினைவுக்கல்லை அகற்றியதோடு, ஏற்கெனவே இருந்த நினைவுத்தூபியையும் சிங்கள ராணுவம் இடித்தழித்துள்ளது. அதாவது, சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் தமிழர்களைப் பண்பாட்டுரீதியாக இன அழிப்பு செய்வதற்குக் கொரோனா தடை இல்லையாம். ஆனால், தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்வதற்கு பெருந்தொற்று தடையாம். கொத்துக் கொத்தாக எம் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரர்கள் அதிபராகவும் பிரதமராகவும் தமிழர்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தம் உறவுகள் காக்கை குருவிகள்போல் கொல்லப்பட்டதை எண்ணிக் கண்ணீர்விட்டு அழக்கூட உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக நாங்கள் இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்துவருகிறோம்.''

'``தற்போதும் தமிழர்களை அடக்குகிறதா சிங்கள அரசாங்கம்?'’

``ஈழத்தில் இன்று தமிழர்கள் மட்டுமல்ல, நாங்கள் வழிபடும் தெய்வங்களும் தாங்கள் எந்த நேரத்திலும் ராணுவத்தால் தகர்க்கப்படலாம் என்ற பதற்றத்தோடுதான் உள்ளனர். 2009-க்கு முன்னர் விடுதலைப்புலிகள் எம் மண்ணையும் மக்களையும் மட்டும் பாதுகாத்து நிற்கவில்லை; எமது கோயில் தெய்வங்களையும்தான் பாதுகாத்து நின்றனர். இன்று கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என நூற்றுக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள் நிறுவப்பட்டுவருகின்றன. கொரோனாவால் உலகமே மூச்சுவிட முடியாத சூழலில்கூட தமிழர்களின் மூச்சை அடக்குவதை ராஜபக்சே சகோதரர்கள் முழுநேரப் பணியாக முன்னெடுத்துவருகின்றனர்.

குறுந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் ராணுவம்
குறுந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் ராணுவம்

தமிழர்கள் தாயக நிலத்தில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து குடியமர்த்தப்படுகிறார்கள். முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்திடம் ரத்தமும் சதையுமாக ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகளின் இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு எமது மக்களை ராணுவம் மிரட்டுகிறது. தமிழர்கள் கைதுசெய்யப்படுவது இன்று அன்றாடம் நடக்கிறது. முஸ்லிம்கள் மீதும் சிங்களப் பேரினவாதிகளின் அடக்குமுறைகள் தொடர்கின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான இந்த 12 ஆண்டுகளில் கட்டமைப்புரீதியாக தமிழின அழிப்பு தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால், விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆண்டுகளில் இலங்கைத் தீவில் தமிழினம் இருந்த தடயமே இல்லாமல் அழிக்கப்படக் கூடும்.''

``இனப்படுகொலைக்கான நீதி கோரும் செயல்பாடுகள் எந்த அளவில் உள்ளன?’’

``விடுதலையோ, நீதியோ தங்கத் தாம்பூலத்தில் வைத்து உலகம் கொடுக்கப்போவதில்லை. அது தமிழர்களின் உறுதியில்தான் தங்கியிருக்கிறது. கடந்த 6-ம் தேதி கனடாவிலுள்ள ஒன்டோரியா மாகாணத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவாக மே 12 முதல் மே 18 வரையான ஒரு வார காலம் இன அழிப்புக் கல்வி வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஈழத் தமிழர்களின் உறுதிமிக்க உழைப்பால் அது நடந்தது. ஐந்து லட்சம் தமிழ் அகதிகள் வாழும் கனடாவில் தமிழின அழிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளபோது, எட்டுக் கோடித் தமிழர்களைக் குடிமக்களாகக்கொண்ட இந்தியாவில் அது ஏன் நடக்கவில்லை?

காணாமல் ஆக்கப்பட்ட நினைவுக்கல்
காணாமல் ஆக்கப்பட்ட நினைவுக்கல்

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கான நீதியை உலகத் தமிழர்கள் வென்றெடுக்கவில்லையென்றால், தமிழர்களின் ஆளுமை குறித்து உலக சமூகம் நிச்சயம் வரலாற்றில் கேள்வி எழுப்பும். மேலும் இன அழிப்புக்கு நீதி என்பது ஈழத் தமிழர்களின் இருத்தல் பற்றியது மட்டுமல்ல, தமிழினத்தின் சுயமரியாதை பற்றியதும்தான்.’’

Vikatan

``தமிழகத்தில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்தை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’’

``மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நோக்கி இருக்கிறோம். சம்பிரதாயமான தீர்மானங்கள் என்ற இடத்திலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். தமிழினத்தை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசுடனான உறவை இந்திய அரசு முறிக்கச் செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்களுடைய, அவர்களின் பிரதிநிதியாகிய தமிழக அரசினுடைய கடமை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

ஈழ விடுதலைக்கு தமது பூகோள நலன் கருதி உலகம் கதவடைத்து நிற்கிறது. இதை இந்திய மத்திய அரசின் ஊடாகத் திறப்பதற்கான சாவி சென்னையில்தான் இருக்கிறது. ஈழம், சென்னை, புதுடெல்லி என்ற மூன்று தளங்களும் ஒரு நேர்க்கோட்டில் வந்தால் தவிர விடியல் பிறக்காது, நீதியின் கதவுகள் திறக்காது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசு சென்னையில் இருக்கும் சாவியைக் கையில் எடுத்தால், பூட்டிக் கிடக்கும் இந்தியக் கதவு திறக்கும், ஈழத் தமிழருக்கு விடியல் பிறக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு தமிழ்நாட்டை உற்றுநோக்கியிருக்கிறது தமிழீழம்.''

அடுத்த கட்டுரைக்கு