Published:Updated:

`மீண்டும் ஆவின் தலைவராகிறாரா ஓ.ராஜா?!' - சர்ச்சையில் தேனி ஆவின்

ஓ.ராஜா
ஓ.ராஜா

நாளை மீண்டும் ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை ஆவின், 50 ஆண்டுக்கால வரலாறு கொண்டது. தேனி, மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை ஆவின், கடந்த ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரை, தேனி எனத் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தது. இதனால், தேனி ஆவினில், 17 இயக்குநர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் 33,000 பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம், பால் கொள்முதல் செய்கிறது.

ஓ.ராஜா
ஓ.ராஜா
Vikatan

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராக அறிவிக்கப்பட்டு, 17 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். தேனி என்.ஆர்.டி நகரில் 50,000 ரூபாய்க்கு வாடகை கட்டடம் எடுத்து, தேனி ஆவின் அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் ஓ.ராஜாவின் அண்ணன் மகனும் தேனி எம்.பி’யுமான ரவீந்திரநாத்குமார் கலந்துகொண்டார்.

ஓ.ராஜா
ஓ.ராஜா

இந்நிலையில், `பொதுக்குழுவை கூட்டி, தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், ஓ.ராஜா, முறைகேடாகத் தன்னை தேனி ஆவின் தலைவராக அறிவித்துக்கொண்டார்’ எனக் கூறி, தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, ஓ.ராஜா மற்றும் இயக்குநர்களின் நியமனத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டது.

“ஆவினில் ஆட்டம் போடுகிறார் ஓ.ராஜா!”

இவ்வளவு களேபரங்கள் நடந்துள்ள நிலையில், நாளை மீண்டும் ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, அம்மாவாசி தரப்பில், தேனி பால் வளத்துறை துணைப்பதிவாளர் லெட்சுமியிடம், புகார் மனு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாகத் துணைப்பதிவாளார் லெட்சுமியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ``தேனி ஆவின் தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை!” என முடித்துக்கொண்டார்.

பின் செல்ல