Published:Updated:

`மம்தாவுக்கு இடதுசாரிகள்; மாயாவதிக்கு காங்கிரஸ்!’ - சோனியா கூட்டத்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

`அவர் உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை மட்டும்தான் சந்திப்பார் என்றால் அதை அரசியல் லாபம் அல்லது அரசியல் நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும்’ - மாயாவதி

சோனியா காந்தி - மாயாவதி மம்தா பானர்ஜி
சோனியா காந்தி - மாயாவதி மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி, இன்று மதியம் அனைத்துக் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை சி.ஏ.ஏ விவகாரத்தில் எதிர்கொள்வது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய அரசுக்கு எதிராகக் கூட்டாகச் செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சோனியா காந்தியே அழைப்பு விடுத்ததால் பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இடதுசாரிகள், திரிணாமுல் கட்சியின் சங்க உறுப்பினர்களைத் தாக்கியதாகக் கூறி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என மறுத்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ``மாநிலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நடந்த விஷயங்கள் என்னை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதபடி செய்துவிட்டன. சிஏஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராக முதன்முதலாகப் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது நான்தான். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் காட்டும் சி.ஏ.ஏ-என்.ஆர்.சி எதிர்ப்புகள் ஓர் இயக்கமாக இல்லை. அது வன்முறையாக உள்ளது” எனச் சாடினார்.

காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் இடதுசாரிகள் கலந்துகொள்வதுதான் மம்தா கலந்து கொள்ளாததுக்கு முக்கிக்ய காரணமாகச் சொல்லப்படுகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இந்நிலையில் இன்று நடைபெறும்கூட்டத்தில் தானும் கலந்துகொள்ளப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பி.எஸ்.பி கட்சிக்கு இருந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதைத்தான் காரணமாக மாயாவதி கூறியுள்ளார்.

தற்போது காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால், அது ராஜஸ்தானில் உள்ள தனது கட்சி உறுப்பினர்களுக்குப் பெரும் சோர்வைத் தரும் என அவர் தெரிவித்துள்ளார்.

`மோடி, தன்னை விமர்சிக்கும் 5 பேருடன் விவாதிக்க வேண்டும்!’ - ப.சிதம்பரம் சொன்ன யோசனை #CAA

மாயாவதி பேசுகையில், ``பி.எஸ்.பி கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரித்தபோதும் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது. தற்போது காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்வது சரியானதாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

மாயாவதி
மாயாவதி

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் தொடர்ச்சியாகக் குழந்தைகள் பலியானது தொடர்பாகப் பேசிய மாயாவதி, ``பிரியங்கா காந்தி, ராஜஸ்தானில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும். அல்லாமல், அவர் உத்தரப்பிரதேசத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை மட்டும்தான் சந்திப்பார் என்றால் அதை அரசியல் லாபம் அல்லது அரசியல் நாடகம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் கொதிப்புடன்.