Published:Updated:

கட்சி உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத எம்.எல்.ஏ - அதிரடி காட்டிய மாயாவதி!

விஷ்ணுராஜ் சௌ

பகுஜன் சமாஜ் கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரான மகேஷ், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை.

மாயாவதி
மாயாவதி ( விகடன் )

கர்நாடகா சட்டமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பானது, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

மாயாவதி
மாயாவதி

ஆறு வாக்குகளில் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து, 14 மாதங்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளனர், எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி-யினர்.

கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்டது. ஆனால், அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றபோது மொத்தம் 204 உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெற்று வாக்களித்துள்ளனர்.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரான மகேஷ் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை. அதையடுத்து, உடனடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.

இதுகுறித்து மாயாவதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``கர்நாடகாவில் குமாரசாமி அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி உயர் கட்டளையின் அறிவுறுத்தல்களை மீறி, பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதைக் கட்சி மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு மகேஷைக் கட்சியிலிருந்து வெளியேற்றுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.