உத்தரப்பிரதேச தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் 'பீம் ஆர்மி' தலைவர் சந்திரசேகர் ஆசாத். இவர் அம்மாநில மக்களிடம் தனது 'பீம் ஆர்மி' அமைப்பு மூலமாகவும், சமூகப் பணிகள் மூலமாகவும் பிரபலமானவர்.
ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மாயாவதியின் நடவடிக்கைகள் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் கொள்கைகளை கடுமையாகப் பாதித்துள்ளது. அவரின் கொள்கைகளை சிதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தன்னையும், தனது சகோதரர்களையும், மற்ற உறவினர்களையும் காத்துக்கொள்ள, பிரதமர் மோடி மற்றும் பாஜகவிடம் மாயாவதி சரணடைந்துவிட்டார்.

மாயாவதி, பட்டியல் இனத்தவர்களுக்கு செய்யும் துரோகத்தை, நானும் என் அமைப்பை சார்ந்தவர்களும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பலத்தால் மட்டுமே நாட்டின் பாசிச சக்திகளை தோற்கடிக்க முடியும். இதன் விளைவாக தான் நாட்டின் பட்டியலினத்தவர்களை ஒன்றிணைக்கும் பிரசாரத்தை பீம் ஆர்மி நடத்தி வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் எப்போதும் பட்டியல் சமூகத்தை ஒடுக்கவே பாடுபட்டு வருகின்றனர்'' என்றார்.
