Published:Updated:

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்

சேனல் ஆசையைக் கைவிட்ட மாஜி; ரவுண்டுகட்டி அடித்த ஊட்டி நகராட்சி; அமைச்சர் செய்த சமாதானம்; தேர்தல் நிதி கொடுக்காததால் அட்ராசிட்டி; சி.வி.சண்முகம் மீது புகார் கூறும் கட்சி நிர்வாகி; டெண்டர் விவகாரத்தில் தகிக்கும் டெல்டா! - கழுகார் அப்டேட்ஸ்

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

சேனல் ஆசையைக் கைவிட்ட மாஜி; ரவுண்டுகட்டி அடித்த ஊட்டி நகராட்சி; அமைச்சர் செய்த சமாதானம்; தேர்தல் நிதி கொடுக்காததால் அட்ராசிட்டி; சி.வி.சண்முகம் மீது புகார் கூறும் கட்சி நிர்வாகி; டெண்டர் விவகாரத்தில் தகிக்கும் டெல்டா! - கழுகார் அப்டேட்ஸ்

Published:Updated:
கழுகார் அப்டேட்ஸ்
தொடர் ரெய்டு...
சேனல் ஆசையைக் கைவிட்ட மாஜி!

கொங்கு மண்டல மாஜி மீதான விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. அவரின் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தப் பேரின் முதலீடுகள், நிறுவனங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்திருப்பதால், அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே இவர்கள் ஒரு சாட்டிலைட் சேனல் தொடங்க அனுமதி வாங்கியிருந்தார்கள். முதற்கட்டமாக டிஜிட்டல் ஊடகமாகத் தடம் பதித்து, தொலைக்காட்சிகளில் சோதனை ஓட்டத்தையும் தொடங்கியிருந்தார்கள். இந்த நிலையில், ரெய்டுகள் தொடர்வதால் தற்போது அவசர அவசரமாக அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள்!

பிளாஸ்டிக் தடை... உசுப்பேற்றிய தி.மு.க கவுன்சிலர்கள்...
ரவுண்டுகட்டி அடித்த ஊட்டி நகராட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் நடந்த ஊட்டி நகர்மன்றக் கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலரும், கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான முஸ்தபா, ‘‘ஊட்டியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தால், அதை அதிகாரிகள் கண்டுகொள்ளக் கூடாது’’ என்று பேசினார். மற்றொரு தி.மு.க கவுன்சிலர் கீதா, ‘‘மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் மக்கள் அப்படியே மொத்தமாகக் கொடுத்துவிடலாம். அவற்றைத் தூய்மைப் பணியாளர்களே பிரித்துக்கொள்ளட்டும்’’ என்று பேசினார்.

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்
கே.அருண்

கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு எதிராகவும், சட்டத்துக்கு முரணாகவும் இவர்கள் பேசியதைக் கேட்டு, உள்ளூர் உடன்பிறப்புகளே முகம் சுளித்தார்கள். ஆனால், இவர்கள் இப்படிப் பேசியதற்கு மறுநாளே ஊட்டி மார்க்கெட்டில் ரவுண்டுகட்டிய நகராட்சி ஆணையர் காந்திராஜ், நூறு கிலோ பிளாஸ்டிக் கவர்களைப் பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார். இதையடுத்து வியாபாரிகள், “இவங்க பேசாம இருந்திருந்தாக்கூட இவ்வளவு கெடுபிடி காட்டியிருக்க மாட்டாங்க...” என்று புலம்பியது தனிக்கதை!

உறுப்பினர் சேர்க்கையில் மந்தம்...
சமாளிக்கும் சத்தியமூர்த்தி பவன்!

காங்கிரஸ் கட்சிக்கு ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை இருநூறு, முந்நூறு என்று இருப்பதால், கதர் வட்டாரம் கலங்கிக்கிடக்கிறது. அதேபோல ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்காததால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்களை எப்படிச் சேர்ப்பது என்று தெரியாமல் திணறுகிறார்களாம்.

சத்தியமூர்த்தி பவன்
சத்தியமூர்த்தி பவன்

இது பற்றிப் பேசிய கதர்கள் சிலர், “கடந்த நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்ததால், கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால், உறுப்பினர் சேர்க்கைக்குப் பலரும் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஆளுக்கு 20 பேரை உறுப்பினராகச் சேர்த்திருந்தால்கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஆயிரம் உறுப்பினர்களையாவது சேர்த்திருக்கலாம். ஆனால், உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்ட பிறகு பலரும் கட்சி அலுவலகம் பக்கம் தலைகாட்டவில்லை” என்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்!’’
அமைச்சர் செய்த சமாதானம்...

சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் பணி நியமனம் நடந்தது. இதில் தலைக்கு 8 லட்சம் ரூபாய் வீதம் வாங்கி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பங்கு பிரித்துக்கொண்டார்கள். பணம் கொடுக்காததால் தி.மு.க பிரமுகர்கள் சிலரின் வாரிசுகளுக்கு வேலை கிடைக்காமல் போக, அவர்கள் இந்த விவகாரத்தை அமைச்சர் ஒருவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, ‘‘முறைகேடான இந்த நியமனங்களை ரத்துசெய்ய வேண்டும்” என்று புலம்பியிருக்கிறார்கள். அதற்கு அந்த அமைச்சரோ, ‘‘நியமனத்தை ரத்துசெய்தால், அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள். அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி வரும் பணி நியமனங்களில் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று சமாளித்து அனுப்பிவிட்டாராம்!

திருவண்ணாமலையில் ஆதிக்கம் செலுத்தும் கம்பன்!
வாரிசை வளர்த்துவிடும் அமைச்சர் எ.வ.வேலு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பனின் ஆதிக்கம் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள். நீர்த்தேக்கங்களைப் பார்வையிடுதல், கோயில் அறங்காவலர் நியமன நிகழ்ச்சிகள், நகராட்சிப் பள்ளிகளுக்குச் செல்வது என அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கேள்வி கேட்டு, துளைத்துவிடுகிறாராம்.

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இது பற்றிப் பேசும் உள்ளூர் உடன்பிறப்புகள், “அமைச்சர் எ.வ.வேலுவின் உத்தரவுப்படிதான் கம்பன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மகனைப் பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவைத்து, கட்சியில் நல்ல பொறுப்பு பெற்றுவிட வேண்டும் என்பதே வேலுவின் திட்டம். பொறுப்பு வாங்கிய பிறகு, தான் கட்சி மேலிட விவகாரங்களை மட்டுமே கவனித்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தை மகனின் பொறுப்பில் விடுவதுதான் வேலுவின் அரசியல் கணக்கு” என்கிறார்கள்!

பள்ளி கேட்டைப் பூட்டிய மேயர்!
தேர்தல் நிதி கொடுக்காததால் அட்ராசிட்டி...

வட மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாநகராட்சிக்கு, தன் ஆதரவாளரின் மனைவியை மேயராக்கினார் பசுமை அமைச்சர். பதவிக்கு வந்ததுமே ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு மிரட்டிய மேயரின் கணவர், தேர்தலின்போது தனக்கு நிதி கொடுக்காத நிறுவனங்களிடம், ‘சீல் வைத்துவிடுவோம்’ என்று மிரட்டி வசூல் வேட்டை நடத்துகிறாராம். அந்த மாவட்டத்தின் பாரம்பர்யமான நகைக்கடை ஒன்று, தேர்தல் நேரத்தில் இவர்கள் கேட்ட நிதியைக் கொடுக்கவில்லை.

அதனால், அந்த நிறுவனத்தினர் நடத்திவரும் பள்ளிக்கூடத்துக்குக் கட்சிக்காரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்ற மேயரின் கணவர், பள்ளியின் கேட்டைப் பூட்டியிருக்கிறார். அப்போது பள்ளி தொடங்கும் நேரம் என்பதால், ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வெளியே சுமார் மூன்று மணி நேரம் தவித்திருக்கிறார்கள். பெட்டி கைமாறிய பிறகே, பள்ளி கேட்டைத் திறந்துவிட்டதாம் மேயர் தரப்பு. இதற்கு முன்பு இதே பாணியில் மூன்று மருத்துவமனைகளில் வசூல் வேட்டையை முடித்துவிட்டார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ.எஸ்.மணியனின் காரை வழிமறித்து தர்ணா..
சி.வி.சண்முகம் மீது புகார் கூறும் கட்சி நிர்வாகி!

விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் மார்ச் 27 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில், கோலியனூர் ஒன்றியப் பொருளாளர் ஜே.பி.அன்பழகன் அதே பதவியில் போட்டியிட விண்ணப்பக் கட்டணம் செலுத்த வந்திருக்கிறார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவரைப் பணம் கட்டவிடாமல் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆட்கள் தடுத்துவிட்டார்களாம்.

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், கட்சி அலுவலகத்துக்கு முன்பு ஓ.எஸ்.மணியனின் காரை வழிமறித்து, தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அழைத்துப் பேசிய ஓ.எஸ்.மணியன், ‘‘நான் வந்திருக்கிறேனே... ஒரு வார்த்தை என்னைப் பார்த்து சொன்னியா... இப்போ தர்ணா செஞ்சு என்னை அசிங்கப்படுத்துறியா?’’ என்று கேட்டுவிட்டுப் பறந்துவிட்டார். ‘‘பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அவர் சார்ந்த சமூகத்தினருக்கும், தனக்கு இணக்கமானவர்களுக்கும் மட்டுமே பதவியைக் கொடுக்கிறார் சி.வி.சண்முகம்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் ஜே.பி.அன்பழகன்.

‘‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!’’
டெண்டர் விவகாரத்தில் தகிக்கும் டெல்டா

அ.தி.மு.க ட்ரீட்மென்ட் புள்ளியின் பினாமி என்று கூறப்படும் அவரது பெயரையேகொண்ட முதல்நிலை ஒப்பந்ததாரர் ஒருவர், கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களைப் பெரிய அளவில் எடுத்து செய்துவந்தார். தற்போது தி.மு.க ஆட்சியிலும் அதே ஒப்பந்ததாரர் கோலோச்சிவருவது, தி.மு.க-வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காவிரிக் கரையோர ஊரில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது.

அதைக் கைப்பற்ற இனிஷியல் அமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், ‘லோக்கலில் உள்ளவர்களையும் கவனியுங்கள்’ என்று கைகாட்ட... ஏரியா மக்கள் பிரதிநிதியையும் அவரின் அலுவலகத்துக்கே சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இதையடுத்து, “அவர் அ.தி.மு.க ட்ரீட்மென்ட் புள்ளியின் பினாமி என்று ஊருக்கே தெரிந்தும், பெரிய பெரிய டெண்டர்களில் அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்... இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா?” என்று புலம்புகிறார்கள் தி.மு.க-வைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள்!

செல்லப்பாண்டியன் Vs சண்முகநாதன்...
கோஷ்டிப்பூசலில் தூத்துக்குடி அ.தி.மு.க

விரைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதை முன்வைத்து தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பதற்கு, காய்நகர்த்திவருகிறார் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மா.செ-வுமான சண்முகநாதனும் செல்லப்பாண்டியனும் தனித்தனி அணியாக முறுக்கிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

இந்த நிலையில், ‘‘கட்சித் தலைமை கொடுத்த பணத்தை மாநகராட்சித் தேர்தல்ல சண்முகநாதன் செலவு செய்யவே இல்லை. தன் மகன் ராஜாவை கவுன்சிலராகவும், மகள் புவனேஸ்வரியை பெருங்குளம் பேரூராட்சித் தலைவராகவும் ஜெயிக்க வெச்சவரு, தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளைக் கண்டுக்கவே இல்லை.

பள்ளி கேட்டைப் பூட்டி மேயர் அட்ராசிட்டி முதல் வாரிசை வளர்த்துவிடும் எ.வ.வேலு வரை! -கழுகார் அப்டேட்ஸ்

அதனாலதான் 15 வார்டுகள் வரைக்கும் வெற்றிவாய்ப்பு இருந்தும், இங்கே ஆறு வார்டுகள்ல மட்டுமே அ.தி.மு.க ஜெயிக்க முடிஞ்சது’’ என்று சண்முகநாதன் மீது கட்சித் தலைமையிலும் புகார் வாசித்திருக்கிறாராம் செல்லப்பாண்டியன். இவர்களது கோஷ்டிப்பூசலுக்கு எண்ட் கார்டே இல்லையா என்று புலம்புகிறார்கள் தூத்துக்குடி மாவட்ட தொண்டர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism