Published:Updated:

அரசியலுக்குள் நான் வலிந்து திணிக்கப்பட்டேன்!

துரை வைகோ
பிரீமியம் ஸ்டோரி
துரை வைகோ

- சொல்கிறார் துரை வைகோ...

அரசியலுக்குள் நான் வலிந்து திணிக்கப்பட்டேன்!

- சொல்கிறார் துரை வைகோ...

Published:Updated:
துரை வைகோ
பிரீமியம் ஸ்டோரி
துரை வைகோ

ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் துரை வைகோ. தி.மு.க-வின் வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ தொடங்கிய ம.தி.மு.க-வில், 28 வருடங்களுக்குப் பிறகு வைகோவின் மகனே கட்சிப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! இப்படியான சூழலில்தான் துரை வைகோவைச் சந்தித்தோம்...

“ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராகக் கட்சியில் சிலர் கலகக்குரல் எழுப்பிவருகிறார்களே..?”

“என்னைத் தேர்வு செய்ததற்கு எதிராக இப்போது குரல் எழுப்பிவரும் ஐந்து பேர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்மட்டக் குழுவின்போதே எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான். எதிர்ப்பு தெரிவித்திருக்கும் இந்த ஐந்து பேருக்கும் கட்சியின் சார்பாக நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கப்படும். அதற்குப் பிறகுதான் என்ன நடவடிக்கை என்பதைக் கட்சி முடிவுசெய்யும்.’’

“வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ம.தி.மு.க-வும் இன்று வாரிசு அரசியலைப் பின்பற்றுகிறதே?”

“நான்கு வருடங்களுக்கு முன்புவரை, எனக்கு அரசியல் ஆர்வம் துளியும் இருந்ததில்லை. ஆனால், அப்பாவுக்கு வயதாகிவிட்டது. உடல்நிலை மோசமடைந்துவருகிறது. குறிப்பாக, மூன்றாண்டுகளுக்கு முன்பே திடீரென அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. அது 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரம்... அப்பா பிரசாரத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற சூழலில், பிரசாரத் திட்டங்களை வகுக்கவும் அப்பாவின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும் ‘ஒரு மகன் தந்தைக்காற்றும் உதவியாகத்தான்’ நான் அரசியலுக்குள் வந்தேன். தொண்டர்களுக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தேன். இதைப் பார்த்த தொண்டர்களும் நிர்வாகிகளும், ‘தலைவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு நீங்களும் தலைவரோடு பயணித்தாக வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்தனர். ‘அரசியல் என்பது பெரிய நச்சுப்பாதை’ என்று தெரிந்திருந்ததால், நான் தொடர்ந்து மறுத்துவந்தேன். ஆனால், தொண்டர்களின் தொடர் வற்புறுத்தலால் நானும் அரசியலுக்குள் வர நேரிட்டது. ஆக... தொண்டர்களால் நான் அரசியலுக்குள் வலிந்து திணிக்கப்பட்டேன் என்பதே உண்மை. எனவே, இதை வாரிசு அரசியல் என்று சொல்வதே தவறான வாதம்!’’

“அப்படியென்றால், தனக்கு அடுத்து கட்சியை வழிநடத்திச்செல்லும் வகையில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரையுமே வைகோ உருவாக்கவில்லை என்கிறீர்களா?’’

“அப்படிச் சொல்ல முடியாது. இரண்டாம் கட்டத் தலைவர்களாக நிறைய பேரை ம.தி.மு.க-வில் உருவாக்கியிருக்கிறார் வைகோ. அவர்களைப் பெயர் குறிப்பிட்டுச் சொன்னால், பெயர் விடுபட்டுப் போனவர்கள் மனவருத்தம் அடைவார்கள். அரசியலில் பதவி, பொறுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அப்படிக் கட்சியில் தனக்கு வந்த வாய்ப்புகளைக்கூட தன் சகாக்களுக்குக் கொடுத்து அழகு பார்த்தவர் வைகோ. மத்திய அரசின் கேபினெட் அமைச்சர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும், அதைத் தன் கட்சியினருக்கே கொடுத்தார் அவர். பொடா சிறைவாசத்துக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வைகோ போட்டியிடுவார் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற கட்சித் தொண்டருக்குத்தான் அந்த வாய்ப்பை வழங்கினார். எப்போதுமே தன்னை முன்னிறுத்தாமல், வாய்ப்புகளை யெல்லாம் தன் கட்சியினருக்கு வழங்கிய வைகோவுக்கு இந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது.’’

“உங்கள் கட்சியின் செவந்தியப்பன், ‘ம.தி.மு.க-வை நல்ல விலைக்கு தி.மு.க-விடம் விற்றுவிடுவார் துரை வைகோ’ என்று குற்றம்சாட்டுகிறாரே?’’

“தனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர்கள் பல்வேறு அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர். அதில் இதுவும் ஒன்று... அவ்வளவுதான்!’’

அரசியலுக்குள் நான் வலிந்து திணிக்கப்பட்டேன்!

“அதேசமயம், ம.தி.மு.க-வில் எதிர்ப்புக்குரல் எழுப்பிவரும் நிர்வாகிகள், ‘தி.மு.க-வுடன் ம.தி.மு.க-வை இணைத்துவிடலாம்’ என்றும் சொல்கிறார்களே?”

“கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஐந்து பேர் மட்டுமே இது போன்று விஷமத்தனமாகப் பேசிவருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது போட்டியிட சீட் கேட்டு கிடைக்கப்பெறாதவர்கள்தான் இவர்கள். சீட் கிடைக்கவில்லை என்றதுமே, ‘கம்யூனிஸ்ட் கட்சியைவிடவும் வலிமைவாய்ந்த நமக்கும் ஆறு சீட்டுகள்தானா? கட்சியை தி.மு.க-வில் அடமானம் வைத்துவிட்டார்கள். எனவே இந்தக் கூட்டணி வெற்றிபெறாது’ என்றெல்லாம் சொல்லிக் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தினர். அடுத்து, இரண்டு தலித் வேட்பாளர்களைக் கட்சி அறிவித்ததும், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சாதிரீதியாகவும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்றனர். தேர்தலின்போதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்காமல் அவர்களது வெற்றியைத் தடுக்கச் சதி செய்தனர். இவர்களது பின்னணியில் இரண்டு சூத்ரதாரிகள் இருக்கின்றனர். அவர்கள்தான் மறைந்திருந்து இவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.’’

“யார் அந்த சூத்ரதாரிகள்?’’

“அவர்களது பெயர்களை இப்போது நான் சொல்லத் தயாரில்லை. காலப்போக்கில் அவர்களே வெளிப்பட்டுவிடுவார்கள்.’’

“ `தேர்தலில், எங்களுக்கு எதிராக வேலை செய்தார்கள்’ என்று கூட்டணிக் கட்சியினரே புகார் சொல்லாத நிலையில், நீங்களே சொந்தக் கட்சியினர்மீது குற்றம்சாட்டுகிறீர்களே?’’

“எல்லாக் கட்சிகளிலுமே அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். உதாரணமாக, நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயேகூட எங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க-வினர் சரிவர வேலை செய்யவில்லையென்றால், அது குறித்து நாங்கள் வெளிப்படையாகப் பொதுவெளியில் சொல்ல முடியாது. தி.மு.க தலைமையிடம்தான் சொல்வோம். எனவே, இது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது!’’

“கட்சியில் உங்களைப் பொறுப்புக்கு கொண்டுவந்ததன் மூலமாக, வைகோவின் பிம்பம் சிதைந்துவிட்டதுதானே?’’

“தமிழக அரசியலில் உள்ள மதிப்புமிக்க மூத்த தலைவர்களில் வைகோ முக்கியமானவர். எனவே, அவரை ஒரு பிம்பமாகவெல்லாம் சுருக்கிவிட முடியாது. ஏனெனில், வைகோ என்பவர் ஒரு சகாப்தம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism