Published:Updated:

`முகிலன் நலமுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!' - வைகோ

வைகோ
வைகோ

திருச்சி வந்துள்ள வைகோ, வேட்புமனு ஏற்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்ததுடன், வேட்புமனு விவகாரத்தில் தோழர்கள் அமைதியாக இருக்கும்படி வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என விவாதம் தொடங்கியுள்ளது. திருச்சி வந்துள்ள வைகோ, வேட்புமனு ஏற்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்ததுடன், வேட்புமனு விவகாரத்தில் தோழர்கள் அமைதியாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவர், குற்றவாளி எனவும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வைகோ மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இப்படியான பரபரப்புகளுக்கு மத்தியில் வைகோ பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்த வைகோ
வேட்புமனுத் தாக்கல் செய்த வைகோ

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவரை, ம.தி.மு.க மாநில மகளிரணிச் செயலாளர் டாக்டர்.ரொகையா, மாவட்ட நிர்வாகிகள் சேரன், வெல்லமண்டி சோமு, அரியலூர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, பெரம்பலூர் ரோவர் வரதராஜன், மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் சகிதமாக திரண்டு வந்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ``மத்திய அரசு திட்டமிட்டு நீட் தேர்வு தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருந்துள்ளது. அப்படியே வைத்திருந்து, அந்த தீர்மானம் செல்லாது எனக் கூறியிருப்பது, மத்திய அரசு தமிழகத்துக்குச் செய்த பல அநீதிகளில் முக்கியமான அநீதி. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுங்கட்சியின் கன்னத்தில் மத்திய அரசு அறைந்துள்ளது. குறிப்பாகத் தமிழக மக்களுக்குச் செய்த அநீதியும் துரோகமுமாகும்.

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனதிலிருந்து, அவர் உயிரோடு இருக்க வேண்டும். அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறிவருகிறேன். நேற்று முகிலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், கர்நாடக ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக் குறிதான்'' என்றவர்,

`இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில் நீங்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளீர்கள். இந்த நிலையில், உங்களின் வேட்புமனு ஏற்கப்படுமா?' என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த வைகோ, ``எனது வேட்பு மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து தற்போது நான் சொல்ல முடியாது. வரும் 9-ம் தேதி வேட்பு மனு பரீசிலனை நடக்க இருக்கிறது. அதுகுறித்து நான் கருத்து செல்வது சரியாக இருக்காது. அதனால் வேட்புமனு பரிசீலனை நடக்கும் அன்றுதான் எனது வேட்புமனு ஏற்பதும், நிராகரிக்கப்படுவது தெரியும். அதுவரை கட்சிக்காரர்கள் அமைதியாக இருக்க வேண்டும்'' என்றார்.

வைகோ
வைகோ

மேலும், ``நீட் தேர்வால் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவிகள் வாய்ப்பை இழந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது. அதுமட்டுமல்லாமல் கிராமப்புற மாணவர்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் அமைச்சர் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்ததுடன் மாணவர்களையும், பொதுமக்களையும் நம்ப வைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மத்திய அரசு. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், `தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரும் தமிழக மசோதாவை மத்திய அரசு ரத்து செய்துவிட்டதாக' கூறியிருக்கிறார்'' என்றார்.

வைகோ
வைகோ

இறுதியாக பட்ஜெட் குறித்து கூறிய அவர், ``பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், விலையேற்றம் இருக்கும். இது நிதி அமைச்சருக்கும் புரியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு