கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மதிமுக-வின் 28-வது பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைமைக் கழகப் பொதுச்செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும், கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வைகோவுக்கு வழங்குவது தொடர்பான தீர்மானமும் கட்சித் தலைமையால் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்தில், கட்சியின் தலைமைக் கழக பொதுச்செயலாளராக துரை வைகோ ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தாலும்கூட, கட்சிக்குள்ளேயே துரை வைகோவுக்கு பதவி வழங்குவதை எதிர்த்து அப்போதே, சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் தற்போது, கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்காததாலும், கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாலும் சிவகங்கை செவந்தியப்பன், விருதுநகர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் செங்குட்டுவன் ஆகிய மாவட்டச் செயலாளர்களை, தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்வதாக வைகோ அறிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த அறிக்கையில், இந்த மூவரின் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து அவர்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால் அறிக்கை மூலம் ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்குத் தெரிவிக்கலாம் என்றும் வைகோ கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இதற்கு அடுத்தகட்டமாக ஒழுங்கு நடவடிக்கைக்குழு இறுதி நடவடிக்கை எடுக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.