Published:Updated:

`இந்தியர்களுக்கு வேறு குரல் தேவையில்லை!’ - இம்ரானுக்கு ஐ.நா-வில் பதிலடி கொடுத்த வதிஷா மைத்ரா

Vadisha Maitra
Vadisha Maitra ( Twitter\AkbaruddinIndia )

ஐ.நா பட்டியலிடும் 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கிறதா என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதி செய்ய முன்வருவாரா?

இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட உலகின் பல நாட்டின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பேசினர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது மோடி மற்றும் இம்ரான் கானின் உரைகள்தாம்.

modi at u.n
modi at u.n

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளைக் கையில் எடுத்தது பாகிஸ்தான். எனினும் உலக நாடுகளின் ஆதரவை பாகிஸ்தானால் பெற முடியவில்லை என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் இம்ரான் கான். உலக நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகரீதியான தொடர்பில் இருப்பதால் ஆதரவு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் ஆதரவு கோரும் செயலை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவை குற்றம்சாட்டிப் பேசினார். ``சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா.. காஷ்மீரில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள், தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

imran khan
imran khan

இந்திய விமானங்களை அனுப்பி எங்கள் மீது குண்டுவீசினார்கள். நாங்கள் பதிலடி கொடுத்தோம். ஒரு பைலட்டை நாங்கள் விடுவித்தோம். நாங்கள் உடனடியாக அவரை விடுவித்ததற்கு காரணம், அமைதியை விரும்பும் காரணத்தால்தான். இதை சமாதான நடவடிக்கையாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, `பாகிஸ்தானுக்கு எதிராகப் பாடத்தைக் கற்பிப்போம்’ என்று மோடி பிரசாரம் செய்துவருகிறார்” என்று பேசினார்.

இந்தநிலையில், இந்தியா சார்பில் ஐ.நா-வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் முதன்மைச் செயலாளர் வதிஷா மைத்ரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவரின் பேச்சு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. ``பாகிஸ்தான் பிரதமர் அணு ஆயுதங்கள் தொடர்பாக திரும்பத் திரும்ப பேசுவது அவரின் சாதுர்யத்தைக் காட்டிலும் போரில் ஈடுபடாத வண்ணம் செயல்படும் ராஜதந்திரத்தையே காட்டுகிறது.

`இந்தியர்களுக்கு வேறு குரல் தேவையில்லை!’ - இம்ரானுக்கு ஐ.நா-வில் பதிலடி கொடுத்த வதிஷா மைத்ரா

ஐ.நா பட்டியலிடும் 130 தீவிரவாதிகள் மற்றும் 25 தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருக்கிறதா என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிசெய்ய முன்வருவாரா... 27 நிபந்தனைகளில் 20 நிபந்தனைகளை மீறியதற்காக நிதி நடவடிக்கை பணிக்குழு அளித்த நோட்டீஸை பாகிஸ்தான் மறுக்குமா.. அல்லது ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பாதுகாக்கவில்லை என அமெரிக்காவிடம் இம்ரான் தெரிவிப்பாரா?” என அடுத்தடுத்த கேள்விகளால் அதிர வைத்தார்.

தொடர்ந்து 1971-ல் பாகிஸ்தான் சொந்த மக்களின் மேல் நடத்திய வன்முறையை நினைவூட்டிய வதிஷா மைத்ரா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ``ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவின் உண்மையான பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக். இந்தியக் குடிமக்களுக்காக வேறு யாரும் குரல் கொடுக்க வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக தீவிரவாதம் மற்றும் வெறுப்பை வளர்க்கிறவர்கள் இந்தியாவுக்காகப் பேச வேண்டாம்” என்றார் கடுமையான குரலில்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்து, ஜென்டில்மேன் விளையாட்டை நம்பிய ஒருவரின் இன்றைய பேச்சு முரட்டுத்தனத்தின் உச்சமாக இருந்தது
வதிஷா மைத்ரா

``ஐ.நா-வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் தீவிரவாதிக்கு பென்ஷன் அளிக்கும் ஒரே நாடாக பாகிஸ்தான் இருக்கும் என்றால் அதை மறுப்பீர்களா?” என பாகிஸ்தானை நோக்கிக் கேள்வி எழுப்பினார். முன்னர் தீவிரவாதி ஹபீஸ் சயீத் தனது அடிப்படையான தேவைக்குப் பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நா-விடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதைக் குறிப்பிட்டுத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் முதன்மைச் செயலாளர்.

பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர் தொடர்பாகப் பேசிய வதிஷா, ``பாகிஸ்தானில் 1947-ம் ஆண்டில் 23% ஆக இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை தற்போது 3% - ஆக குறைந்திருக்கிறது. மற்ற சமூகத்தைப் பின்பற்றுபவர்கள், கடுமையான சட்டங்கள் மூலமாகவும் துன்புறுத்தல் மூலமாகவும் கட்டாய மதமாற்றங்கள் மூலமாகவும் இது சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்து, ஜென்டில்மேன் விளையாட்டை நம்பிய ஒருவரின் இன்றைய பேச்சு முரட்டுத்தனத்தின் உச்சமாக இருந்தது” எனக் காட்டமாகப் பேசி முடித்தார்.

வெளியுறவுத்துறை முதன்மைச் செயலாளர் வதிஷா மைத்ராவின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு