Published:Updated:

தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரி - சாதக, பாதகங்கள் என்னென்ன?

தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு

`தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு வழங்க புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. இதிலுள்ள சாதக பாதங்கள் என்னென்ன?

தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரி - சாதக, பாதகங்கள் என்னென்ன?

`தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு வழங்க புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்’ என்று தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. இதிலுள்ள சாதக பாதங்கள் என்னென்ன?

Published:Updated:
தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு

இந்தியில் மருத்துவப் படிப்பு:

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட மருத்துவப் படிப்புக்கான முதலாம் ஆண்டு புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இது தொடர்பாக மத்தியப் பிரதேசம் மாநில மருத்துவத்துறை அமைச்சர், ``இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியில் பாடப் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்பை இந்தியில் கொண்டுவந்த முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் இருக்கும். மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் ஆங்கிலத்துடன், இந்தியிலும் கிடைக்கும். அதேசமயம் தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும்" என்று பேசியிருந்தார்.

இந்தியில் மருத்துவப் பாடப் புத்தகங்கள் வெளியீடு
இந்தியில் மருத்துவப் பாடப் புத்தகங்கள் வெளியீடு

அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், "மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு. இந்தி மொழியில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்கச் சிறப்புக்குழு கடந்த பிப்ரவரி மதமே அமைக்கப்பட்டுவிட்டது. மாநிலத்திலுள்ள 13 மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பு, மாணவர்களுக்கு இந்தியில் கற்பிக்கப்படும்" என்று கூறியிருந்தார். இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு திட்டம் குறித்து பிரதமர் மோடி தொடங்கி தமிழிசை வரை பலரும் பெரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்..!

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடர்பாக பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின்கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாகத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. தாய்மொழிவழிக் கற்பித்தலுடன் ஆங்கிலவழி கற்பித்தலும் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதிலும் எந்தச் சிக்கலும் இல்லை. மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும்போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்துக்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிப்பதில் சிக்கல் ஏற்படும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அகில இந்திய ஒதுக்கீடு 36 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது வேண்டுமானால், அதற்கான தேவை இருந்திருக்கலாம். அதன் பிறகு 36 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பரவலாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. அதனால், அகில இந்திய ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு இன்றைய சூழலில் எந்தவிதத் தேவையும் இல்லை. தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்துக்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வித் திட்டத்தை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழைக் கட்டாய பயிற்று மொழியாக்கச் சட்டம் கொண்டுவந்து, நிறைவேற்றி, செயல்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரி!

தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு கொண்டுவரப்படுமா என்று பல தரப்பினரும் நீண்ட வருடங்களாக் கோரிக்கை முன்வைத்துவருகிறார்கள். இது தொடர்பாகப் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ``தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில், தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைத்திட வேண்டும் என்றும், அது தமிழ்வழியில் மருத்துவக் கல்லூரியாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதேசமயத்தில், முதலில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என்று முடிவுசெய்தோம்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

அதன்படி, மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் போன்ற ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்தக் கல்லூரிகளுக்கான ஒப்புதல் கிடைத்ததும், சென்னையில் தமிழ்வழியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வருடமாக மூன்று மருத்துவப் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்களை மொழிபெயர்த்துவருகிறார்கள். இன்னும் மூன்று மாதங்களில் இந்ப்த பணி முடிக்கப்படும். அதன் பிறகு, வல்லுநர்களிடம் கொடுத்துச் சரிபார்க்கப்பட்டு புத்தகத்தை முதல்வர் வெளியிடுவார்" என்று பேசியிருந்தார்.

தமிழ்வழியில் மருத்துவக் கல்வி சாதகமா... பாதகமா?

இந்த விவகாரம் தொடர்பாக, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். "ஒவ்வொரு நபருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை தாய்மொழியில் படிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மருத்துவப் படிப்பும் இதில் அடங்கும். மத்திய அரசு, உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கி, பல கல்வி நிறுவனங்களால் இந்தியைக் கொண்டுவர முயல்கிறது. இதற்குப் பின்னல் மோசமான அரசியல் இருக்கிறது. அது ஏற்புடையது கிடையாது. மத்தியப் பிரதேசம் மருத்துவக் கல்லூரிகளில் இந்தி மொழியைக் கொண்டுவருகிறது. அனைத்து இந்திய இட ஒதுக்கீட்டில் ஒரு இந்தி பேசாத மாணவன் அங்கு சென்று படிக்க முடியாத நிலை ஏற்படும். அந்த மாணவனும் இந்தி கற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார். இது மறைமுக இந்தித் திணிப்பு என்றே கருத வேண்டும்.

மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

தாய் மொழியில் மருத்துவம் சொல்லிக்கொடுக்கும் சீனா, ரஷ்யா போன்ற சர்வதேச நாடுகள் தற்போது ஆங்கிலத்தில் மருத்துவம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. சர்வதேச அளவில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் நிலையில் ஆங்கிலத்தைத் தவிர்க்க முடியாது. ஆங்கிலத்தைத் தவிர்க்கும்போது, சர்வதேச வேலைவாய்ப்பு, அகில இந்திய வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு வாய்ப்புகளை இழக்க நேரிடும். தமிழ்வழிக் கல்வி... மருத்துவக் கல்லூரிகளில் வரவேற்கத் தக்க ஒன்று. மாணவர்களைத் தமிழ் மொழியில் மருத்துவம் படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், தமிழில் பாடம் நடத்தப்படும் அதே சமயத்தில், அந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் போதிக்க வேண்டும். இதை அரசு கட்டாயம் கருத்தில்கொள்ள வேண்டும்" என்றார் விரிவாக.