Published:Updated:

சிவகாசி: `ரூ.150 கோடியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை!' - அமைச்சர் உறுதி

கருத்தரங்கு

``தொழிலாளர்களுக்குப் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 35,961 தொழிலாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது." - அமைச்சர் கணேசன்

சிவகாசி: `ரூ.150 கோடியில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை!' - அமைச்சர் உறுதி

``தொழிலாளர்களுக்குப் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 35,961 தொழிலாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது." - அமைச்சர் கணேசன்

Published:Updated:
கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் தனியார் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு தொழிலாளர் நலத்துறை அரசு முதன்மை ச்செயலாளர் மற்றும் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கையேடு வெளியீடு
கையேடு வெளியீடு

இந்தக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000 மதிப்பிலும், ஒரு வளரிளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20,000 என மொத்தம் ரூ.1,45,000 மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் கூட்டாக வழங்கினர்.

இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில், பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. எதிர்காலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். பட்டாசு விபத்துகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு, சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்படவிருக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும், மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நல உதவி
நல உதவி

சிவகாசியில் தயாரிக்கக்கூடிய பட்டாசுகள்தான் உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்குக் காரணமாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கக்கூடிய மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், விபத்தில்லா பட்டாசுத் தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதன் விளைவாகவே இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்தத் தொழிலைச் செய்துவருகின்றனர். அவர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் உண்டு. இந்தியாவிலேயே, அதிகமாக விருதுநகர் மாவட்டத்தில்தான் 1,066 பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 56,000 தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆண்டுதோறும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் தீபாவளி நேரத்தில் மட்டும் 1,129 ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் 585 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தொழிலாளர்களுக்குப் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு, 35,961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

உதவி
உதவி

மேலும், பட்டாசு விபத்து குறித்து 1,241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. குறிப்பிடும்படியாக, 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்துகூட ஏற்படவில்லை. பயிற்சியின்மை, அனுபவமின்மை, பணிச்சுமை, அதிக நேரம் பணியாற்றுவது, உற்பத்தியைப் பெருக்க அவசரமாகப் பணியாற்றுவது மற்றும் மருந்துகளை அதிக அழுத்தத்தில் கையாள்வது ஆகிய காரணங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்தக் கருத்தரங்கை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, பட்டாசு விபத்தைத் தடுப்பதற்கு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பட்டாசு உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், உறுதுணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.