Published:Updated:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து! - பின்னணி என்ன?

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி

புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆணையம் ரத்துசெய்திருக்கிறது.

Published:Updated:

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து! - பின்னணி என்ன?

புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ ஆணையம் ரத்துசெய்திருக்கிறது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி

புதுச்சேரி கதிர்காமத்தில் 2011-ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியில் 180 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கு சேரும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவக் கல்வி அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆணைய அதிகாரிகள் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையைப் பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது இந்திய மருத்துவ ஆணையம்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுவை மாநில அ.தி.மு.க துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன், “பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நிர்வாகச் சீர்கேடுகளைக் களையும்படி புதுவை அரசை தேசிய மருத்துவ ஆணையம் ஆறு மாதங்களுக்கு முன்பே எச்சரித்திருக்கிறது. தற்போது கல்லூரியின் அங்கீகாரமே ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கெனவே மருத்துவம் படித்துவரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகியிருக்கிறது. எனவே, உடனடியாக இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும். அவரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கூறியது தவறு என்றால் முதலமைச்சர் என்மீது வழக்கு தொடரட்டும். நீதிமன்றத்தில் ஆதாரத்தைச் சமர்பிக்கத் தயார். மருத்துவ ஆணையத்திடமிருந்து ரத்து உத்தரவு புதுவை அரசுக்கு வந்து மூன்று நாள்களாகின்றன. இதற்குக் காரணமான மருத்துவக் கல்லூரி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். வவுச்சர் ஊழியர்களைச் சட்டத்துக்குப் புறம்பாக பணி நிரந்தரம் செய்வதில் முதல்வர் அக்கறைகாட்டினார். ஆனால், மருத்துவர்கள் நியமனத்தில் அக்கறை காட்டவில்லை. இதனால்தான் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்துசெய்திருக்கிறது" என்றார்.

இது பற்றி விளக்கம் கேட்க புதுவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் உதயசங்கரை தொடர்புகொண்டபோது, "சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு உள்ளிட்ட சில குறைபாடுகளை தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவற்றை முழுமையாகச் சரிசெய்து மீண்டும் அனுமதி பெற ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறோம். விரைவில் அனுமதி கிடைக்கும்” என்றார்.