Published:Updated:

` `நீட்’ல 505 மார்க் எடுத்தும் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கேன்!’ - உடுமலை அசோக்கின் கண்ணீர்க் கதை

அசோக்

இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற பின்னும் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசுகிறார் அசோக்.

Published:Updated:

` `நீட்’ல 505 மார்க் எடுத்தும் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கேன்!’ - உடுமலை அசோக்கின் கண்ணீர்க் கதை

இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற பின்னும் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசுகிறார் அசோக்.

அசோக்

"தனியார் கல்லூரியில லட்சக்கணக்கில் செலவு செஞ்சு படிக்கிற அளவுக்கோ, திரும்ப நீட் கோச்சிங் சென்டர்ல சேர்றதுக்கோ பொருளாதார வசதி இல்லை. குடும்ப வருமானத்துக்கு ஆதாரமாக இருந்த எங்க அப்பாவும் சில நாள்களுக்கு முன்னாடி கொரோனாவுல இறந்துட்டாங்க. எங்க அம்மாவோட உடல்நிலையும் சரியில்லாததால நான்தான் கூலி வேலைக்குப் போயிட்டு இருக்கேன்'' நா தழுதழுக்கப் பேசுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அசோக் மிதுன்.

அசோக் - நீட்
அசோக் - நீட்

உயர் கல்வி என்பதே ஆடம்பரம் என நினைக்கும் குடும்பச் சூழலில், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கடின உழைப்பைச் செலுத்தி நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளார் அசோக் மிதுன். 2019-ல் 12-ம் வகுப்பை முடித்தவர், 2 வருடங்கள் தொடர்ந்து முயன்று, இந்த வருடம் நீட் தேர்வெழுதி 505 மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றுள்ளார். அந்த நேரத்தில் தந்தையும் இறந்துவிட, தனியார் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிவிட்டார் அசோக். அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சொற்ப மதிப்பெண்களில் வாய்ப்பை இழந்துள்ளார். இவ்வளவு மதிப்பெண் பெற்ற பின்னும் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என்று மனம் நொந்து பேசுகிறார் அசோக்.

"முதல் முறையா 2019-ல நீட் தேர்வெழுதி 164 மார்க் எடுத்தேன். 2020-ம் ஆண்டு நடந்த தேர்வுல 346 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கலை. தொடர்ந்து, எப்படியாவது எம்.பி.பி.எஸ் சேர்ந்திடணும்னு வீட்டுல இருந்தபடியே அரசு பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு, முழு வீச்சுடன் படிச்சு கடந்த நீட் தேர்வுல (2021) 505 மதிப்பெண்கள் எடுத்தேன். எப்படியாவது சீட் கிடைச்சுடும்னு சந்தோஷமா இருந்த நேரத்துல, எங்க அப்பாவுக்கு கொரோனா வந்துடுச்சு. அப்பா எப்படியாவது குணமடைஞ்சு வீடு திரும்பிடுவாருன்னு முழு நம்பிக்கையோட இருந்தேன். அப்பாவை கவனிச்சுக்க மருத்துவமனை வளாகத்துல காத்திருந்த நேரத்திலும் கல்லூரி விருப்பத் தேர்வுக்கான (Choice Filling) படிவத்தை வரிசைப்படுத்தி நம்பிக்கையுடன் மனம் தளராம இருந்தேன்.

முதல்வருக்கு மெயில்
முதல்வருக்கு மெயில்

திடீர்னு அப்பாவுக்கு உடல்நிலை மோசமடைஞ்சது. கடந்த வாரம் மருத்துவமனையிலேயே அப்பா உயிரிழந்துட்டாங்க. அன்னைக்குதான் கல்லூரி விருப்பத் தேர்வுக்கான (Choice Filling) கடைசி நாளாகவும் இருந்தது. குடும்ப வறுமை காரணமாகவும், அன்னைக்கு இருந்த மனநிலையிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே விருப்பத் தேர்வாக முடிவு செஞ்சு படிவத்தை சமர்பிச்சேன்" என்று தந்தையை இழந்த வலியிலிருந்து சிறிதும் மீளாத குரலில் உரையாடினார் அசோக் .

சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி ஒரு சில நாள்களில் அறிவிக்கப்பட்ட நிலையில், நிச்சயம் மருத்துவப் படிப்பு எனும் கனவு கைகூடும் என நம்பிகையுடன் காத்திருந்திருக்கிறார் அசோக். ஆனால், குடும்ப வறுமை காரணமாக அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே நம்பி இருந்த அசோக்குக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு ஏதும் வரவில்லை. தற்போது முதற்கட்ட கலந்தாய்வில் மருத்துவ இடங்கள் நிரம்பிவிட்டதாக செய்தி வந்துள்ளது. அதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கொரோனா தொற்றால் தந்தையை இழந்து திக்குத்தெரியாமல் போராடும் அசோக்குக்கு நீட் தேர்வில் 505 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கவில்லையே என்கிற மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி
மருத்துவக் கல்வி

``இட ஒதுக்கீட்டுல என்னோட பிரிவுல 511 மார்க் வரைக்கும் சீட் கிடைச்சிருக்கு. வெறும் 6 மார்க்ல வாய்ப்பைத் தவறவிட்டுட்டேன். பல வருஷம் படிச்சது மட்டும் இல்லாம, அப்பாவும் இல்லாததால ரொம்பவே மன அழுத்தமா இருக்கு. முதலமைச்சரோட தனிப்பிரிவுக்கும் இது குறித்து மெயில் அனுப்பியிருக்கேன். அரசாங்கம் எனக்கு உதவிக்கரம் நீட்டணும்'' என எதிர்பார்ப்போடு பேசுகிறார் அசோக்.