Published:Updated:

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

சத்ய பால் மாலிக் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
சத்ய பால் மாலிக் - மோடி

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சமயத்தில், இரண்டு ஊழல் கோப்புகள் என்னிடம் அனுப்பிவைக்கப்பட்டன.

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சமயத்தில், இரண்டு ஊழல் கோப்புகள் என்னிடம் அனுப்பிவைக்கப்பட்டன.

Published:Updated:
சத்ய பால் மாலிக் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
சத்ய பால் மாலிக் - மோடி

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், எந்தவோர் ஆளுநரும் மத்திய அரசோடு மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் மட்டும் இதில் விதிவிலக்கு. மத்திய அரசை மட்டுமல்லாமல், பிரதமர் மோடியை விமர்சித்தும் கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார். சமீபத்தில், ``அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவப் பணியாற்றி, ஓய்வூதியமின்றி வெளியேறும் இளைஞர்களுக்கு, திருமண வரன்கள் அமையாது. அது இளைஞர்களின் நம்பிக்கை மீதான மோசடி’’ என்று அதிரடி காட்டினார் மாலிக். இது போன்று கடந்த காலங்களில் அவர் அதிரடித்தவற்றின் தொகுப்பு இங்கே...

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

* ``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து (ஆர்ட்டிக்கிள் 370) செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, தலைமைச் செயலாளர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, `சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, 1,000-த்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவார்கள்’ என்று கூறினார்.’’

* ``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சமயத்தில், இரண்டு ஊழல் கோப்புகள் என்னிடம் அனுப்பிவைக்கப்பட்டன. அம்பானி, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆகியோருடைய அந்த இரண்டு மோசடிக் கோப்புகளில் நான் கையெழுத்திட்டால், கோப்புக்கு தலா ரூ.150 கோடி தருவதாகக் கூறினார்கள். `ஐந்து குர்தாக்களுடன் இங்கு வந்தேன். அதை மட்டுமே இங்கிருந்து போகும்போது எடுத்துச் செல்வேன்’ என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டேன். அதனால்தான் இடம் மாற்றப்பட்டேன்.’’

* ``வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுங்கோபத்திலிருப்பதால், அவர்களைப் பார்க்க பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ., எம்.பி-க்களுக்குத் துணிச்சல் இல்லை. 2022 (உ.பி) சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடையும். புதியவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்.’’

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

* ``மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதமளிக்க மறுக்கிறது. காரணம், மோடியின் நண்பர்களில் ஒருவர், மூன்று வேளாண் சட்டங்களும் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே பானிபட்டில் 50 ஏக்கரில் குடோன் ஒன்று அமைத்துவிட்டார். அவர், குறைந்த விலையில் பயிர்களை வாங்கி அதிக விலைக்கு விற்க நினைக்கிறார்.’’

* ``பா.ஜ.க-விலுள்ள நண்பர்கள் சிலர், `மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டால், உங்களுக்குக் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கும்’ என்றார்கள். ஆனால், `நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான். ஆளுநர், குடியரசுத் தலைவர் பதவிகளெல்லாம் ஒன்றுமே இல்லை’ என்று சொல்லி நிராகரித்துவிட்டேன்.’’

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

* ``கொரோனா பேரிடர் சமயத்தில், கோவா பா.ஜ.க அரசு செய்த எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் அதிகரித்திருந்தது. பல திட்டங்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து மேகாலயாவுக்கு இடம் மாற்றப்பட்டேன்.’’

* ``பிரதமர் மோடி திமிர்பிடித்தவர். நான் அவரிடம், `விவசாயிகள் போராட்டத்தில் 500 பேர் இறந்துவிட்டார்கள்’ என்றேன். அதற்கு அவர், `அவர்கள் என்ன எனக்காகவா இறந்தார்கள்?’ என்று கேட்டார். `நீங்கள்தானே இந்தியாவின் பிரதமர்?’ என்று கேட்டு வாக்குவாதம் செய்தேன். `இது பற்றி அமித் ஷாவிடம் பேசுங்கள்’ என்றார். அமித் ஷா, `அவர் ஏதோ பேசிவிட்டார் விட்டுவிடுங்கள்’ என்றார்.’’ (இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையிலெடுக்க, அடுத்த நாளே மோடி பற்றி நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று பேச்சை மாற்றிவிட்டார்.)

கலகக்குரல் எழுப்பும் மேகாலயா ஆளுநர்!

யார் இந்த சத்ய பால் மாலிக்?

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த சத்ய பால் மாலிக், கல்லூரியில் பயின்ற காலத்தில் ஒரு சோஷலிஸ்ட் செயற்பாட்டாளராக அறியப்பட்டார். விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்ததன் மூலம், மேற்கு உ.பி-யில் செல்வாக்கு பெற்ற தலைவரானார். 1974-ல் பாரதிய கிராந்தி தளம் கட்சியில் இணைந்தவர், 1975-ல் லோக் தளம் கட்சியில் சேர்ந்தார். 1984-ல் காங்கிரஸில் இணைந்து, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார். போஃபர்ஸ் ஊழல் வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு, காங்கிரஸிலிருந்தும் விலகினார். பின்னர், `ஜன் மோர்ச்சா’ என்ற கட்சியைத் தொடங்கி, அதை ஜனதா தளம் கட்சியுடன் இணைத்தார். வி.பி.சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். இதையடுத்து சமாஜ்வாடி கட்சியில் சில காலம் இருந்தவர், 2004-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். 2017-ம் ஆண்டு பீகாரின் ஆளுநராக்கப்படும் வரை பா.ஜ.க-வில்தான் செயல்பட்டுவந்தார் மாலிக். பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், கோவா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர், தற்போது மேகாலயாவின் ஆளுநராக இருந்துவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகவும், இவ்வளவு வெளிப்படையாகவும் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுவருகிறார் சத்ய பால் மாலிக். அரசுடன் முரண்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதுபோல, மாலிக்கை மாநிலம்விட்டு மாநிலம் மாற்றுகிறார்களே தவிர, வேறெந்த எதிர்க் கருத்தோ, நடவடிக்கையோ பா.ஜ.க தரப்பிலிருந்து எடுக்கப்படாதது ஆச்சர்யமாகவும் மர்மமாகவுமே இருக்கிறது!