Published:Updated:

பாஜக அரசு மீதான மேகாலயா ஆளுநரின் ஊழல் குற்றச்சாட்டு! - கோவா தேர்தலில் எதிரொலிக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளுநர் சத்ய பால் மாலிக் - முதல்வர் பிரமோத் சாவந்த்
ஆளுநர் சத்ய பால் மாலிக் - முதல்வர் பிரமோத் சாவந்த்

கொரோனா காலகட்டத்தில் கோவா அரசு ஊழல் செய்ததாக அந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கூறியிருப்பது, அந்த மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டு:

தற்போது மேகாலயா மாநில ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் இதற்கு முன்பு, பீகார், ஒடிசா, ஜம்மு காஷ்மீரின் ஆளுநராகவும், கோவா மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்திருந்த பேட்டியில், அவர் கூறிய விஷயம் பாஜக-வில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Twitter

``ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நேரத்தில், என்னிடம் சில முக்கியமான கோப்புகளை அழித்துவிடச் சொன்னார்கள். ஆனால், அதை நான் செய்ய மறுத்துவிட்டேன். அதோடு, பாஜக-வோடு நெருக்கமான சில முக்கிய நபர்களின் கோப்புகளுக்கு அனுமதி வழங்கவும் 300 கோடி ரூபாய் வழங்க பேரம் பேசப்பட்டது. அந்த வேலைகளை நான் செய்யவில்லை. இதனால், அங்கிருந்து நான் கோவாவுக்கு மாற்றப்பட்டேன்" என்று கூறியிருந்தார்.

மேலும், ``கோவாவின் ஆளுநராக இருந்த நேரத்தில், அங்கு நடைபெறும் பாஜக அரசில் அரங்கேறிய ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்பினேன். கொரோனா பேரிடர் சமயத்தில், அந்த அரசு செய்த எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் அதிகரித்திருந்தது. பல திட்டங்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன. இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து நான் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டேன்" என்று பேசியிருந்தார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநரே, பாஜக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருப்பது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்ய பால் மாலிக்
சத்ய பால் மாலிக்
Twitter

யார் இந்த சத்ய பால் மாலிக்?!

காங்கிரஸ் உறுப்பினரான சத்ய பால் மாலிக், 1987-ம் ஆண்டு போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு எழுந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வி.பி.சிங்குடன் இணைந்தார். மேலும், வி.பி.சிங் அமைச்சரவையில், சுற்றுலா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தார். அதன் பின்னர், கடந்த 2004-ம் ஆண்டு, பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜக-வில் உத்தரப்பிரதேச துணைத் தலைவர் பதவி தொடங்கி, தேசிய அளவில் பல்வேறு முக்கியப் பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாலிக், பாஜக-வின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பல தேர்தல் பிரசாரங்களிலும், மாநாடுகளிலும், பேரணிகளிலும் மாலிக் பேசியிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு பீகார் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் இவர் ஒடிசாவின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.

கோவா பொதுத்தேர்தல்:

அடுத்த ஆண்டு கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு இரண்டு முறையாக பாஜக தலைமையிலான அரசுதான் நடைபெற்றுவருகிறது. கடந்த தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரஸும், 13 தொகுதிகளை பாஜக-வும் கைப்பற்றின. இருந்தபோதிலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணிவைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. கொரோனா பேரிடரைக் கையாண்டவிதம் போன்ற பல்வேறு காரணங்களால் அங்கு நடைபெறும் பாஜக ஆட்சிமீது அதிருப்தி சூழல் நிலவுகிறது.

தேசிய அரசியல் களத்தில் மம்தா; பாதிப்பு பாஜக-வுக்கா, காங்கிரஸுக்கா? - ஒரு பார்வை

இந்த நிலையில், முன்னாள் ஆளுநரின் ஊழல் குற்றச்சாட்டு, நடைபெறும் பாஜக அரசுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக-விலிருந்த, பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஆளுநர், பாஜக அரசின்மீது ஊழல் புகார் கூறியிருக்கிறார். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், முதல்வர் பிரமோத் சாவந்த் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. கோவாவில் பெரிய கட்சியான காங்கிரஸிலும் பல்வேறு உட்கட்சிப் பூசல் நிலவுகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அந்த உட்கட்சிப் பூசலைச் சரிசெய்யும் வேலையில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க, காங்கிரஸ் கட்சியினர் இப்போதிலிருந்தே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். அதேநேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோவாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு காரணங்கள் வரும் கோவா சட்டமன்றத் தேர்தல் பாஜக-வுக்கு எதிராக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு