தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பா.ஜ.க அரசு, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019-ல் ஆட்சிக்கு வந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அதோடு மாநிலத்தையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதுமுதல் தற்போது வரை அங்கு இன்னும் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அங்கிருக்கும் மாநிலக் கட்சிகளும், `சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும்’ என வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, `ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்' எனக் கூறியிருக்கிறார்.
நேற்றைய தினம் ஊடகத்திடம் பேசிய மெகபூபா முஃப்தி, ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தால், தங்களின் மறைமுக அஜண்டாவைத் தொடர முடியாது என மத்திய அரசு அச்சத்திலிருக்கிறது. இதன் காரணமாகவே இங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவில்லை. எனவே, ஜம்மு - காஷ்மீரில் அரசியலமைப்பின் பிரிவு 370-ஐ மீட்டெடுக்கும் வரை, சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.

முன்பு சட்டமன்ற உறுப்பினராக நான் பதவியேற்றுக்கொண்டபோது அது இந்திய அரசியலமைப்பு, ஜம்மு - காஷ்மீர் அரசியலமைப்பு ஆகியவற்றின்கீழ் இருந்தது. அதோடு, ஒரே நேரத்தில் இரண்டு கொடிகள் இருந்தன. என்னுடைய இந்த முடிவு முட்டாள்தனமானதாகத் தோன்றலாம், ஆனால், இது எனக்கு உணர்வுரீதியான பிரச்னை" என்று கூறினார்.